search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95181"

    தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.
    ஜோகன்னஸ்பர்க்:

    உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக  குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

    அவ்வகையில், புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளது.

    இந்த புதிய வகை வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    லண்டன் விமான நிலையம்

    இந்நிலையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, எஸ்வாதினி (ஸ்வாசிலாந்து) ஆகிய தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு இன்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வருகிறது. கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் இணைத்துள்ளது. 

    எனினும், இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார். #PrincePhilip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
     
    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.



    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார். இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். 

    இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது. #PrincePhilip
    சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. #SyriaConflict #USTroops #UK
    லண்டன்:

    வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப் படையினர் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்றும், சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

    ஆனால், டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரிட்டன் தெரிவித்துள்ளது.

    ‘‘சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை கூட்டுப்படை தொடங்கியதில் இருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை கூட்டுப்படை கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் கிழக்கு சிரியாவில் ஐஎஸ் ஆக்கிரமிப்பில் உள்ள கடைசி பகுதியையும் கைப்பற்றி முன்னேறினோம். ஆனால் இன்னும் நாம் முன்னேற வேண்டி உள்ளது. அவர்களிடம் (ஐஎஸ்) பெரிய பிராந்தியம் இல்லாதபோதும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும்.



    சிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்” என பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    டிரம்ப் நடவடிக்கை தங்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக பிரிட்டன் வெளிவிவகாரத் தேர்வுக்குழு தலைவரான டாம் துகண்ட்ஹாட்  எம்பி தெரிவித்தார். அமெரிக்க படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது சிரியா மட்டுமின்றி ஈராக் அரசுக்கான ஆதரவையும் தொடருவதுதான் என்றும் டாம்  கூறியுள்ளார். #SyriaConflict #USTroops #UK

    பிரிட்டனில் சர்வாதிகாரி ஹிட்லரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய தம்பதியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #UKCouple #AdolfHitler
    லண்டன்:

    பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த ஆடம் தாமஸ்-கிளவுடியா தம்பதியர், தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். அத்துடன், நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தம்பதியர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.



    இதையடுத்து தாமசுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான நெடிய வரலாறு இருக்கிறது என நீதிபதி தெரிவித்தார்.  #UKCouple #AdolfHitler

    பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Britaineconomy #Modi
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்துக்குட்பட்ட அன்ஜார் நகரில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்-  முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த தொடக்க விழாவின்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய மோடி, கடந்த 20 ஆண்டுகளில் கட்ச் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

    முன்னர், தண்ணீர் பற்றாக்குறைக்கு பயந்து இந்த மாவட்டத்துக்கு வரவே பலரும் பயந்தனர். அப்படி இருந்த கட்ச் மாவட்டம் இன்று பெற்றுள்ள வளர்ச்சியை 2001-ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களால் புரிந்துகொள்ள இயலாது.

    எரிபொருளுக்கான பற்றாக்குறை உள்ள எந்த நாடும் வறுமையின் பிடியில் இருந்து வெளியே வர முடியாது.

    நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இதுவரை 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 கோடி இணைப்புகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் கொடுத்திருக்கிறோம்.

    விரைவில் பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Indiawillovertake #Britaineconomy #Modi
    பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #RuchiGhanashyam
    புதுடெல்லி:

    லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் நாட்டுக்கான இந்திய உயர் தூதராக ஒய்.கே.சின்ஹா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் புதிய உயர் தூதராக ருச்சி கனஷியாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1982-ம் ஆண்டில் இந்திய அயல்நாட்டுப் பணி கல்வியில் தேர்ச்சி பெற்ற ருச்சி கனஷியாம் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மேற்கத்திய நாடுகள் விவாகரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    விரைவில் லண்டன் செல்லும் இவர் ஒய்.கே.சின்ஹாவிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #RuchiGhanashyam #HighCommissionerofIndia #UKHighCommissionerofIndia
    பிரிட்டன் நாட்டு எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. #NiravModiInUK #NiravModi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.



    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தனது நகைக்கடையின் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்த நிரவ் மோடி, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியோடி அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து, இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் சார்பில் நிரவ் மோடிக்கு எதிராக சிவப்பு நோட்டீஸ் விடப்பட்டது.

    ஆனால், நிரவ் இன்னும் பிரிட்டன் நாட்டு எல்லைக்குள் இருப்பதாக அந்நாட்டின் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டனில் இருக்கும் அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நோட்டீசை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தனர்.

    வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக இந்த நோட்டீஸ் விரைவில் பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். #NiravModiInUK #NiravModi

    உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை விளைவித்து இந்திய வம்சாவளி விவசாயி ரக்பிர் சிங் சங்கேரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். #LongestCucumber #UK
    லண்டன்:

    பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார்.

    மிகச்சாதாரணமான இவர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.

    இதுகுறித்து ரக்பிர் சிங் கூறுகையில், இந்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வெள்ளரிக்காய் இன்னும் தனது நீளத்திலும் அகலத்திலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது இதில் ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது. #LongestCucumber #UK
    அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து விரைவில் வெளியேற்றப்பட உள்ளார். #JulianAssange #EcuadoreanEmbassy
    லண்டன்:

    அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் உள்ள ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து விரைவில் வெளியேற்றப்பட உள்ளார்.

    அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.

    ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார்.

    அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்துள்ளார்.

    சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த அவர் மாட்ரிட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒருவருக்கு (அசாஞ்சேவுக்கு) நீண்டகாலமாக அடைக்கலம் அளிக்க முடியாது. அசாஞ்சேவின் நடவடிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. நாட்டு மக்களும் அதை விரும்பவில்லை. எனவே அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

    எனவே அவர் இன்னும் ஒருவாரத்துக்குள் எந்நேரமும் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #JulianAssange #EcuadoreanEmbassy
    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.பி.க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். #Brexit #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவரும், வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் ஆகியோரும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

    இதையடுத்து, டேவிட்டின் இடத்தில் டொமினிக் ராப்பை நியமித்து பிரதமர் தெரெசா மே உத்தரவிட்டார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சியின் துணைத்தலைவர் பதவியில் உள்ள 2 எம்.பிக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    பென் பிராட்லே மற்றும் மரியா கால்ஃபீல்டு ஆகிய 2 எம்.பி.க்களும் பிரெக்ஸிட் விவகாரத்தில் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரெக்ஸிட் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் பதவி விலகி வருவதால், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Brexit #UK
    பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜினாமா செய்த வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக புதிய மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. #Brexit #BorisJohnson #JeremyHunt
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்நிலையில், பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.  #Brexit #BorisJohnson #JeremyHun
    பிரிட்டனில் நோவிசோக் நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். #UKPairPoisoned #NovichokAttack
    லண்டன்:

    பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவுக்கு ரசாயன விஷம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, பிரிட்டனில் மீண்டும் அதே போன்ற விஷ தாக்குதல் நடத்தப்பட்டது. இங்கிலாந்தின் வில்ட்ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் கடந்த வாரம் தம்பதியர் சார்லி ரோவ்லெவும், டான் ஸ்டர்ஜஸூம் அவர்களின் வீட்டில் சுயநினைவிழந்த நிலையில் கவலைக்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

    அங்கிருந்து அவர்கள் மீட்கப்பட்டு சாலிஸ்பரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் நச்சு வேதிப்பொருள் அவர்களின் உடலில் கலந்துள்ளது.

    இந்த தம்பதியர் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளானதை முடிவு செய்ய அவர்களின் நடத்தை பற்றி விரிவான சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வில்ட்ஷயர் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், நோவிகோச் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டான் ஸ்டர்ஜஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே, நச்சுத்தாக்குதலுக்கு பலியான டான் ஸ்டர்ஜஸ் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #UKPairPoisoned #NovichokAttack
    ×