என் மலர்
நீங்கள் தேடியது "Periyar Dam"
- தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
- உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அணை பராமரிப்புப் பணிகள் முழுவதும் தமிழக நீர்வளத்துறை செய்து வருகிறது.
அணையில் வழக்கமாக நடைபெறும் பராமரிப்புப் பணிகளுக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் கேளர அரசின் தடையால் கடந்த 7 மாதங்களாக அணையில் பராமரிப்புப் பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை. 2024 டிச.4-ல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக நீர்வளத்துறை சார்பில் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை கொண்டு சென்றனர்.
வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழகப் பகுதியில் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 15 நாட்களுக்கு பின் தளவாடப்பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் லாரிகளில் கொண்டு சேர்த்தபின் தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
அணையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், ஆய்வாளர் குடியிருப்புகளில் மட்டும் பராமரிப்பு பணிகள் செய்த போதிலும் மெயின் அணை உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித பணியும் செய்ய அனுமதிக்கவில்லை.
குறிப்பாக பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கும் இதுவரை அனுமதி இல்லை. இது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் கூறும்போது:-
தற்போது அணையை ஒட்டி அமைந்துள்ள ஆய்வாளர் மாளிகை மற்றும் குடியிருப்புகளில் கழிவு நீர் தொட்டியை பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேபி அணைப்பகுதியில் செய்ய வேண்டிய 14 வேலைக்கான அனுமதியை தருவதில் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.
பேபி அணையை விரைவில் பலப்படுத்திய பின் அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும்.
- ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை புதிய கண்காணி ப்புக்குழுவில் கேரள பொறியாளர்கள் 2 பேர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடத்த பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய கண்காணிப்புக்குழு கலைக்கப்பட்டு புதிய கண்காணிப்புக்குழு தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய கண்காணிப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள கேரள நீர் பாசனத்துறை பொறியாளர்களை நீக்க வேண்டும் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நீக்காவிட்டால் வருகிற 25-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-
மத்திய அரசு முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க புதிய தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் கேரள நீர் பாசனத்துறையைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் இந்திய அறிவியல் கழகம் சார்பில் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும். மேலும் ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் புதிய கண்காணிப்புக்குழுவில் கேரள பொறியாளர் இடம்பெற முடியும்? இதனை தமிழக விவசாயிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இடத்தில் வரும் காலங்களில் எந்த ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றாலும் கேரள அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே குழுவின் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் மட்டும் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 25-ந் தேதி விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.
- 7-ந்தேதி குழு ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் தற்போது 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கு 7-ந்தேதி குழு ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் தற்போது 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும். மழை நேரங்களில் தரைப்பாதையில் வல்லக்கடவு வழியாக அணைப்பகுதிக்கு செல்ல முடியாது. எனவே தமிழக படகுகளை தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும். அணை குறித்து கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந்தேதி கம்பத்தில் இருந்து குமுளிக்கு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.