search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98213"

    • பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள்.
    • டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது.

    அன்றைய காலகட்டத்தில் பருவம் அடைந்த பெண்கள் தாவணி அணியும் வழக்கத்தை பின்பற்றினர். நவ நாகரிக மோகம் மேற்கத்திய ஆடைகளை நாட வைத்ததன் காரணமாக தாவணி அணியும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. சடங்கு, சம்பிரதாயத்திற்காக மட்டும் தாவணி அணியும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

    இன்றும் கிராமங்களில் தாவணி அணியும் இளம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாரம்பரிய ஆடையான இதனை சுப நிகழ்வுகளின்போது அணிந்து கொள்வதற்கு சில இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் சவுகரியமாக உடுத்துவதற்கு ஏற்ப தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய பேஷன் உலகில் தாவணி ஏன் அணிய வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    இளமை : பெரும்பாலும் திருமணமாகாத இளம் பெண்கள்தான் தாவணி அணிகிறார்கள். அதற்கேற்ப இது இளமை உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. டீன் ஏஜ் தோற்றத்தை தக்கவைக்கக்கூடியது. சேலையை போல் தாவணி முதிர்ச்சியான தோற்றத்தை கொண்டிருக்காது. நடிகைகள் கூட பல சந்தர்ப்பங்களில் தாவணி அணிய விரும்புகிறார்கள்.

    சவுகரியம் : சேலையை விட தாவணி அணிந்து கொண்டு நடப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நவ நாகரிக உடையை போல் இறுக்கமாக உடுத்த வேண்டியதிருக்காது. தாவணிக்கு பொருத்தமாக உடுத்தப்படும் பாவாடை தளர்வாக இருக்கும். துப்பட்டாவும் அசவுகரியத்தை கொடுக்காது. நேர்த்தியாக இருக்கும். இப்போது படங்களில் நடிகைகள் தாவணி அணிவது பேஷனாகி இருக்கிறது. சமந்தா, ரகுல் ப்ரீத்சிங் போன்ற நடிகைகள் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தாவணியில் உலா வந்திருக்கிறார்கள்.

    ஸ்டைல் : தாவணி பாரம்பரியமான பழைய ஆடை என்றாலும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப உருமாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் தாவணியை ஸ்டைலாக அணியலாம். நேர்த்தியான தோற்றத்தையும் பெற முடியும். பாவாடை, ரவிக்கையின் நிறம், தாவணியின் நிறம் என ஒவ்வொன்றின் தேர்விலும் இன்றைய பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் அம்சங்கள் உள்ளன. பேஷன் டிசைனர்களும் நடிகைகள் உடுத்துவதற்கு ஏற்ப ஸ்டைலிஷான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பாரம்பரியம் :திருமண விழாவிலோ அல்லது கோவில் திருவிழாவிலோ பாரம்பரிய உடை உடுத்த விரும்பும் இளம் பெண்களுக்கு தாவணி பொருத்தமான தேர்வாக இருக்கும். பட்டு துணிகளிலும் தாவணிகள் தயாரிக்கப்படுகின்றன. உடுத்தும் ஆடைக்கு ஏற்ப ஒப்பனை செய்வதன் மூலம் பளிச் தோற்றத்தில் மிளிரலாம். பாரம்பரிய நகைகள் அணிவதும் கூடுதல் பொலிவு சேர்க்கும்.

    தனித்துவம் : சுப நிகழ்வுகளுக்கு சுடிதார், லெஹெங்கா போன்ற ஆடைகளுக்கு மாற்றாக நேர்த்தியாக தாவணி அணிந்து சென்றால் கூட்டத்தில் நீங்கள் தனித்து தெரிவீர்கள். நவ நாகரிக ஆடைகள் பிரமாண்டமாக காட்சி அளித்தாலும் தாவணியுடன் ஒப்பிடும்போது மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் ஈர்க்கப்படும். தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள ஆப் சாரி (Half Saree) என்று அழைக்கப்படும் தாவணி எப்போதுமே சிறந்த தேர்வாக அமையும்.

    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் பாரம்பரியமும், கலாசாரமும், ரசனை மற்றும் கலைநயத்தில் மாறுபட்டு இருக்கிறது. இருந்தாலும் அந்தந்த மாநிலத்தில் உருவாகும் பாரம்பரிய சேலைகளை மற்ற மாநிலப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். அந்தவகையில் சில மாநில சேலை வகைகளை கீழ்வாறு காணலாம்.

    கேரளாவின் கசவு

    செட்டு புடவை என்றழைக்கப்படும் இந்த புடவையை வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்தனர். இன்று அது புடவை வடிவில் கிடைக்கிறது. இப்புடவை வெள்ளை அல்லது ஆப்ப் வொயிட் நிறத்தில் அடர்த்தியான ஜரிகை பார்டருடன் கிடைக்கும். இதில் தற்காலங்களில் வேறு நிறங்களிலும் உடலில் பூக்கள் மற்றும் புட்டா போட்டும் கிடைக்கிறது. இப்பபுடவைக்கு வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிவது வழக்கம்.

    ஒடிசாவின் பொம்காய், சம்பல்புரி

    சோன்புரி சில்க், பொம்காய் சில்க் என்றழைக்கப்படும் இப்புடவை இகத் எம்ப்ராய்டரி மற்றும் நுணுக்கமான நூல் வேலைப்பாட்டுடன் பொதுவாக 9 கஜம் புடவையாக நெய்யப்படுகிறது. இப்புடவைகள் காட்டன் மற்றும் பட்டில் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகிறது.

    ஒடிசாவின் மற்றொரு பாரம்பரிய புடவை சம்பல்புரி புடவைகள். பலவித நுணுக்கமான நெய்யும் கலைகளை உள்ளடக்கியது இப்புடவைகள். இப்புடவையின் நூல்கள் முதலில் நிறமூட்டப்பட்டு பின்பே புடவையாக நெய்யப்படுகிறது. அதனால் புடவையின் நிறம் அடர்த்தியாகவும், நேர்த்தியாகவும் கிடைக்கிறது.

    அசாமின் முகா

    அசாமில் நெய்யப்படும் இந்த பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த பட்டு நூலை உண்டாக்கும் பட்டுப்பூச்சிகள் குறிப்பிட்ட இரண்டு வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால் இந்தப்பட்டு தனித்துவமான தரத்துடன் இருக்கிறது. இப்புடவையின் ஜரிகை தங்கத்தினால் ஆனது என்பது இதன் தனிச்சிறப்பு.

    லெஹரியா - ராஜஸ்தான்

    லெஹரியா என்பது ராஜஸ்தான் மாநில பாந்தினி புடவையை சேர்ந்த வகையாகும். இந்த புடவையின் ‘டை அண்ட் டை’ முறை பாந்தினியை விட வித்தியாசமானது.

    பஞ்சாபின் ஃபூல்காரி

    பூக்களால் ஆன டிசைன் கொண்டது தான் ஃபூல்காரி புடவைகள். இந்த புடவை முழுவதும் நூலினால் ஆன பூக்களின் வடிவில் நெய்யப்பட்டிருக்கும். ஃபூல்காரி என்பதே அதன் எம்ப்ராய்டரி வேலைப்பாட்டை குறிப்பாகும். அழகிய அடர்த்தியான வண்ணத்தில் நூல்கள் கொண்டு புடவையின் பார்டர் மற்றும் தலைப்பில் பூ வேலைப்பாடு செய்யப்படும் இப்புடவைகள் பெரும்பாலும் காட்டன் மற்றும் காதி துணிகளால் ஆனது.

    தெலுங்கானாவின் போச்சம்பள்ளி

    நம்ம ஊர் பெண்களை அதிகம் கவரக்கூடிய டிசைன் தான் போச்சம்பள்ளி டிசைன்கள். ஆந்திராவின் பூதன் என்ற ஊரில் தயாராவது தான் போச்சம்பள்ளி சில்க். இந்த புடவைகளின் டிசைன் ஜியாமெட்ரிக் இகட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்கள் கொண்டதாக இருக்கும். இப்புடவைகள்அழகான நிறக்கலவைகளில் பளிச்சென்று இருக்கும். இவை காட்டன் மற்றும் பட்டிலும் தற்காலங்களில் சில்க் காட்டன் புடவைகளாகவும் கிடைக்கிறது.

    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.
    புடவைகளில் தினந்தோறும் புதுவரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. புடவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்லுமளவுக்கு புது வரவுகள் ஏராளமாக வந்துள்ளன.

    அதிகம் குறிப்பாகச் சொல்வதென்றால் பார்வைக்கு மிகவும் அட்டகாசமான தோற்றத்துடன் அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் வந்திருக்கும் பனாராஸ் காட்டன் சேலைகளின் அழகை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்றே சொல்லலாம். அகலமான தங்கநிற ஜரிகையுடன் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் உடல் மற்றும் பார்டருடன் வரும் கோட்டா பனாராஸ் புடவைகள் அழகோ அழகு என்று சொல்லலாம். உடலில் ஆங்காங்கே புட்டாக்கள் இருப்பதுடன் அதன் பல்லுவானது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் வரவேற்பு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உடுத்த ஏற்ற புடவை என்று இவற்றைச் சொல்லலாம்.

    வெள்ளி நிற ஜரிகையுடன் அழகிய வண்ணங்களில் அணிவகுப்பில் வந்திருக்கும் பனாராஸ் கோரா சேலைகள் மற்றுமொரு புது வரவாகும். பாரம்பரிய வேலைப்பாடுகள் மற்றும் கண்ட்ராஸ்ட் வண்ணங்களில் நியாயமான விலையில் வந்திருக்கும் இந்தப் புடவைகள் பெண்களின் துணி அலமாரியில் கட்டாயம் இடம் பிடிக்கக் கூடிய ஒன்று என்று சொல்லலாம். செல்ஃப் எம்போஸ்டு உருவங்கள் இந்தப் புடவைகளில் இடம் பெற்றிருப்பது அதன் அழகை மேலும் கூட்டுகின்றது என்றே சொல்லலாம்.

    மிகவும் குறைந்த எடையுடன் பார்வைக்குப் பளிச்சென்றிருக்கும் ஜரி பார்டருடன் வந்திருக்கும் செமிரா சில்க் புடவைகள் சிறிய நிகழ்ச்சிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருப்பதோடு நியாயமான விலையிலும் கிடைக்கின்றன. சில்வர் மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர்களில் உடல் முழுவதும் ஒரே நிறத்தில் வரும் செமிரா சில்க் சேலைகள் மிகவும் அசத்தலாக இருக்கின்றன. நூல் பார்டர் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணத்திலும் இந்த செமிரா சில்க் புடவைகள் அழகாக உள்ளன.

    தினசரிப் பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவை என்று பிரிண்டட் செமி ஷிஃபான் புடவைகளைச் சொல்லலாம். பலவித வண்ணங்களில் அழகான டிசைன்களுடன் மிகவும் இலகுவாகவும் ஷேட்டின் பார்டர்களுடன் வந்திருக்கும் செமி ஷிஃபான் புடவைகள் அணிவதற்கு மிகவும் வசதியாக உள்ளன. இந்தப் புடவைகளில் இடம் பெறும் பூ டிசைன்கள் மிகவும் தனித்துவமான உள்ளன. இந்தப் புடவைகளுக்கு ஏற்றாற்போல் அவற்றுடனேயே இணைந்து வரும் பிளவுஸ்கள் நமது செலவையும், பிளவுஸ் தேடும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன.

    புடவையின் அழகும் அதன் விலையும் சிலிர்ப்பூட்டுமா ஆமாம் என்று சொல்லுமளவுக்கு இருப்பவை செமிலினன் மற்றும் செமி ஆர்சன்ஸா புடவைகள். ஜரி பார்டருடன் பைப்பிங் பார்டர்கள் இணைந்து புடவையில் எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் மென்மையான வண்ணங்களில் வரும் செமிலினன் புடவைகள் அணிபவருக்கு கௌரவமான தோற்றத்தைத் தருபவையாக உள்ளன. புடவையின் மேற்புறம் எளிமையான எம்பிராய்டரி டிசைனும் புடவையின் கீழ்ப்புறம் அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் கூடிய ஜரி பார்டர் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றன. இவற்றில் வரும் பாவன்ஜி பார்டர் மற்றும் ப்ரோகேட் பிளவுஸ்கள் இந்தப் புடவையின் அழகிற்கு மேலும் வலு சேர்க்கின்றன.

    இலகுவான மிகவும் இலகுவான சில்க் காட்டன் சேலைகள் இப்பொழுது புது வரவாக வந்துள்ளன. எலுமிச்சை மஞ்சள் நிறத்திற்கு காப்பர் சல்பேட் நீல வண்ண பைப்பிங் பார்டர், கடி ஜரி பார்டரில் மரூன் மற்றும் மஞ்சள் வண்ணம், பெயிஜ் மற்றும் பச்சை வண்ணத்தில் கோபுர பார்டருடன் வரும் புடவைகள், ஜரிகையே இல்லாமல் முற்றிலும் நூல் வேலைப்பாடு மற்றும் பார்டர்களுடன் வரும் இலகுரக சில்க் காட்டன் சேலைகள் மிகவும் பிரமாதமாக உள்ளன. அடர் பச்சைக்கு சிவப்பு பார்டர், அடர் மஞ்சளுக்கு அடர்த்தியான பச்சை பார்டர், மஜந்தா வண்ணத்திற்கு மஞ்சள் பார்டர், நீலத்திற்கு சிவப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மஜந்தா என இந்தப் புடவைகளில் இடம் பெறும் வண்ணங்கள் நம் கண்களுக்கு அருமையான விருந்தாக இருப்பதுடன் அணிவதற்கும் அருமையாக உள்ளன.

    குறைந்த விலை புடவைகளில் புதுவரவுகள் ஏரரளமாக வந்திருக்கின்றன. மெல்லிய பார்டரில் சின்ன கற்கள் பதித்து உடல் முழுவதும் பூ டிசைன்களில் வரும் செமி ஜியார்ஜட் சேலைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன. இந்தப் புடவைகளுக்கு பீகோ அடிக்க அவசியமில்லாமல் அந்தப் புடவைகளிலேயே குஞ்சம் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    கௌரவமான தோற்றத்தைத் தரும் புடவைகளின் வரிசையில் வாழை நார் பட்டுப் புடவைகளும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளன. அருமையான வண்ணங்களில் கான்ட்ராஸ்ட் பல்லுவுடன் வரும் இவ்வகைப் புடவைகளின் விலையோ இரண்டாயிரத்திற்குள் என்றால் நம்பவே முடியவில்லை. புடவையின் உடல் பகுதியில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் கான்ட்ராஸ்ட் பார்டரில் வரும் வாழை நார் பட்டு காண்பவரை சுண்டி இழுக்கின்றது.

    இவை மட்டுமல்லாது மைசூர் கிரேப் புடவைகள், ராஜ்கோட் படோலா பட்டு புடவைகள், எளிமையான சில்க் காட்டன் புடவைகள், கலம்காரி காட்டன் புடவைகள், பாரம்பரிய காட்டன் புடவைகள், பனாரஸ் கோரா புடவைகள், பகல்புரி பிரிண்டட் புடவைகள், பியூர் பனாரஸ் காட்டன் புடவைகள், செட்டிநாடு காட்டன் புடவைகள், போச்சம்பள்ளி இக்கத் சில்க் புடவைகள், கைகளால் அச்சிடப்படும் பிரிண்டட் சில்க் புடவைகள், மதுரம் மென்பட்டு புடவைகள், சந்தேரி சில்க் புடவைகள் என அனைத்திலும் புது வரவுகள் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

    ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்' தேவாலயத்தில் தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஹென்டன் என்ற இடத்தில் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    ஹென்டன் நகரில் பிரசித்தி பெற்ற ‘புளோரிஸ் யுனைடெட் மெதடிஸ்ட்' தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வழக்கம்போல பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது. அப்போது, தமிழ் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பாரம்பரிய முறைப்படி சேலை, பாவாடை-தாவணி அணிந்தவாறும், ஆண்கள் வேட்டி-சட்டையிலும் பங்கேற்றனர்.

    இதையடுத்து அவர்கள், தேவாலயத்தில் உள்ள பீடத்தில் நின்று தமிழ் பாடலை தங்களுக்கே உரித்தான பாணியில் ஒருமித்த குரலில் பாடினர். இதனை தேவாலயத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களும் ரசித்து பாராட்டினர்.
    கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.
    கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’.

    கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள்.

    கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

    கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின் பார்டர் மற்றும் பல்லுவில் இருப்பது போல் வடிவமைக்கிறார்கள். கையால் அச்சிடப்படும் இவ்வகைப் புடவைகள் பல்வேறு வடிவமைப்புகளுடன் அனைவராலும் வாங்கக் கூடிய விலையில் வருகின்றன. கலம்காரி டிசைன்களில் வரும் காட்டன் புடவைகளை பெரும்பாலான பெண்கள் உடுத்துவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும். இப்புடவைகள் தினசரி உடுத்திக் கொள்ள ஏற்றவை.

    கலம்காரி க்ரேப் புடவைகள்:- இலகுரக புடவைகளை விரும்புபவர்களின் சரியான தேர்வு இவ்வகை க்ரேப் புடவைகள் மிகவும் மெல்லிய துணியால் உருவாக்கப்படும் இவை அணிபவரின் உடலில் லேசான உணர்வைத் தருகின்றன. திறமையான கைத்தறி நிபுணர்களால் இவ்வகை புடவைகளில் டிசைன்கள் அச்சிடப்படுகின்றன. அலுவலகம் செல்லும் பெண்கள் தினசரி அணிய ஏற்றவை இவை.

    டிசைனர் கலம்காரி புடவைகள்:- ஆடம்பரமான தோற்றம், வாங்கக்கூடிய விலை இவையே இப்புடவைகள் அதிக அளவில் தேவையை ஏற்படுத்துவதற்குக் காரணம். பல்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் வரும் இவை தனித்தன்மையைக் கொண்டவையாக இருக்கின்றன. டிசைனர் கலம்காரி புடவைகள் கையால் நெய்யப்பட்ட மற்றும் கையால் அச்சிடப்பட்ட கைவினைத் திறன் சேர்ந்த கலவையாகும்.

    கலம்காரி பிரிண்டட் புடவைகள்:- இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக இவற்றைச் சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன.

    கலம்காரி பார்டர் புடவைகள்:- உடல் முழுவதும் பிளையின் வண்ணத்தில் இருக்க புடவையின் பார்டர்கள் கலம்காரி டிசைனில் வருவது நேர்த்தியான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. கான்ட்ராஸ்ட் நிறங்களில் கலம்காரி பார்டர்கள் மற்றும் பல்லு இருப்பது போல் வரும் இவ்வகை புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    கலம்காரி பட்டுப் புடவைகள்: திருமண நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிய ஏற்ற புடவைகள் இவையாகும். ராசில்க் துணி வகைகளில் உற்பத்தி செய்யப்படும் இவ்வகை பட்டுப் புடவைகள் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. பரந்த அளவிலான பாரம்பரிய மற்றும் சமகாலப் பாணிகளுடன் வரும் இந்த பட்டுப் புடவைகள் அனைத்துப் பெண்களிடமும் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

    கையால் வண்ணம் தீட்டப்படும் கலம்காரி புடவைகள்:- திறமையான கைவினைஞர்களால் கைகளால் வரைந்து வண்ணம் தீட்டப்படும் இவ்வகைப் புடவைகளை வாங்குவதற்கென்றே தனியான ரசிகைகள் இருக்கிறார்கள். இப்புடவைகளில் பழங்கால புராண கதைகள் மற்றும் ஓவியங்களில் வரும் படங்களை வண்ணமயமாகவும் துடிப்பாகவும் சித்தரித்து உருவாக்குகிறார்கள்.

    கலம்காரி ஜியார்ஜெட் புடவைகள்:- உடலமைப்பை குறைத்துக் காட்டும் இவ்வகைப் புடவைகள் பெரும்பாலான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ள நவீனப் போக்கு சேலைகளாகும். இவற்றை அணிவதும், பராமரிப்பதும் எளிது.

    கலம்காரி ஷிஃபான்புடவைகள்:- உடல் முழுவதும் பூக்களால் அச்சிடப்பட்டு வரும் இவ்வகை புடவைகள் அணிவதற்கு இலகுவாகவும், வாங்கக்கூடிய விலையிலும் இருக்கின்றன.

    கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள்:- காட்டன்
    புடவைகளில் வரும் கலம்காரி பேட்ச் வொர்க் புடவைகள் அபாரமாக இருக்கின்றன. அலுவலகம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற புடவைகள் இவை.

    ஹாஃப் அண்டு ஹாஃப் புடவைகள்:- புத்தம் புதிய போக்கில் வந்திருக்கும் இவை ஹாஃப் சேரி மாடலில் இருக்கின்றன. தனித்துவமான வடிவமைப்புடன் வரும் இவை பெண்களின் இளவயதில் பாவாடைத் தாவணி அணிந்த நாட்களை ஞாபகப்படுத்தும் விதத்தில் உள்ளன.

    சந்தேரி கலம்காரி புடவைகள்:- சந்தேரி காட்டன் சில்க் காட்டன் மற்றும் ப்யூர்சில்க் துணிகளில் இப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வகைப் புடவைகளை அணியும்பொழுது கௌரவமான தோற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு பிடித்த புடவைகளில் முதன்மையான இடத்தை இவை பெற்றிருக்கின்றன.

    இவை மட்டுமல்லாது பெத்தண்ணா (ஆந்திரா) கலம்காரி புடவைகள், கேரளா கலம்காரி புடவைகள் என கலம்காரி புடவைகளில் ஏராளமான வகைகள் உள்ளன. பிளெயின் புடவைகளுக்கு கலம்காரி பிளவுஸ்களை அணியும் பொழுது அவை மிகவும் துடிப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றது. அதேபோல், பளிச்சென்றிருக்கும் கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் புரோகேட் பிளவுஸ்களை அணியும் பொழுது அவை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளன. கலம்காரி புடவைகளுக்கு கான்ட்ராஸ்ட் பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதும் இன்றைய போக்காக உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி 1½ கோடி குடும்பத்துக்கு இலவச வேட்டி-சேலை திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டு மல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

    2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படுகிறது.

    இதை பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



    பொதுப்பணித் துறையின் கீழ்செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட அமைப்பில் காலியாக உள்ள 91 உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் 40 உதவிப் பொறியாளர் (பணி) இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 131 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 4கோடியே 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள், 1 ஆங்கில மொழி ஆய்வகம், 4 ஆய்வகத் தொகுப்பு மற்றும் கழிவறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் கரூர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 பொன்விழா நினைவு வகுப்பறைக் கட்டிடங்கள், காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டிடங்கள், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டிடம், சைதாப்பேட்டையில் உள்ள அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடங்கள், சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் 87 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் பல்நோக்குக்கூடம், சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள், பல் நோக்குக்கூடம், மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டிடங்கள், செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகட்டிடங்கள் உள்பட என மொத்தம் 25 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன.
    இயற்கையை விரும்பும் மக்கள் இயற்கையான பொருட்களால் தயாராகும் பொருட்களின் மீதும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் என்பதும் தற்போது இயற்கை சார்ந்த வகையில் உருவாக்கம் பெறுகின்றன. அதாவது ஆர்கானிக் பருத்தி சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் அருமை, பெருமை அறிந்து பல பெண்களும் இதனை விரும்பி வாங்கி உடுத்தி கொள்கின்றனர். ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது பருத்தி விளைவது முதல் நெய்தல் வரை அனைத்தும் இயற்கையான முறையில், இயற்கையான பொருட்கள் கொண்டும் தயார் செய்யப்படுகிறது.

    ஆர்கானிக் பருத்தி சேலைகள் என்பது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், திருச்சி மாவட்டம் மணமேடு, சேலம் மற்றும் பரமக்குடி போன்ற பகுதியில் உள்ள நெசவாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பின் விற்பனைக்கு வருகின்றன. ஆண்டுக்கு ஆண்டு மவுசு அதிகரித்து கொண்டே வரும் இயற்கை பருத்தி சேலையின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. இயற்கையோடு இயைந்த வாசமிகு சேலை என்பதால் இதனை நேசத்தோடு பெண்டீர் வாங்கி மகிழ்கின்றனர்.

    இயற்கை பருத்தியால் உருவாகும் சேலைகள்

    இயற்கை பருத்தி எனும்போது முழுக்க முழுக்க ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பருத்தி தான் இச்சேலை தயாரிக்கப்பயன்படுத்தப்படுகிறது. இதற்கென இயற்கை ஆர்வலர்கள் மூலம் பயிர் பருத்தி ஆய்வு செய்யப்பட்டு வாங்கப்படுகிறது. பின் அந்த பருத்தியின் மூலமே நூல் நெய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இதனை இயற்கை (அ) ஆர்கானிக் பருத்தி சேலை என்கின்றனர். மேலும் நூலில் ஏற்றப்படும் சாயம் மற்றும் வண்ணம் சேர்க்கை என்பது இயற்கை முறையிலேயே அரங்கேற்றப்படுகின்றன.



    இயற்கை முறையில் சாயமேற்றுதல்

    இயற்கை பருத்தி என்பது நூலாக நூற்பாலைகளில் திரிக்கப்படும். பின் இந்த நூலில் இயற்கை முறை சாய ஆலைகளில் தயார் செய்யப்பட்ட காய கரைசல்கள் கொண்டு மூழ்க வைக்கப்பட்டு சாயம் ஏற்றப்படுகிறது. அதாவது சரிசலாங்கன்னி, அரளிப்பூ, சங்குப்பூ, புளியமரச் சுள்ளி, புளியம்பழம், செவ்வாழை, கடுக்காய், செண்டுமல்லி, பலாசம்பூ, அவரை இலை அவுரி, மாதுளம் தோல், அவுரி போன்றவை உலர வைத்து பொடியாக்கப்பட்டு, அதனை நீரில் ஊற வைத்து காய்ச்சியும், காய்ச்சாமலும் இயற்கை சாயம் உருவாக்கப்படுகிறது. இந்த இயற்கை சாற்றின் கரைசலில் நூல்கள் சாயமேற்றப்பட்டு விதவிதமான வண்ணங்கள் பெறப்படுகிறது. இவ்வாறு உருவாகும் நூலின் வண்ணம் மங்காமல் இருக்க இதனை மறுபடியும் வெற்றிலை சாற்றில் ஊற வைத்த பின் தேங்காய் எண்ணெய் (அ) வேப்ப எண்ணெயில் நனைத்து உலர வைக்கப்படும். இந்த சாயமேற்ற நூல்களில் தான் பருத்தி சேலை நெய்யப்படும்.

    கைத்தறி நெசவாளர்கள் மூலமாக இயற்கை சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூல்கள் மூலமாக அழகிய வண்ணமிகு சேலைகள் விதவிதமாக நெய்யப்படுகின்றன. இவ்வாறு நெய்யப்பட்ட சேலையே இயற்கை பருத்தி சேலைகள் எனப்படுகிறது. இயற்கை பருத்தி சேலைகள் என்பது மற்ற பருத்தி சேலையை போன்று ரசாயன நாற்றமோ, பசை நாற்றமோ இன்றி முழுக்க முழுக்க மணமணக்கும் வாசத்துடன் வெளி வருகின்றன. இயற்கை பருத்தி, இயற்கை வண்ணம், இயற்கையான வாசம் என்பதில் தனித்து விளங்கும் இச்சேலைகள் மங்கையர் விரும்பும் வண்ண கலவையுடன் விதவிதமான டிசைன்களில் வடிவமைத்து நெய்து தரப்படுகின்றன.

    கோடை காலம், மழை காலம் என இரண்ட பருவ காலத்திலும் அணிய ஏற்ற சேலையாக திகழ்கிறது. மேலும் இதன் ரசாயன கலப்பில்லாத நூலும், சாயமும் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் போது சருமத்திற்கு எந்த பாதிப்ை-யும் எற்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத இயற்கை விவசாய முறையில் பயிர் செய்யப்பட்ட இயற்கை வண்ணம் பூசப்பட்ட இச்சேலைகள் அழகிய தோற்ற பொலிவை தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இயற்கை பருத்தி சேலைகள் இளநங்கையர்களின் விருப்பமான சேலையாகவும் திகழ்கிறது.
    சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.
    சேலை என்றாலே அதை நூலால் நெய்யப்பட்ட காந்தம் எனலாம். சேலைகள் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பெரிதும் கவர்கின்றது.

    என்ன தான் மெடி, சுடிதார், ஜீன்ஸ் என ஆயிரம் உடைகள் வந்தாலும், சேலை கட்டி வீதியில் உலாவரும் பெண்கள் வெளிப்படுத்தும் அழகே அழகுதான்.

    அதனால் தான் கவியரசு வைரமுத்து ‘சேலைச் சோலையே...’ என்று பாடி சேலையை சோலைக்கு ஒப்புமைப்படுத்தி மகிழ்கிறார். இன்னொரு கவிஞர்கூட, காஞ்சிப் பட்டு உடுத்திக் கஸ்தூரிப் பொட்டுவைத்து நேரில் தோன்றும் பெண்ணொருத்தி தேவதைபோல் தோற்றமளிப்பதாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

    அன்றாடம் சேலையின் பெருமைகள் நமது செவிகளில் தேன் பாய்ச்சி கொண்டுதானே இருக்கிறது. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற சேலைகளுக்கு, அவை தோன்றி வளர்ந்து முழுமை பெற்றதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதைத் தெரிந்துகொள்ள நமக்கெல்லாம் ஆவல் பிறக்கிறதல்லவா?

    சேலை, சீலை, சீரை இந்த மூன்று சொற்களுமே பண்டைக்காலத்தில் துணி என்ற பொதுவான பொருளையே குறிப்பதாக விளங்கின. இப்போதுதான் அவை பெண்கள் தங்கள் இடையில் தொடங்கி உடல் முழுவதும் சுற்றிக்கொள்ளும், ஆடை வகையாகக் கருதப்படுகிறது.

    இந்தியப் பெண்கள் பின்பற்றும் சேலை அலங்காரம் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்ணுடைகளிலும் தலைசிறந்ததாகப் புகழப்படுகின்றது.

    இந்தியாவில் பெண்கள், சேலை உடுத்திக்கொள்வது எப்போது தோன்றியது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் ஆதியில் பெண்கள் தங்கள் இடையில் சொருகிக் கொண்ட சிறுதுணி வளர்ச்சியடைந்து சேலையாக மாறி இருக்காலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் பெண்கள் தற்போது அணியும் கண்ணைக் கவரும் சேலை முறை ஆரிய மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தோன்றியது என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம்.

    பண்டைக்காலத்தில் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்த நாடுகளான சுமேரியா, அசிரியா, எகிப்து பகுதிகளில் (ஏறக்குறைய கி.மு. 3500-ம் ஆண்டு) பயன்படுத்தியிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிற ஒரு சேலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அது இந்தியச் சேலை வகையைப் போலவே தோற்றமளிக்கிறதாம்.

    ஆதியில் பெண்கள், இடையை மறைக்க ஒரு துணியையும், மார்பை மறைக்க தாவணி போன்றதொரு துணியையும் பயன்படுத்தியிருக்கலாம். முந்தானை அணியும் முறை வேதகாலத்திலேயே உண்டாகியிருக்கலாம். தார்போட்டுக்கட்டும் பழக்கம் மத்திய இந்தியாவில் தோன்றி தென்னாட்டுக்குப் பரவியதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



    டாக்டர் குரியே என்பவர் சேலையின் வளர்ச்சிக் காலத்தை மூன்று பிரிவாகப்பிரிக்கிறார். ஆதிகாலம் முதல் கி.மு. 320 வரை முதல் பிரிவு. இக்காலத்தின் இறுதியில் தோன்றிய சிற்பங்களும் இலக்கியங்களும் தார்போட்டுக்கட்டும் முறை, தார் போடாமல் கட்டும் முறை, சேலை ரவிக்கை அணியும் முறை ஆகிய மூன்று வகைகளில், பெண்கள் சேலையை உடுத்தி வந்ததாகச் சுட்டிக்காட்டுகின்றன.

    இரண்டாவது காலம் கி.மு. 320-ல் இருந்து கி.பி. 320 வரை. இக்காலத்தில்தான் முன்கொசுவம் வைத்துக் கட்டும்முறை, குடகு முறை பாவாடை-தாவணி அணியும் முறை ஆகியவை தோன்றியதாம்.

    மூன்றாவது பிரிவு கி.பி. 320-ல் இருந்து 1100 வரை உள்ள காலத்தை உள்ளடக்கியது. நிலப்பகுதியின் சூழ்நிலைக்கும், தட்ப வெப்பநிலைக்கும் ஏற்றாற்போல் சேலை அணியும் முறையில் பல மாறுதல்கள் தோன்றியது இக்காலத்தில் தான்.

    ராஜசேகரர் என்பவர் 10-ம் நூற்றாண்டில் இருந்து சேலை கட்டும் முறையை நான்கு வகைகளாகப் பிரித்திருக்கின்றார். ஒன்று, முன் கொசுவம் வைத்து, இடையில் உடுத்தி முந்தானையை இடத்தோளில் போட்டுக் கொள்ளுதல். இவற்றில் வங்காளம், குஜராத் பகுதிகளில் முந்தானை இடும் முறை மாறுபடுகின்றது.

    இரண்டாவதாக, தார் போட்டுக் கட்டும் முறை. இம்முறை மராட்டியத்திலும், மத்திய இந்தியாவிலும் அதிகமாக் காணப்படுகிறது. மூன்றாவது, பாவாடை, தாவணி அணியும் முறை. இதில் சேலையின் அளவு குறைந்தும், பாவாடை பெரியதாகவும் காணப்படும். அடுத்தது, ஆதிவாசிகளும், மலைவாழ் மக்களும் உடுத்தும் அகலம் குறைந்த சேலை முறை.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், ராஜசேகரர் கூறிய நான்கு முறைப்படிதான் சேலை கட்டும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் எல்லா இடங்களிலும் தற்போது பெண்கள் ஒரே மாதிரி சேலை உடுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். தார்போட்டுக் கட்டும் பழைய முறைகள் முற்றிலும் இந்தியாவில் அழிந்துவிடவில்லை. ஆனால் முன் கொசுவம் வைத்துக் கட்டும் முறையையே இளம்பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

    இறுதியாக புதுமைகள் விரும்பும் தமிழ் பெண்களுக்கு ஒரு செய்தி. சேலை என்பது நீங்கள் உடம்பில் சுற்றிக்கொள்ள உபயோகப்படுத்தும் ஆடைவகை மட்டுமல்ல. அது நமது பாரம்பரியம். அது நமது கலாசாரம். அது உங்களைத் தமிழ் இனப் பெண்கள் என்று உலகமே அறிந்து புரிந்து கொள்ளப் பயன்படும் அடையாளமும்கூட.

    தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக அன்னிய முறை ஆடைகளையே பெரிதும் விரும்பி அணிகிறார்கள். புதுமைகளை வரவேற்க வேண்டியதுதான்.

    ஆனால், அவை நம் அடையாளங்களையே அழித்து ஒழித்துவிடக்கூடிய அளவுக்கு ஆதரவு கரம் நீட்டலாமா? சேலைக்கு உலைவைக்கும் இளையதலைமுறை மாற வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் இனப்பெண்களின் அடையாளமான சேலை காட்சிப்பொருளாகிப் போகும்.

    எழுத்தாளர் எல்.பிரைட்
    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குன்னூர் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் இலவசமாக வேட்டி, சேலைகளில் தைக்கப்பட்ட துணி பைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். #Plasticban
    குன்னூர்:

    தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.



    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மளிகை, ஜவுளி உள்ளிட்டவைகள் வாங்க பைகள் இன்றி பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    காட்டன் துணியால் துணிப்பைகள் தயாரிக்க ரூ.10 முதல் ரூ.16 வரை செலவாகிறது. இதனால் இவைகளை வாங்க, விற்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

    இந்நிலையில் குன்னூர் மார்க்கெட்டில் உள்ள சில கடைகளில் தமிழக அரசு பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகளில் தைக்கப்பட்ட துணி பைகளை விற்பனைக்கு மாட்டி வைத்துள்ளனர். இந்த பைகள் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ரேசன் கடைகளில் மக்கள் வாங்காமல் தேங்கி கிடைக்கும் இலவச வேட்டி- சேலைகளை கள்ள மார்க்கெட்டில் வாங்கி பைகளாக விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில் தமிழக அரசின் இலவச வேட்டி, வேலைகள் பைகளாக தயாரித்து விற்பனைக்கு வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Plasticban

    ×