என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி நகை மோசடி"

    • 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.

    மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×