search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித கழிவு மேலாண்மை திட்டம்"

    • எங்கள் பஞ்சாயத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்களின் வசதிக்காகவும், சிறுவர்களின் வசதிக்காகவும் சுமார் 1 1/2 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஊராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மனித கழிவு மேலாண்மை திட்டம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த திட்டம் காற்று மாசுபாடு, நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அதனை கைவிட வலியுறுத்தி பஞ்சாயத்து தலைவர் வின்சி மணியரசு தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மக்கள், கலெக்டர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், எங்கள் பஞ்சாயத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியின் வடக்கு பகுதியில் கூடங்குளம் கிராம குடிநீர் ஆதாரம், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பொது மருத்துவமனை, அணுமின் நிலைய நிர்வாகம் அமைத்த அணுசங்கமம், வழிபாட்டு தலங்கள், விவசாய விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளது.

    கூடங்குளம் கிராமத்தின் பொதுமக்களின் வசதிக்காகவும், சிறுவர்களின் வசதிக்காகவும் சுமார் 1 1/2 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மனித கழிவு மேலாண்மை திட்டத்தின் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் வசதி பெறும் பகுதியாகவும் அதிகம் பேர் வசிக்கும் பகுதியாகவும் இருந்து வருகிறது.

    கிராம ஊராட்சியான கூடங்குளம் பகுதியில் மனிதக் கழிவுகள் அதிக அளவு சேராத நிலையில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளை கூடங்குளம் பகுதிக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இது முறையானது அல்ல.

    இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ஏற்படும் சூழல் உருவாகி கூடங்குளம் பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மனிதக் கழிவு மேலாண்மை மையத்தை கூடங்குளம் ஊராட்சியில் அமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

    அதையும் மீறி ஒப்பந்தம் கோரும் பணிகள் நடந்தால் வியாபரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தவும் பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று அறிவித்தபடி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இதன் காரணமாக கூடங்குளத்தில் பஜார் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இயக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை.

    ×