search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.
    • வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

    வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

    வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா.

    கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி. அதை ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

    மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

    திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள்.

    • கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன்.
    • கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும்.

    விரதம் என்பதற்கு 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள். விரத காலங்களில் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.

    வார விரதம் : செவ்வாய்க்கிழமை விரதம்

    நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்

    திதி விரதம்: சஷ்டி விரதம்

    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார். கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்' என்று அருள் புரிந்தார்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது. விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனம் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.

    • அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம்.
    • விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார்.

    நவராத்திரி விரதமும் புராண கதைகளும்நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை.

    இராமாயணத்தில் நவராத்ரி:

    வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் ஏற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

    மஹாபாரதத்தில் நவராத்ரி:

    சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரதத்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    சுசீலனது கதை:

    முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

    நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு:

    குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம். 

    • செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக!

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழநியும் கருதப்படுகின்றன. வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழநி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை. செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை)விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    • புற்று வழிபாட்டில் பாலும், வாழைப்பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன.
    • சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது.

    புற்று இருக்கும் இடத்தைச் சுற்றி முதலில் சாணத்தால் மெழுகிக் கோலமிட வேண்டும். தினமும் காலையும், மாலையும் விளக்கேற்றிப் பால் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

    சூடம் ஏற்றி வழிபாடு செய்து புற்றுக்குப் பால் ஊற்றினால் நல்லது நடக்கும். புற்று முழுவதும் மஞ்சளைப் பூசி, அங்கங்கே குங்குமப் பொட்டு வைப்பது தமிழ்நாட்டில் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. சில பெண்கள் புற்றுக்கு முன்பாகப் பொங்கல் இட்டு படைப்பதுண்டு.

    தங்களது வேண்டுதல்கள் நிறைவேறப் பிரார்த்தித்து மஞ்சள் நிற எலுமிச்சையை புற்றின் மீது வைக்கும் வழக்கம் உள்ளது.

    புற்றை மூன்று முறை வலம் வந்து அம்மனை வழிபடுவது போல் வேண்டினால் எண்ணியவை நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    நாக வழிபாடு கீழ்க்கண்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது.

    * குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல்.

    * மகப்பேறு வேண்டி வழிபடுதல்.

    * பிரசவம் இடையூறு இன்றி நடைபெற வேண்டி வழிபடுதல்.

    * கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.

    * நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள்.

    * தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.

    * குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.

    நிவேதனம்-பிரசாதம்:

    நாக வழிபாட்டிற்கு என நிவேதனப்பொருட்கள் உள்ளன.

    நிவேதனம்:

    புற்று வழிபாட்டில் பாலும், வாழைப்பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.

    பிரசாதங்கள்:

    நாகத்தை வழிபாட்டு தெய்வமாகக் கொண்ட நாகர்கோவிலில், கும்பகோணம் சங்கரன்கோவில் உள்பட சில தலங்களில் புற்று மண்ணே பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இத்தலங்களில் உள்ள புற்று மண் அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கின்றன. இப்புற்று மண் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.

    சில இடங்களில் புற்றிலிருந்து எடுத்த ஒருவித மையைப் பிரசாதமாகக் தயாரித்து வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த மை பலவித வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.

    • ஒரு சன்னதியில் புற்றிடங் கொண்ட பெருமானாக 'வன்மீகநாதர்' வீற்றிருக்கிறார்.
    • லிங்க வடிவில் காட்சியளிக்கும் இறைவன் இங்கு புற்றிற்குள் மறைந்திருக்கிறான்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் தலத்திற்கு 'ஆதிபுரி' என்று பெயர். இங்குள்ள ஆதி புரிக் கோவிலில் உள்ள லிங்கம் புற்று வடிவமாகக் காட்சி அளிக்கிறது. சிவலிங்கத் திருமேனி சதுர வடிவில் அமைந்துள்ளது. இத்திருமேனியை படம் பக்கநாதர் என்று அழைக்கிறார்கள். ஆதி புரீஸ்வரர் என்றும் இவரை அழைக்கிறார்கள். இங்குள்ள அம்மன் வடிவுடை நாயகியைத் தரிசிப்பதால் நாகதோஷம் விலகும் என்று நம்புகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் தரம் தோன்றி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்குள்ள ஒரு சன்னதியில் புற்றிடங் கொண்ட பெருமானாக 'வன்மீகநாதர்' வீற்றிருக்கிறார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன் கோவிலின் வடமேற்கில் புற்றுலிங்கம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனுக்கு வன்மீக நாதர் என்று பெயர். லிங்க வடிவில் காட்சியளிக்கும் இறைவன் இங்கு புற்றிற்குள் மறைந்திருக்கிறான்.

    மண்டைக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தானமே புற்று வடிவில் உள்ளது. இந்தப் புற்று மிகவும் பெரியதாகக் காட்சியளிக்கிறது. இதன் உயரம் ஐம்பத்தாறு அடியாகும். ஐந்து முகங்களை உடையதாக உள்ளது. இந்தப் புற்று ஆண்டு தோறும் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

    • அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பெஸ்த வீதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்த 350 பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை காலை கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மாலை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா சுவாமி கொலுவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அன்று முதல் மூன்று நாட்கள் ஜங்காலபள்ளி நாகபுஷணம் தேவாரா அவர்களின் காமம்மா சரித்திர காலாட்சேபம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை பக்தர்கள் கோவிலுக்கு சாரி வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சனிக்கிழமை விடியற்காலை காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ காமம்மா-மாரய்யா பக்தர்களும்,பொது மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும்.
    • பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

    பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ வரம் தரும் சௌபாக்ய கௌரி விரதம் !

    சிறப்பு: சவுபாக்கிய கவுரி விரதம்

    வழிபாடு: அம்பிகைக்கு விரதமிருந்து வழிபடுதல்.

    சௌபாக்ய தாயை ச வித்மஹே

    காம மாலாயை தீமஹி

    தன்னோ கௌரி ப்ரசோதயாத்!

    பெண்கள் செல்வச் செழிப்போடு நல்ல கணவன், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என நிறை வாழ்வு வாழ்வதே சௌபாக்கியம் எனப்படும்.

    அத்தகைய நிறை வாழ்வு வரம் தரும் சவுபாக்கிய கவுரி விரதத்தில் அன்னையை சௌபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவனாருடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபட வேண்டும். தக்ஷனின் மகளான சதி தேவி இவ்விரதத்தின் பயனால் சிவனாரை மணந்தாள். சவுபாக்கிய கவுரி விரதம் சௌபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.

    விரத நாள்:

    பங்குனி மாதம் வளர்பிறை திருதியை அன்று அனுசரிக்கப்படுகிறது.

    விரத முறை:

    விரத தினத்தில் அதிகாலை நீராடி முறையாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத் தால் அலங்கரிக்க வேண்டும்.

    மங்கல பொருட்கள் என சொல்லப்படும் பதினாறு வகை பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருமணி, மர சீப்பு, கண்மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

    பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜையை காலை அல்லது மாலை செய்யலாம்.

    முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும். பின்னர் சிவ பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன் , தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பின்னர் யாரேனும் இருவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

    • பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.
    • கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளைக் நிகழ்த்திவிட்டு, பாண்டவ தூதப் பெருமாள் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார். அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன். அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும் என வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார். இந்த கிருஷ்ணரின் பெயர் தூதஹரி எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது. இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது. இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொரு வரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாத யோக சக்திகளை கொண்டு அருள்கிறார். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    • மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

    தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

    தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார்.

    கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர். இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக இவளிடம் தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

    • விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.
    • பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும்.

    ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதி கரிக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும்.

    கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

    மார்கழி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும்.

    மாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும்.

    பங்குனி மாதப் பவுர்ணமி யில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

    பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்து அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

    உலகத்தை படைத்த உலக நாயகியான அம்பிகையை பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபட வாழ்வில் இருக்கும் இருள் நீங்கி ஒளிமாயமான எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பவுர்ணமியில் கட்டாயம் விரதம் இருந்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வாழ்வில் சகல வளங்களும் பெறலாம் என்பது ஐதீகம். வைகாசி மாத பவுர்ணமியில் விரதமிருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி அம்பிகையை வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பாயாசம் நைவேத்தியம் படைத்து பவுர்ணமியை வழிபட்டால் ஆயுள் விருத்தி உண்டாகும்.

    பவுர்ணமியில் முருகன் வழிபாடு

    திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள விராலி மலையில் வள்ளி தேவசேனை சமேதராகக் காட்சி அளிக்கும் சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் சித்திரா பவுர்ணமி அன்று சங்காபிஷேகமும், வைகாசி விசாக விழாவும் பங்குனி உத்திர திருவிழாவும் சிறப்பானது. பவுர்ணமி நாள்களில் இம்மலையில் உள்ள முருகனைத் தரிசனம் செய்தால், இறைவனின் அருளைப் பெறுவதுடன் இங்குள்ள மூலிகையான விராலிச் செடியின் மனத்தைச் சுவாசிக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் மறைந்து ஆரோக்கியமான வாழ்வும் கிட்டும்.

    பவுர்ணமியில் காமாட்சி தேர்

    சிவனின் சொல்லை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்ற பார்வதியைத் தட்சன் அவமதித்ததால் அந்த யாகத்தில் குதித்து விடுகிறாள். யாகத்தில் எரிந்து கொண்டிருந்த பார்வதியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இதைக்கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் நாரதன் முதலானோர் பிரம்மனிடம் முறையிட இந்தப் பிரச்சினையை மகாவிஷ்ணுவால்தான் தீர்க்க முடியும் என்று விஷ்ணுவை வேண்ட, அவரும் தனது சக்ராயுதத்தால் அன்னையின் உடலை ஐம்பத்தோரு துண்டுகளாக வெட்டி வீச, அதில் பார்வதியின் தொப்புள் வீழ்ந்த இடம் காஞ்சி சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

    பவுர்ணமி தினங்களில் காமாட்சி தங்கத்தேரில் உலா வருவது சிறப்பான ஒன்று. ஆடிப்பூர பவுர்ணமி அன்று, அன்னைக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ளும் பக்தர் களுக்குக் காமாட்சியின் அருட்கடாட்சம் பூரணமாகக் கிட்டும். சகல நன்மைகளும் ஏற்படும்.

    • விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.
    • விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்களை நைவேத்யமாகப் படைத்து குத்து விளக்கை ஏற்ற விநாயகப் பெருமானை மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் பூஜை முடிந்தபின் முருகப் பெருமானுக்குரிய நாமங்களைச் சொல்லி அர்ச்சித்து தீபம் காட்டி வழிபட வேண்டும். மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி ஆகியவைகளைப் படிக்க வேண்டும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். அவர் அங்கிருந்து ஏழாம் பார்வையாக விசாக நட்சத்திரத்தைப் பார்க்கிறார். விசாக நட்சத்திரத்தின் தேவதை குமரன். அதாவது முருகன்.

    சூரியன் விசாக நட்சத்திரத்தைப் பார்ப்பதன் மூலம் முருகனை வழிபடுவதாக ஐதீகம். எனவேதான், சூரியன் வழிபடும் முருகப்பெருமானை அந்நாளில் விரதமிருந்து நாமும் வழிபட்டு வருகிறோம்.

    விசாக நாளில் முருகனை வணங்கினால் நினைத்தது நிறைவேறும். பகை நீங்கி அன்பு பெருகும் சுகம் கிடைக்கும். தீராத வினைகளும், எதிரிகளின் தொல்லைகளும் நீங்கும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் உடனே பலன் கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

    வைகாசி மாதம் முழுவதும், எவர் ஒருவர் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே எழுந்து, குளித்து, கடவுளை வழிபடுகின்றாரோ, அவர்களுக்கு எங்கும், எதிலும் வெற்றி உறுதி என்கின்றன சாஸ்திரங்கள்! இயலாதவர்கள், வைகாசி பவுர்ணமி நாளிலாவது இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

    ×