என் மலர்
நீங்கள் தேடியது "சீமான்"
- தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.
இதனால் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்று பிரதான கட்சியுடன் அந்த கட்சி நேரடி மோதலில் ஈடுபட்டது இல்லை. தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போட்டியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் தி.மு.க. வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்பர பரப்பின்றியே காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதன் மூலமாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லாததாலும் தி.மு.க. வேட்பாளரை இதுவரை இல்லாத வகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தி.மு.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது போன்று யாரும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் உள்ளூர் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும்.
- தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும்.
சென்னை:
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அவதூறாக பேசி வன்முறையை தூண்டியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே, விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அடுத்தவரை எரிச்சலூட்டும் விதமாகப் பேசுவதுதான் சீமானின் வழக்கமாக உள்ளது. அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும். தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினால்தான் நிதானம் வரும். வன்முறை தூண்டும் வகையில் பேசக்கூடாது என சீமானுக்கு அறிவுரை வழங்குமாறு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நிராகரித்ததுடன், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது. குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
- பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
- திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரன்பிற்குரிய உறவுகளுக்கு..!
வணக்கம்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் அமைந்துள்ள தமிழர் மலையாம் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதில் இரு சமயங்களை பின்பற்றும் தமிழ் மக்களிடம் தற்போது உருவாகியுள்ள குழப்பங்களும், பூசல்களும் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெற்று வந்த வழிபாட்டில் திடீரென முரண்பாடுகள் தோன்ற இடமளித்திருப்பது வருத்தத்திற்குரிய கெடுநிகழ்வாகும்.
மதநல்லிணக்கத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் மதப்பூசல்களை உருவாக்க முனையும் மதவாத அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு இனமானத் தமிழர்கள் ஒருபோதும் இடம்கொடுக்கக்கூடாது. ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகக் காலங்காலமாக இம்மண்ணில் நீடித்து நிலைத்து வாழும் தமிழர்கள் நாம்; ஒற்றுமையே நம்முடைய பலமென்பதை உணர்ந்து நிற்க வேண்டும். நம்மிடையே நிலவும் மாசற்ற பேரன்பையும், சகோதரத்துவத்தையும், சமய நல்லிணக்க உணர்வையும் ஒருபோதும் இழக்காது, மதவாதச் சக்திகளின் சதிகளை முறியடிக்க ஓர்மையோடு களத்தில் நிற்க வேண்டியது பேரவசியமாகும்.
குடமுழுக்கு நிகழ்வுகளுக்கு இசுலாமியச் சொந்தங்கள் வரவேற்றுப் பதாகைகள் வைப்பதும், கோவிலுக்கு வருவோருக்கு நீராகாரம் அளித்து உபசரிப்பதும், தர்கா, தேவாலயங்களின் நிகழ்வுகளுக்கு மற்ற சமயத்தவர் சென்று வழிபாடு செய்வதும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கப்பாட்டுக்கான சான்றுகளாகும். அதனைக் குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டு வாக்குவேட்டையாட முற்படும் மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவையாகும்.
பல நூறு ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இரு சமயத்தவரும் சிறுமுரணுக்கும் இடங்கொடாது வழிபாடும், தொழுகையும் நடத்தி வரும் நிலையில், இப்போது தேவையற்ற பதற்றம் எப்படி உருவானது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது? பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு? மண்ணின் நலனுக்காக மக்களோடு இணைந்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதோடு, நீதிமன்றத்தில் கடும் வாதங்களை வைத்து அனுமதியைப் பெறாவண்ணம் தடுக்கும் திமுக அரசு, பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளின் ஒன்றுகூடலுக்கு மட்டும் வழியமைத்தது ஏன்? தொடக்க நிலையிலேயே, கூடுதல் கவனம் செலுத்தி, இரு தரப்பையும் கலந்தாலோசித்து ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தால், இப்படியான பதற்றச்சூழல் உருவாகியிருக்குமா? சிக்கலைப் பெரிதாக்கி, பாஜகவை முழுவதுமாக அரசியல் செய்யவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!
'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என இன்றைக்குப் போராடுகிற பெருமக்களே! தமிழர் நிலமெங்கும் இருக்கும் குன்றுகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டித் தகர்த்து, கனிமவளங்களைச் சூறையாடும்போது எங்கே போனீர்கள்? அவற்றையெல்லாம. காக்க ஏன் வீதிக்கு வந்து போராடவில்லை? இம்மலை மீது வரும் பற்றும், பக்தியும் அந்த மலைகள் மீதும், குன்றுகள் மீதும் வராதது ஏன்?
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் நம் மண்ணில் உள்ள மலைகளை குடைந்து கனிம வளங்களை கடத்துவதை எதிர்த்து நாங்கள் போராடும்போது நீங்கள் எதுவும் பேசாது கடந்து சென்றது ஏன்? மலைகளை காக்க வேண்டும் என்ற எங்களின் உரிமைக்குரல் அப்போதெல்லாம் உங்கள் செவிகளில் விழாமல் போனது ஏன்?
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவுக்கும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வுக்கும் இலட்சக்கணக்கான மக்கள் மதத்தைக் கடந்து ஒற்றுமையோடு கூடிக் குலவும்போது, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே நடந்தேறி வந்த வழிபாட்டை இவ்வளவு பெரிய முரணாக மாற்றி, சிக்கலாக உருவாக்கப்படுவதென்பது ஆளும் திமுக அரசின் துணையின்றி நடக்க வாய்ப்பில்லை. இருதரப்புக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க மக்கள் பிரதிநிதிகளின் ஒரு சார்பான பேச்சும், பிரச்சினை மேலும் சிக்கலாக வழிவகுத்தது. அதனையே தற்போது மதவாதச் சக்திகள் பயன்படுத்திக்கொள்ளவும் வாசல் திறந்து விட்டுள்ளது. மொத்தத்தில், திமுக அரசு கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததுதான் மதுரை மக்களிடையே பதற்றம் ஏற்பட முழுமுதற் காரணமாகும்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்கிறது திருக்குரான்! 'உன் மதம் பெரிது வழிபடு! என் மதமும் பெரிது வழிவிடு' என்பதுதான் காலங்காலமாக தமிழர் மண் கடைபிடித்து வரும் மாந்தநேயமிக்க சமயப்பொறையாகும்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் என்பது தமிழர் சொல் வழக்கு; அன்று தம் சீடர்க்கெல்லாம் அறிவுரை கூற எண்ணி மன்றினை தொடங்கிய இயேசு பிரான் கல்வாரி குன்றின் மேல் ஏறி நின்றே கொடைக்கரம் விரித்து நீட்டியே அருள்நெறி பொழிந்தார்;
நபி பெருமானருக்கு ஹிரா மலையின் மீதே புனித குரான் அருளப்பட்டது; கிருஷ்ண பரமாத்மாவிற்கு கோவர்த்தன மலை, சிவபெருமானுக்கு கயிலை மலை, பார்வதிக்கு பர்வதமலை என எல்லா சமயங்களும் இறைவனோடு இயற்கையை பொருத்தியே போற்றுகிறது. வழிபாடு என்பதே பேரன்பு வெளிச்சத்தின் வெளிப்பாடாகும். எனவே, வழிபாட்டை வைத்து வன்முறைகளை உருவாக்கி மதவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்ற முயல்பவர்களுக்கு தமிழர் மண்ணும், மக்களும் ஒருபோதும் இடமளித்திடக்கூடாது.
இந்திய பெருநிலம் முழுவதும் மதக்கலவரங்கள் நிகழ்ந்து பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு, நாடே நரகமான கொடும் நாட்களிலும்கூட தமிழர் நிலம் மட்டும் தம் பல்லாயிரம் ஆண்டு பழமையான பண்பாட்டு முதிர்ச்சியாலும், மானுட நேயத்தாலும் மதமோதல் நிகழாமல் அமைதி காத்து உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது.
ஆகவே, என் உயிர் தமிழ்ச்சொந்தங்கள் ஒரு மொழி பேசி, ஒரு மண்ணில் பிறந்து, ஒரு தாய் வயிற்று மக்களாக வாழும் நாம், நமக்குள் வலிந்து திணிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சிக்கலையும் நாமே பேசி நமக்குள் தீர்த்துகொள்ள முடியும். இருபுறமும் உள்ள சமயப்பெரியவர்கள் அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!
திருப்பரங்குன்றம் மலையானது தமிழ் மக்கள்
அனைவருக்கும் உரித்தானது என்ற உண்மையை
ஒற்றுமையுடன் உரத்துச்சொல்வோம்!
தமிழர் நிலம் எந்த காலத்திலும்
மதப்பூசல் எழ இடமளிக்காது என்பதை
உலகிற்கு உணர்த்துவோம்!!!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
- கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பெரியார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, உன் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.
நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்று பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று இது குறித்து சம்மன் அளித்தனர். அதில் வியாழக்கிழமை (இன்று) கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று சீமான் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம் சீமானின் கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை அதிகாரி விஜயன் பெற்றுக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுகுறித்து சீமான் வக்கீல் நன்மாறன் நிருபர்களிடம் கூறும்போது, புகார் கொடுத்தவர் யார்? எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இது மட்டுமின்றி சீமான் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உரிய உத்தரவு கிடைக்க பெற்றவுடன் விசாரணைக்கு சீமான் ஆஜராவார் என்றும் கூறினார்.