என் மலர்
நீங்கள் தேடியது "வெண்ணைத் தாழி உற்சவம்"
- ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர்.
- நாளை காலை தேரோட்டம்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் பெருமாள் சன்னதியில் மூலவராக பரவாசுதேவ பெருமாள் அருள்பாலிக்கிறார்.
உற்சவராக ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்தியபாமா சமேதராக மாடு மேய்க்கும் கண்ணன் திருக்கோலத்திலும், செங்கமலத் தாயார் தனி சன்னதியிலும் அருள்பாலித்து வருகின்றனர்.
பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் ஒரு மாத திருவிழா இக்கோவிலின் முக்கியமான விழாவாகும். அப்போது 18 நாட்கள் உற்சவமும், 12 நாட்கள் விடையாற்றியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்று, கருட பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது. இதனை காண தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத் தாழி உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து, பெரிய கடைத்தெரு வழியாக சென்று காந்தி ரோட்டில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்தில் எழுந்தருளினார்.
வீதிஉலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் அலைகடலென திரண்டு தவழும் கண்ணனாக வரும் ராஜகோபாலன் மீது வெண்ணையை வீசி அன்பை பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வெண்ணையை வீசி வழிபட்டதால் மன்னார்குடி நகரமே விழாக்கோலம் பூண்டது.
அதனைத் தொடர்ந்து, இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.