என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்"

    • நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    • 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

    பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.

    விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
    • 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவதலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் காலை 5.30மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 6.15மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார்.

    அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 25-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

    • பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
    • 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

    திருச்சி:

    108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.

    மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.

    மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.


    இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.

    இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.

    அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.

    சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

    விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
    • ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

    ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

    (1) பெரிய கோவில்

    (2) பெரிய பெருமாள்

    (3) பெரிய பிராட்டியார்

    (4) பெரிய கருடன்

    (5) பெரியவசரம்

    (6) பெரிய திருமதில்

    (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்

    ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்

    (1) ஸ்ரீதேவி

    (2) பூதேவி

    (3) துலுக்க நாச்சியார்

    (4) சேரகுலவல்லி நாச்சியார்

    (5) கமலவல்லி நாச்சியார்

    (6) கோதை நாச்சியார்

    (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.


    ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

    (1) விருப்பன் திருநாள்

    (2) வசந்த உத்சவம்

    (3) விஜயதசமி

    (4) வேடுபரி

    (5) பூபதி திருநாள்

    (6) பாரிவேட்டை

    (7) ஆதி பிரம்மோத்சவம்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.

    (1) சித்திரை

    (2) வைகாசி

    (3) ஆடி

    (4) புரட்டாசி

    (5) தை

    (6) மாசி

    (7) பங்குனி.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார்.

    (1) சித்திரை

    (2) வைகாசி

    (3) ஆவணி

    (4) ஐப்பசி

    (5) தை

    (6) மாசி

    (7) பங்குனி.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

    தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

    ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும். இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

    ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.

    (1) கோடை உத்சவம்

    (2) வசந்த உத்சவம்

    (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை

    (4) நவராத்ரி

    (5) ஊஞ்சல் உத்சவம்

    (6) அத்யயநோத்சவம்

    (7) பங்குனி உத்திரம்.

    பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

    (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்

    (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்

    (3) குலசேகர ஆழ்வார்

    (4) திருப்பாணாழ்வார்

    (5) தொண்டரடிபொடி ஆழ்வார்

    (6) திருமழிசை ஆழ்வார்

    (7) பெரியாழ்வார், ஆண்டாள்

    இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.

    (1) நாழிகேட்டான் கோபுரம்

    (2) ஆர்யபடால் கோபுரம்

    (3) கார்த்திகை கோபுரம்

    (4) ரெங்கா ரெங்கா கோபுரம்

    (5) தெற்கு கட்டை கோபுரம்-I

    (6) தெற்கு கட்டை கோபுரம்-II

    (7) ராஜகோபுரம்.

    ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம்

    (2) சங்கராந்தி

    (3) பாரிவேட்டை

    (4) அத்யயநோத்சவம்

    (5) பவித்ரா உத்சவம்

    (6) உஞ்சல் உத்சவம்

    (7) கோடை உத்சவம்.

    ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.

    (1) பூச்சாண்டி சேவை

    (2) கற்பூர படியேற்ற சேவை

    (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை

    (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்

    (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை

    (6) தாயார் திருவடி சேவை

    (7) ஜாலி சாலி அலங்காரம்.

    திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்.

    (1) நவராத்ரி மண்டபம்

    (2) கருத்துரை மண்டபம்

    (3) சங்கராந்தி மண்டபம்

    (4) பாரிவேட்டை மண்டபம்

    (5) சேஷராயர் மண்டபம்

    (6) சேர்த்தி மண்டபம்

    (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

    திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

    திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது.

    (1) ராமானுஜர்

    (2) பிள்ளை லோகாச்சாரியார்

    (3) திருக்கச்சி நம்பி

    (4) கூரத்தாழ்வான்

    (5) வேதாந்த தேசிகர்

    (6) நாதமுனி

    (7) பெரியவாச்சான் பிள்ளை


    சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.

    (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம்

    (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம்,

    (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம்,

    (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம்,

    (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம்,

    (6) பூபதி திருநாள் தை மாதம்,

    (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

    நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள்

    (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை

    (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை

    (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை

    (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை

    (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை

    (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை

    (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

    மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

    கற்பக விருட்சம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாகனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

    ×