என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மாணவர் தாக்குதல்"
- சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார்.
- வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கோவை:
கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து நின்று தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாக்கப்பட்ட மாணவர் சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர். 21 வயதான அவர் அந்த கல்லூரியில் முதுகலை கிரிமினாலஜி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை தாக்கியவர்கள் அதே விடுதியில் தங்கியிருக்கும் முதலாமாண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர்.
என்ஜினீயரிங் மாணவர்கள் அறையில் அடிக்கடி பணம் திருட்டுப் போய் உள்ளது. ஆயிரம், ரூ.2 ஆயிரம் என தொடங்கி மொத்தம் ரூ.22 ஆயிரம் திருடு போய் இருக்கிறது.
இந்த பணத்தை முதுகலை கிரிமினாலஜி படிக்கும் மாணவர் திருடி இருக்கலாம் என என்ஜினீயரிங் மாணவர்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதனால் சம்பவத்தன்று இரவு விடுதியில் இருந்த அந்த மாணவரை என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்ந்து சுற்றிவளைத்து தாக்கி உள்ளனர்.
சட்டை அணியாமல் இருந்த அந்த மாணவரை முட்டிப்போட வைத்தும், கைகளை மேலே தூக்கச் சொல்லியும் தாக்கி இருக்கிறார்கள். இனி இதுபோல் செய்ய மாட்டேன் என கூறி மன்னிப்பு கேள் எனவும் கூறி சரமாரியாக தாக்கினர். அந்த மாணவர் கண்ணீர் விட்டு கெஞ்சி கதறி அழுதபிறகும் அவரை விடாமல் அவர்கள் அடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை மாணவர்களில் ஒருவரே வீடியோவாக எடுத்து வெளியே பரப்பி விட்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தார். வீடியோவை பார்த்த கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.
கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 13 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. 13 பேரும் இன்று பெற்றோருடன் கல்லூரிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று மாணவர்கள், பெற்றோருடன் கல்லூரி நிர்வாகத்தினர் முன்பு ஆஜராகினர். பெற்றோர் முன்னிலையில் சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களிடம் அவர்கள் விளக்க கடிதம் எழுதி வாங்கிக் கொண்டனர். இன்று 11 மாணவர்கள் பெற்றோரை அழைத்து வந்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினர். 2 மாணவர்களின் பெற்றோர் வரவில்லை. அவர்கள் நாளை வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி தரப்பில் விடுதி வார்டன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இந்த சம்பவம் ராகிங் அல்ல. பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டு தாக்கி உள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர், காயம் அடைந்துள்ளதால் சொந்த ஊரான சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் போலீசில் புகார் அளிக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.