search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் வடக்கு"

    • நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும்.
    • வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    அந்த வகையில் விழுப்புரம், நெல்லை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.

    மாமல்லபுரம் செல்லும் வழியில் வட நெம்மேலியில் உள்ள லீலாவதி ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் முதலில் கட்சி சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் இருந்தால் எழுதிக் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேபோல் கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆக்கப்பூர்வ கருத்துக்கள் இருந்தாலும் எழுதி சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்படி கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை மனுவாக எழுதி கூட்டத்தில் சமர்ப்பித்தனர்.

    இந்த மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவர் கொடுத்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

    இதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். கழக ஆட்சியில் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    இது போன்ற திட்டங்களை மக்கள் மத்தியில் நீங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். திண்னைப் பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் மூலமும் கழக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நமது நோக்கம் தேர்தல் வெற்றியை நோக்கி இருக்க வேண்டும். உங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். தலைமை என்ன கட்டளையிடுகிறேதா அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

    எனவே தேர்தலுக்காக இப்போதே தயாராகி உங்கள் பணிகளை வேகப்படுத்துங்கள். நமது இலக்கு 200 தொகுதிகள். அந்த வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக இப்போதில் இருந்தே தீவிரமாக பணியற்றுங்கள்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் என்று அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டக் கழக துணைச் செயலாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×