என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல்"
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத்- மும்பை அணிகள் மோதின.
- இந்த போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் நடுவே நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. கடந்த 12-ந் தேதி ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாசியவுடன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக்காட்டி தனது சதத்தை கொண்டாடினார். அவர் அனைத்து போட்டியிலும் அதனை எடுத்து வந்ததாகவும் இந்த போட்டியில் தான் அதனை எடுத்துகாட்டியதாகவும் சக அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் சூர்யகுமார் யாதவ், இன்னைக்கு என்னடா எழுதி கொண்டு வந்திருக்க என்பது போல அவர் பாக்கெட்டை சோதனையிட்டார். ஆனால் அவர் பாக்கெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. உடனே இருவரும் சிரித்தப்படி கடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
- இந்த போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக வான்கடே மைதானத்தில் 19 சிக்சர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் (85) உள்ளார்.
ஒரு மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட சிக்சர்களை பறக்கவிட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி (130 சிக்சர்) முதல் இடத்தில் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
அதே மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 127 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் ஏபி டிவில்லியர்ஸ் 118 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.
மேலும் ஒரு அணிக்காக 250 -க்கும் அதிகமாக சிக்சர் விளாசிய 6-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். அந்த பட்டியலின் முதல் இடத்தில் விராட் (296), கெய்ல் (263), பொல்லார்ட் (258), தோனி (256), ரோகித் (251) ஆகியோர் உள்ளனர்.
- 5 முறை சாம்பியனான மும்பை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் செயல்படவில்லை.
- முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் செயல்படவில்லை. இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (கொல்கத்தா, டெல்லி அணிக்கு எதிராக), 4 தோல்வி (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த மும்பை 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2 ஆட்டங்களில் உதை வாங்கிய அந்த அணி முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 205 ரன்கள் குவித்த மும்பை அணி 193 ரன்னில் டெல்லியை ஆல்-அவுட் செய்து வெற்றியை வசப்படுத்தியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (239 ரன்), திலக் வர்மா (210 ரன்) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். திலக் வர்மா கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசியுள்ளார். ரையான் ரிக்கெல்டன், நமன் திர் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தடுமாறுகிறார். அவர் 5 ஆட்டங்களில் ஆடி 56 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் கால்பதித்த சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தி கலக்கினார். காயத்தில் இருந்து திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முந்தைய இரு ஆட்டங்களில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். அவர் பழைய நிலைக்கு திரும்புவதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. 6 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 4 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. வெற்றியோடு தொடங்கிய ஐதராபாத் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதுவும் 246 ரன் இலக்கை ஐதராபாத் 9 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமிக்க வைத்தது. அபிஷேக் ஷர்மா (55 பந்தில் 141 ரன்), டிராவிஸ் ஹெட் (66 ரன்) அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஐதராபாத் அணியின் பலமே பேட்டிங் தான். டிராவிஸ் ஹெட் (214 ரன்), அபிஷேக் ஷர்மா (192), இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி என்று தடாலடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான். மாறாக விரைவில் நடையை கட்டினால் அது எதிரணிக்கு கொண்டாட்டமாக மாறிவிடும். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி நம்பிக்கை அளிக்கிறார்கள். இருப்பினும் பந்து வீச்சில் கணிசமாக ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் களம் காண்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரோகித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ் அல்லது கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா அல்லது விக்னேஷ் புத்தூர்.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை.
- இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணி 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. பரபரப்பாக சென்ற போட்டியில் அடுத்த 33 ரன்கள் எடுப்பதற்குள் மீதி 7 விக்கெட்டுகளையுமே கொல்கத்தா அணி இழந்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் எனக்கு 50 வயதாகிறது என்றும் இதுபோன்ற பரபரப்பான போட்டியை தவிர்க்க வேண்டும் என பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனது இதய துடிப்பு அதிகமாகவே உள்ளது. எனக்கு 50 வயது ஆகிறது. இது போன்ற பரபரப்பான ஆட்டத்தை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற குறைந்த இலக்கு கடினமானதாக இருக்கும் என வீரர்களிடம் 2-வது இன்னிங்சிஸ் தொடங்கும் முன்பே கூறினேன்.
பிட்ச் எளிதாக விளையாட கூடிய அளவில் இல்லை என்பதை போட்டியின் மூலம் தெரிந்திருக்கும். சாஹல் அபாரமாக பந்து வீசி வருகிறார். சாஹலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. போட்டிக்கு முன்பு தனியாக அவரிடம் உன்னாள் விளையாட முடியுமா என கேட்டேன். என்னால் முடியும். என்னை விளையாட விடுங்கள் என கூறினார்.
எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் சாட் தேர்வு மோசமாக அமைந்திருக்கிறது. எங்கள் வீரர்கள் களத்தில் நல்ல எனர்ஜியுடன் செயல்பட்டார்கள்.
நாங்கள் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும், அது விறுவிறுப்பான போட்டியாக தான் அமைந்திருக்கும். இது நிச்சயம் இந்த சீசனில் மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. எங்கள் அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நான் ஐபிஎல் போட்டிகளில் பல போட்டிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் இதுதான் சிறந்த வெற்றியாக நான் கருதுகிறேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.
- ரவி பிஷ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.
- அவருக்கு ரிஷப் பண்ட் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 14-ம் தேதி லக்னோ- சென்னை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் கேப்டன் தோனி 26 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
இந்த போட்டியில் டெத் ஓவரில் ரவி பிஷ்னோயை பயன்படுத்தாதது தான் லக்னோவின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தெரிவித்தனர்.
அந்தப் போட்டியில் ரவி பிஸ்னோய் தனது முதல் 3 ஓவரில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அவருக்கு லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டெத் ஓவரில் வாய்ப்பு வழங்காமல் ஷர்துல் தாக்கூருக்கு ஓவரை கொடுத்தார்.
இந்நிலையில் நீ கடைசி வரை பேட்டிங் செய்தால் ரவி பிஷ்னோய் பவுலிங் செய்ய வரமாட்டார் என்று தோனி கூறியதாக துபே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மஹி பாய் சில விஷயங்களை என்னிடம் சொன்னார். குறிப்பாக பிஸ்னோய்க்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறது. எனவே நீ கடைசி வரை விளையாடினால் பிஷ்னோய் பந்து வீச வர மாட்டார் என்று தோனி என்னிடம் சொன்னார். மறுபுறம் தோனி வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அதைப் பயன்படுத்தி நான் விளையாடினேன்.
என்று துபே கூறினார்.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
- லக்னோ அணி தனது அடுத்த போட்டியில் ராஜன்ஸ்தான் அணியுடம் மோதவுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த 3 இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன. எதிர்வரும் போட்டிகளில் முடிவில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலின் டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த லக்னோ சென்னை அணியுடனான தோல்வியின் மூலம் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 போட்டிகளில் 4 வெற்றி 3 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமல் இருந்து வந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளார். எதிர்வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மயங்க் யாதவ் அணியில் இணைந்ததை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளது.
- ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம்.
- தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர்.
இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேசிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
என்று ரகானே கூறினார்.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.

இதற்கு முன்பு சென்னை அணி 2009-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்னை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும். அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் முறியடித்தது.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின.
- பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசண்டிகர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 95 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யசுவேந்திர சாஹல். அவர் 4 ஓவர் வீசி 28 ரன் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சாஹல் 8-வது முறையாக 4 விக்கெட்டை தொட்டுள்ளார். இதன் மூலம் அவர் சுனில் நரைன் சாதனையை சமன் செய்தார். சுனில் நரைன் 8 தடவை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக மலிங்கா 7 தடவையும், ரபடா 6 முறையும் 4 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை புரிந்தார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக 36 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 35 விக்கெட் (பஞ்சாப்புக்கு எதிராக) வீழ்த்தி இருந்தார்.
- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி வீறுநடை போட்ட டெல்லி அணி, சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்தது.
மும்பைக்கு எதிராக 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு கட்டத்தில் (11.3 ஓவரில்) 2 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு வேகமாக விக்கெட்டுகளை இழந்து 193 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆகி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரர் பிராசர் மெக்குர்க் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக பிளிஸ்சிஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார் கைகொடுக்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 4 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் தோல்வி, அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி, அதற்கு அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வி என்று நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வலுசேர்க்கின்றனர்.
மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15-ல் ராஜஸ்தானும், 14-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக சுனில் நரைன் விளையாடி வந்தார்.
- நரைனிடம் இருந்த பேட்டிங் திறமையை கொல்கத்தா அணி கண்டுபிடித்தது.
ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பியது.
இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சீனில் நரேன் அதிரடியாக ரன்களை குவித்து கொல்கத்தா அணியில் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் அவரது பேட்டிங் அணிக்கு கைகொடுக்கத்தால் அவர் நடுவரிசையிலும் பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டார்.
அவ்வகையில் ஐபிஎல் தொடரில் சுனில் நரேன், 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் பேட்டிங் செய்துள்ளார்.
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.