என் மலர்
நீங்கள் தேடியது "ஏசி அறையின் பக்க விளைவுகள்"
- சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும்.
- விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்க்கும்.
கோடை வெயிலின் உக்கிரம் பல இடங்களில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், பலரும் குளிர்சாதன (ஏ.சி.) வசதியுள்ள அறைக்குள் அதிக நேரம் செலவிட தொடங்கி விட்டார்கள். அலுவலகம் மட்டுமின்றி வீடுகளிலும் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

அப்படி ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது 6 விதமான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அவை பற்றியும், தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம்:
ஏர்கண்டிசன் (ஏ.சி.) வசதி உள்ள அறைக்குள் நிலவும் வெப்பத்தை மட்டும் குறைப்பதில்லை. ஈரப்பதத்தையும் குறைத்துவிடும். குறிப்பாக சருமம், மூக்கு, தொண்டை பகுதியில் ஈரப்பதத்தை இழக்க செய்துவிடும். சரும வறட்சி, சரும எரிச்சல், சருமம் உரிதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு சருமம் நெகிழ்வுத்தன்மை அடைந்து மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஏற்படக்கூடும். இது விரைவிலேயே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கான அறிகுறியாக மாறக்கூடும். அத்தகைய பிரச்சனை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். சரும பராமரிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நீரிழப்பு-சோர்வு
ஏ.சி.கள் சூரியக்கதிர்கள் உமிழும் வெப்பத்தை குறைத்தாலும் சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை நீக்குகின்றன. இது நீரிழப்புக்கு வித்திடும். அதன் காரணமாக தாகம், சோம்பல், சோர்வு போன்றவை எட்டிப்பார்க்கும்.
அதனால் ஏ.சி. அறைக்குள் அதிக நேரம் செலவிடுபவர்கள் உடலில் நீரேற்றத்தை பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக ஏ.சி.க்குள் இருக்காமல் அவ்வப்போது வெளியே நடமாட வேண்டும்.

கண் எரிச்சல் - கண் வறட்சி
சிலருக்கு கண்கள் வறட்சி நிலையிலேயே காணப்படும். அவர்களின் கண்களில் போதுமான அளவு கண்ணீர் திரவம் படர்ந்திருக்காது. அப்படி கண்களில் வறட்சி தன்மை கொண்டவர்கள் ஏ.சி.யில் அதிக நேரம் இருப்பது நிலைமையை மோசமாக்கும். கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் எட்டிப்பார்க்கக்கூடும்.

சுவாசப் பிரச்சனை
ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த, உலர்ந்த காற்று சுவாச பாதைக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி.), மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளை கொண்டவர்களுக்கு பிரச்சினையை அதிகப்படுத்தும்.
அதிலும் ஏ.சி.யை முறையாக பராமரிக்காவிட்டால் அதில் படர்ந்திருக்கும் தூசு, அழுக்குகள், பூஞ்சை காளான் உள்ளிட்டவை ஏ.சி. வெளியிடும் குளிர் காற்றில் கலந்து ஒவ்வாமை, சுவாச நோய்களுக்கு காரணியாகிவிடும்.

இயற்கை எண்ணெய் உற்பத்தி குறைவு
ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட அறைக்குள் அதிக நேரம் இருந்தால், உடலில் வியர்வை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். இதனால் இயற்கையாகவே உடலில் எண்ணெய் உற்பத்தியாகும் திறனும் பாதிப்படையும்.
அதன் காரணமாக சருமம் மந்தமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் தோன்றும். உடலில் எண்ணெய் இல்லாததால் முடி வறட்சி அடையும். முடி உடைவது, முடி உதிர்வது போன்ற பிரச்சினைகளும் எட்டிப்பார்க்கும்.

தோல் வியாதிகள்
எக்ஸிமா, சொரியாசிஸ், ரோசாசியா போன்ற தோல் வியாதிகளை கொண்டவர்கள் ஏ.சி. அறையில் அதிக நேரம் செலவிடும்போது ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் காற்று நிலைமையை மோசமாக்கக்கூடும். சருமம் ஈரப்பதத்தை இழந்து சரும வெடிப்புக்கு வித்திடும். தோல் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிடும்.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க ஏ.சி. அறையில் குறிப்பிட்ட நேரம் செலவிடுவது நல்லது. இடையிடையே வேறு அறைக்கோ, வெளிப்புற சூழலுக்கோ இடம் மாறிக்கொள்வது சிறப்பானது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், பழச்சாறுகள் உள்ளிட்டவற்றை பருகி வரலாம். ஏ.சி.யை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.