search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மினி பஸ்கள்"

    • சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
    • விழாக் காலங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் மினி பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தமிழக அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் இல்லாத வகையில் சென்னையில் தனியார் மினி பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சென்னையில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பஸ்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; அவற்றில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதன் மூலம் பொது போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்து, சென்னையில் மகிழுந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்;

    அதன் வாயிலாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். இதை நோக்கி அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதாகும்.

    ஆனால், மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையில் ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஏற்கனவே, சென்னையில் தனியார் மூலம் மாநகரப் பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தனியார் மினி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதை, போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

    போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனரின் எதிர்ப்பையும் மீறி தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?

    எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால், சென்னையில் தனியார் மினி பஸ்கள் பிப்ரவரி மாதம் முதல் இயக்கப்படும் என்று, அந்த மாதம் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வருகிறது என்றால், அதற்கான முன்னேற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டன, தனியார் மினி பஸ்களை இயக்க யார், யாருக்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது? மினி பஸ்களை இயக்குவதற்கான உரிமங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன? அதற்கான பொது அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டனவா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. அவை அனைத்திற்கும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    சென்னையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மினி பஸ்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக இப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவேளை சென்னையில் தனியார் பஸ்களை இயக்குவதற்கான உரிமங்கள் எற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு உரிமங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும். அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்கு தொடரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • தனியார் மினி பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி

    சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் சார்பில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதன் காரணமாக கருத்து கேட்பு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

    கருத்துக்கேட்பு அடிப்படையில் முதலமைச்சரின் ஒப்புதலின் படி சில மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் சென்னை புறநகர் பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் சேவைக்காக தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கி உள்ளது.

    ×