search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97071"

    வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டு வாடாவைத் தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.

    பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அளிக்கும் தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    முதலில் கர்நாடகாவில் குமாரசாமி உறவினர், கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில் பல கோடி ரூபாய் சிக்கியது.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் கிடைத்தது.

    நேற்று மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அதில் ரூ.14 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இத்தகைய சோதனைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

    அதில், “வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். மேலும் யார் வீட்டில் சோதனை நடந்தாலும் நடுநிலையை கடை பிடிக்க வேண்டும்“ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    இது தவிர இனி சோதனை நடத்தும்போது தேர்தல் அதிகாரிகளிடம் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. #ElectionCommission
    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    புதுடெல்லி:

    ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


    ஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு  செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
     
    இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  11-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    தனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
    மதுரை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதன் மூலம் அவர் நடத்தும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சார்பில் அவரது வக்கீல் அருண் நடராஜன் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-



    கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக வந்துள்ள செய்தி, புதிய செய்தி அல்ல. இது பழைய செய்தி ஆகும்.

    6 மாதங்களுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை ஊர்ஜிதம் செய்துள்ளது. அவ்வளவு தான். இது நீதிமன்ற உத்தரவு அல்ல.

    மேலும் இந்த வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே தான் இருக்கிறது. இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு கோர்ட்டு நிலுவையில் உள்ளது.

    இவ்வாறு வக்கீல் கூறியுள்ளார். #INXMedia #KartiChidambaram #ED
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #KartiChidambaram #ED
    புதுடெல்லி:

    கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
     
    இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #KartiChidambaram #ED
    லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவுக்கு இங்குள்ள மது ஆலையின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் பொருளாதார அமலாக்கத்துறை 1008 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. #Mallyashares #UBHLshares
    புதுடெல்லி:

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டது.

    இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. ஆகியவை ஒன்றாக இணைந்து லண்டன் நகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக சுமார் 150 பக்கங்களை கொண்ட  ஆவணங்களை தாக்கல் செய்தன. 

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்திய அரசு லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்ற விசாரணையில் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையில், கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையா குழுமம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான குழுமங்களை சேர்ந்த சுமார் 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். 

    அவருக்கு கடன் அளித்த சில வங்கிகள் கூட்டாக தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சில சொத்துகளை ஏலம் விடுவதற்கும் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.



    அவ்வகையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைட்டட் பிரியூவரீஸ் மது ஆலையில் அவருக்கு சொந்தமான 74 லட்சத்து 4 ஆயிரத்து 932 பங்குகளை விற்பனை செய்து பணத்தை பெற்றுக்கொள்ள பொருளாதார அமலாக்கத்துறைக்கு கருப்புப்பணப் பரிமாற்ற தடுப்பு நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி அனுமதி அளித்தது. 

    இதனைதொடர்ந்து, தனியார் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பங்கு பத்திரங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் உள்ள கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் இன்று அவற்றை விற்பனை செய்ததன் மூலம் ஆயிரத்து எட்டு கோடி ரூபாய் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக இருக்கும் மேலும் பல பங்குகள் அடுத்த சில நாட்களில் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். #Mallyashares #UBHLshares
    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. #RajeevSaxena
    புதுடெல்லி:

    மிக முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் (அகஸ்டாவெஸ்ட்லேண்ட்) வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.3,600 கோடி முறைகேடாக பணபரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா கைது செய்யப்பட்டு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் ஜாமீன் பெற்றுள்ளார்.

    கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையில் சக்சேனா அப்ரூவராக விரும்புவதாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிபதி அரவிந்த்குமாருக்கு அனுப்பப்பட்டது. டெல்லி கோர்ட்டு இதுபற்றி அமலாக்கத்துறையின் கருத்தை கேட்டது. கோர்ட்டில் இன்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ராஜீவ் சக்சேனா அப்ரூவர் ஆவதில் ஆட்சேபனை இல்லை. அது அமலாக்கத்துறைக்கு உதவியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 25-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள ரூ. 5.83 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். தற்போது, அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேற்கண்ட தொகையில் 5 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 422 ரூபாயை பாரிஸ் நகரில் தங்கியிருந்த தனது முன்னாள் மனைவி வலேரி என்பவரின் வங்கி கணக்குக்கு கிறிஸ்டியன் மைக்கேல் முன்னர் அனுப்பி இருந்தது இந்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    அந்தப் பணத்தை வைத்து பாரிஸ் நகரின் விக்டர் ஹுகோ பகுதியில் உள்ள 45-வது நிழற்சாலையில் வீட்டுடன் கூடிய ஒரு சொத்தினை கிறிஸ்டியன் மைக்கேலின் முன்னாள் மனைவி வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், மேற்படி சொத்தினை கையகப்படுத்த இந்தியாவை சேர்ந்த பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். 

    கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் விரைவில் பிரான்ஸ் அரசின் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையின் மூலம் இந்த சொத்து முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

    லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

    சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



    இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
    லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா 5-வது முறையாக ஆஜரானார். #RobertVadra
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியாவின் மருமகனுமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்து வாங்கியதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த குற்ற வழக்கின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே வதேராவுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி டெல்லி ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வரை 4 முறை வதேரா ஆஜரானார். இதைத்தொடர்ந்து 5-வது முறையாக நேற்று மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அவர் ஆஜரானார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வதேராவிடம் நேற்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வதேராவை கைது செய்வதற்கு கோர்ட்டு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra 
    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்தின் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை இன்று முடக்கியது. #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்குஆஜரானார்.  அவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் இன்றிரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தனது தாயுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். #RobertVadra
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிறுவனம் கடந்த 2015ல் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியுள்ளது. அதன்பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
    இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் வதேரா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் வதேராவும், அவரது தாய் மவ்ரீனும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ராஜஸ்தான் ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. 



    இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் இரண்டாவது நாளாக இன்று ஆஜரானார். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை முன் வதேரா ஆஜராவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #RobertVadra
    லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது முறையாக இன்று விசாரணைக்கு ஆஜரானார். #RobertVadra

    புதுடெல்லி:

    சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க மறுத்தார். டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வர சம்மதித்தார்.

    கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் சட்ட விரோதமாக வாங்கி உள்ள  சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

    மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக் கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.

    காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.

    லண்டனில் சொத்துக்கள் வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அதற்கான பண பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேட்டனர். மேலும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டனர்.

    ஆனால் தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே வருகிற 12-ந்தேதி ராபர்ட் வதேரா ராஜஸ்தான் மாநிலம் சென்று ஜெய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நில மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடத்தும் அடுத்தடுத்து விசாரணைகளால் ராபர்ட் வதேரா கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தபோது சற்று சோர்வாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் ராபர்ட் வதேராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு ராகுல் கூறுகையில், “எனக்கு அதுபற்றி கவலையில்லை. ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தட்டும் அல்லது சிதம்ரபத்திடம் விசாரணை நடத்தட்டும் அதுபோல ரபேல் போர் விமான ஒப்பந்த மோசடி பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.” என்றார். #RobertVadra

    ×