search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை"

    • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை
    • ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு கிளம்பியபோது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.

    இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை; ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே "உரிய மரியாதையுடன்" அதனை சொல்வார்கள்.

    ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார்.

    இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே? வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, "அது தனிப்பட்ட பிரச்சனை" என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே? இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?

    உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

    "கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், "தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?" என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

    திரு. ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை.
    • திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநிலை தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.

    ஒரு ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்? என கூறியுள்ளார். 



    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57).

    இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர். அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    கும்பலால் வெட்டிக்கொலை செய்யபட்ட ஜாகிர் உசேன் பிஜிலி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அவரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஜாகீர் உசேன் பிஜிலியின் உறவினர்கள், இடப்பிரச்சனை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம் என்று வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் அவரது உடலை எடுக்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, ஜாகிர் உசேன் பிஜிலி கொலை தொடர்பாக அக்பர்ஷா, தவ்ஃபீக் ஆகிய இருவர் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

    நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    ×