என் மலர்
நீங்கள் தேடியது "ரத்த புற்றுநோய்"
- செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது.
- பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன.
ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகின்றன. வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பிளேட்லெட்டுகள் ரத்தம் உறைவதற்கு உதவுகின்றன. இதில் ரத்தத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி அசாதாரணமாக வளரும்போது ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது. இது மூன்று வகைப்படும்.

லுகேமியா:
எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற திசுக்களான எலும்பு மஜ்ஜையில் உள்ள ரத்தத்தை உருவாக்கும் செல்களில் லுகேமியா தொடங்குகிறது.

லிம்போமா:
இது நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் லிம்போசைட்டுகள், வெள்ளை ரத்த அணுக்களில் தொடங்குகிறது. நிணநீர் மண்டலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மல்டிபிள் மைலோமா:
இது எலும்பு மஜ்ஜையில் உள்ள பிளாஸ்மா செல்களைப் பாதிக்கிறது. பிளாஸ்மா செல்கள் நோயெதிர்ப்பு அமைப்பு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன.
அறிகுறிகள்
லுகேமியாவின் அறிகுறிகள் அந்த நோயின் வகையைப் பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும். எளிதில் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு, அதிகப்படியான வியர்வை, இரவில் சோர்வு அல்லது பலவீனம், காய்ச்சல் மற்றும் குளிர், அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றுகள், பசியின்மை, குமட்டல் மற்றும் எடை இழப்பு, எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள், குறிப்பாக கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதிகளில் வீங்குதல், கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம், தோலில் சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றுதல் போன்றவை இதற்கான அறிகுறியாகும்.

பரிசோதனைகள்
ரத்த சோகையால் வெளிறிய தோல், நிணநீர் கணுக்களின் வீக்கம் மற்றும் கல்லீரல், மண்ணீரலின் வீக்கம் இவற்றின் மூலம் இந்த நோயை அறியலாம். ரத்த பரிசோதனையில் அசாதாரண சிவப்பு அல்லது வெள்ளை ரத்த அணுக்கள் அல்லது பிளேட்லெட்டுகள் உள்ளதா என்பதை பார்க்கலாம். இடுப்பு எலும்பில் இருந்து எலும்பு மஜ்ஜையின் மாதிரியை எடுத்து லுகேமியா செல்களைக் கண்டறியலாம்.
சித்த மருத்துவம்

நித்திய கல்யாணி:
இது எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தாவரம். இந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படும் வின்கிரிஸ்டின் மற்றும் வின்பிளாஸ்டைன் மருந்துகள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாக நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் கொடிவேலி மாத்திரை, சேராங்கொட்டை நெய் போன்ற மருந்துகள் ரத்தப்புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
துளசி
இதன் இலைகளில் உள்ள தைமோல் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயற்கையிலேயே புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
மஞ்சள்:
இதில் உள்ள குர்குமின் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.
பூண்டு:
இதில் உள்ள அலிசின், டைஅலைல் சல்பைடுகள் அசாதாரண செல் பிரிவைத் தடுத்து புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை செய்கிறது.
இஞ்சி:
இதில் உள்ள ஜிஞ்சிரால், புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை கொண்டுள்ளது.

முள்சீத்தாப்பழம்:
இதில் உள்ள ரெட்டிகுலின், கோரெக்சிமைசின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பில் சிறந்த பங்காற்றுகிறது.
கருஞ்சீரகம்:
இது முழுமையாக புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதன் உயிர்வேதியியல் கலவையான தைமோகுவினோன் புற்றுநோய் செல்களை தடுக்கிறது, மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
வாழ்வியல் முறை
தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது செய்ய முடிந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்க இறை பிரார்த்தனை, தியானம் செய்ய வேண்டும்.
நவீன மருத்துவத்தில் புற்று நோய்களுக்கு விரிவான சிகிச்சைகள் உள்ளன. நோயாளிகள் அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே புற்றுநோய் என்ற உடன் நோயாளிகள் பயப்பட வேண்டாம். குணப்படுத்தக் கூடிய புற்று நோய்களும் உண்டு. எனவே நோயாளிகள் மனம் தளராமல் சிகிச்சை பெறுவது நல்லது.