என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Govt"

    • தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.

    மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.

    இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.

    அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.

    பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.

    பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது.
    • நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

    குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் அரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

    தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

    நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
    • நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×