என் மலர்
நீங்கள் தேடியது "சர்கோபீனியா"
- கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன.
- ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
வயதாகும்போது தசையின் நிறை, வலிமை, செயல்பாடுகள் படிப்படியாக பலவீனமடைய நேரிடும். இந்த நிகழ்விற்கு என்ன பெயர் தெரியுமா? இது மருத்துவ துறையில் `சர்கோபீனியா' என அழைக்கப்படுகிறது.
வயது ஏற ஏற தசை இழப்பு ஏற்படும். இதனால், நடையின் வேகம் குறையும். கைகளை ஊன்றாமல் எழுந்திருக்க முடியாது. இதன் தாக்கத்தின் தன்மை மனிதர்களுக்குள் மாறுபடும். முதுமை தவிர, புகைப்பிடித்தல், மது பழக்கம், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, வைட்டமின் டி, புரதச்சத்து குறைபாடு ஆகியவையும் காரணிகளாக கூறப்படுகிறது. சர்கோபீனியாவை எவ்வாறு தடுப்பது என்று பார்ப்போம்.
சுறுசுறுப்பாக இருங்கள்
தசை இழப்பை தடுக்க எப்பொழுதும் உடலானது இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வயதானவர்கள் முடிந்தவரை நிற்க முடிந்தால் நில்லுங்கள், உட்கார முடியுமாயின் சிறிது நேரம் உட்காருங்கள். எப்பொழுதும் படுத்தே இருக்க அனுமதிக்காதீர்கள். தசை இழப்பை தடுப்பதற்கு சிறந்த வழி இயங்கி கொண்டே இருப்பதுதான்.

வயதானவர்களை நடக்க ஊக்கப்படுத்துங்கள்
வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களை எப்பொழுதும் படுத்தே இருக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் தடுமாற்றமின்றி நடப்பதற்கு உதவுங்கள். இல்லையெனில் அவர்கள் முன்பை விட மிகவும் பலவீனமாகிவிடுவார்கள்.

ஒரு வாரம் அவர்கள் படுக்கையில் இருந்தால், தசை நிறையில் 5 சதவீதம் வரை இழப்பு ஏற்படும். மேலும் அவர்களால் இந்த இழப்பை மீண்டும் முழுமையாக மீட்டெடுக்க முடியாது.
ஆஸ்டியோபோரோசிஸை விட பாதிப்பு அதிகம்
எலும்பின் வலிமை குறைந்து, எளிதில் உடையக்கூடியதாக மாறும் ஒரு நிலைக்கு `ஆஸ்டியோபோரோசிஸ்' என்று பெயர். இதனால் அவர்கள் எளிதில் கீழே விழுந்து எலும்பை உடைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை விட சர்கோபீனியா அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தசை நிறை குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

ஓய்வில் இருந்தால் விரைவான தசை இழப்புக்கும் வழிவகுக்கும்
கால்களே முழு உடலின் எடையையும் தாங்குகின்றன. எனவே உடலின் இயக்கத்திற்கு அவை மிகவும் முக்கியமானவை. வயதானவர்கள் உட்கார்ந்து அல்லது படுத்தே இருப்பதால் கால்களின் இயக்கம் குறைகிறது. இது கால்களின் தசையை பலவீனப்படுத்துகிறது.
கால்களில் உள்ள தசைகள் எப்பொழுதும் ஓய்வில் இருந்தால், அது மோசமான விளைவை சந்திக்கிறது. நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகள் தசை நிறையை சரியாக பராமரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.

வயதாகி முதுமை எட்டும்போது, கால்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தசைகள் வலிமைப்படும். இரண்டு வாரங்களுக்கு கால்களை அசையாமல் வைத்திருந்தால், பத்து வருட காலத்திற்கு அதன் வலிமையை இழக்க நேரிடும்.
சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் தசை வலிமையை பராமரிக்க உதவிடும். எனவே கால்களின் வலிமையை பராமரிக்க ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களில் 5 முதல் 13 சதவீதம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11 முதல் 50 சதவீதம் பேரும் சர்கோபீனியா பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த 40 ஆண்டுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இது பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தசை இழப்பை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், சுறுசுறுப்பாக இருந்தால் அதன் தீவிரத்தைக் குறைக்கலாம்.