என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகளின் பிடிவாதம்"

    • குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
    • பிறர் முன்பு திட்டுவது குழந்தைகளின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

    குழந்தைகள் எத்தகைய குணாதிசயம், சுபாவம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதை பெற்றோரின் வளர்ப்புமுறைதான் தீர்மானிக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை பாதை கட்டமைக்கப்படுகிறது.

    சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்பில் தென்படும் குறைபாடுகளே காரணமாக அமையும். அவை குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.


    குழந்தைகளை பாராட்டுவதில்லை

    குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்படும்படி ஊக்குவிக்க வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    'தாம் சிறப்பாக செயல்படுகிறோம்' என்று அவர்களும் தங்களை பற்றி பெருமை கொள்வார்கள். அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. தாம் என்ன செய்தாலும் பெற்றோர் உற்சாகப்படுத்தமாட்டார்கள் என்ற மன நிலை பிள்ளைகளை ஆட்படுத்திவிடும்.

    பெற்றோர் தம்மை மதிப்பதில்லை என்ற மனநிலைக்கும் வந்துவிடுவார்கள். அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் ஊக்குவித்து கொண்டாட வேண்டும்.


    மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்

    பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும். பெற்றோரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் பிடிவாதம் கொண்டவர்களாக மாறுவதற்கு வித்திடக்கூடும்.

    பெற்றோர் உச்சரிக்கும் எந்த வார்த்தையும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்படி அமைந்துவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகள் எதுவானாலும் அவர்களிடமே நேருக்கு நேர் பேசி அதனை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாமல் கடுமையாக திட்டுவது மன ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர் என்ன செய்தாலும் தம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகி, வீண் பிடிவாதம் அவர்களுக்குள் எழ வழிவகுத்துவிடும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.

    தன் நண்பர்களோ, உறவுகளோ தவறு செய்திருந்தாலும் அதனை அவர்கள் மனம் புண்படாதபடி திருத்திக்கொள்வதற்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்.


    தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்

    எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

    திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது, 'நீ எது செய்தாலும் அது சிறப்பாக முடியாது' என்று மனம் நோகும்படி பேசுவது பெற்றோர் மீது தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தும்.

    நம் உணர்வுகளை பெற்றோர் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் பிள்ளைகளை பிடிவாத குணம் கொண்டவராக மாற்றக்கூடும்.


    அடிக்கடி தொந்தரவு செய்தல்

    பெற்றோர் ஏதேனும் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.

    ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, 'இப்படி செய்தால்தான் சரியாக இருக்கும்' என்று கருத்து கூறுவது, வேலையில் சிறு தவறு செய்தாலும் கண்டிப்பது போன்ற செயல்பாடுகள் பிள்ளைகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும்.

    அந்த வேலை மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடும். எப்போதும் நம்மை குறைசொல்வதுதான் பெற்றோரின் மன நிலையாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.

    அடுத்து பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    நன்றி சொல்லாமல் இருத்தல்

    பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.

    வயதில் சிறியவர்தானே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடத்தில் வெளிப்படக்கூடாது. நன்றி சொல்வதற்கு வயது பொருட்டல்ல.

    செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.

    அதைவிடுத்து 'இதெல்லாம் ஒரு வேலையா? இதை செய்ததற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?' என்ற மனப்பான்மை உருவாகுவதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது.


    ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்

    பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

    ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பின்னாளில் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும்.

    ×