search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99216"

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்ரீநகர்-சார்ஜா விமானம், தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் திடீரென தடை விதித்துள்ளது. அந்த விமானம் வேறு பாதையில் செல்வதால், கூடுதலாக 1½ மணி நேரம் செலவாகிறது.

    காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்ரீநகர்-சார்ஜா இடையே நேரடி விமான சேவை, கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை தொடங்கி வைத்தார். ‘கோ பர்ஸ்ட்’ என்ற தனியார் விமான நிறுவனம், இந்த வழித்தடத்தில் விமானங்களை இயக்கி வருகிறது.

    கடந்த 23-ந்தேதி தொடங்கி, ஒரு வாரமாக பாகிஸ்தான் வான்வெளி வழியாக இந்த விமானங்கள் சென்று வந்தன.

    இந்தநிலையில், தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் திடீரென தடை விதித்திருப்பதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதனால், கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் மற்றும் ஓமன் நாடு வழியாக ஸ்ரீநகர்-சார்ஜா விமானங்கள் சென்று வருகின்றன. இது கூடுதல் தூரம் என்பதால், பயண நேரம் கூடுதலாக 1½ மணி நேரம் ஆகிறது.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றிடம் கேட்டபோது, பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூர்வ செய்தி எதுவும் வரவில்லை என்று தெரிவித்தன.

    ‘கோ பர்ஸ்ட்’ விமான நிறுவன செய்தித்தொடர்பாளரும் எதுவும் கூற மறுத்து விட்டார்.

    சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    சென்னை:

    திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 170 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது எஞ்சினில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதனால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

    விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தது. அத்துடன் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.



    தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    சிரியாவில் வெடித்த உள்நாட்டு போரால் நிறுத்தி வைக்கப்பட்ட விமானப் போக்குவரத்தை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நாளை தொடங்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது.
    பாக்தாத்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலமையிலான ஆட்சிக்கு எதிராக அங்குள்ள போராளி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2011-ம் ஆண்டில் சிரியாவுக்கு செல்லும் விமானங்களை ஈராக் அரசு நிறுத்தி விட்டது.

    இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையிலான வான்வழி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) முதல் பாக்தாத்தில் இருந்து டமாஸ்கஸ் நகருக்கு விமானங்களை இயக்க ஈராக் அரசு தீர்மானித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் லயாத் அல்-ருபாயி வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்கட்டமாக வாரமொரு விமானம் இயக்கப்படும். படிப்படியாக விமானச்சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    மீனம்பாக்கத்தில் நெருக்கடியை குறைக்க தாம்பரத்தில் இருந்து சிறிய விமானங்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள் நாட்டு முனையம், வெளி நாட்டு முனையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தினந்தோறும் 470 விமான சேவை இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது உள்நாட்டு விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே 70 முதல் 80 பயணிகள் வரை பயணம் செய்யும் சிறிய விமானத்தை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக விமான நிலைய அத்தாரிட்டி அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்காக சிறிய பயணிகள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    இது தொடர்பான ஆலோசனை முக்கிய அதிகாரிகள் தலைமையில் நடந்துள்ளது. இதுபற்றி இந்திய விமானப் படைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இது தொடர்பான திட்டத்துக்கு அனுமதி அளித்ததும் உடனடியாக பணிகள் தொடங்கப்படும்’ என்றார்.

    ஈரானில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. #Iran #FlightFireAccident
    தெஹரான்:

    ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள மெக்ராபாத் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு, ‘ஈரான் ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் 100 பயணிகளும், விமான ஊழியர்கள் சிலரும் இருந்தனர்.

    விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் விமானத்தில் தீப்பிடித்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

    இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. விமானத்தில் இருந்து பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது.  #Iran #FlightFireAccident 
    சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற விமானத்தில் ஒரு பெண் பயணி தனது குழந்தையை மறந்து வந்து விட்டதாக கூறியதால் அந்த விமானம் அவசரமாக ஜெட்டாவில் தரையிறங்க நேர்ந்தது. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சமீபத்தில் சவுதி நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டு சென்றது.

    வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதில் வந்த ஒரு பெண், தனது குழந்தையை ஜெட்டா விமான நிலையத்தின் வரவேற்பு பகுதியில் மறந்து விட்டுவிட்டு, விமானத்தில் ஏறி விட்டதாகவும், குழந்தையை கொண்டு வருவதற்காக விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் பணிப்பெண்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. விமானியும் ஜெட்டா விமான நிலையத்தை தொடர்புகொண்டார். நிலைமையை எடுத்துக்கூறி அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

    வழக்கமாக, விமானங்களில் மிகவும் ஆபத்தான கோளாறு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இதுபோன்ற அனுமதி அளிக்கப்படும். மற்றபடி, விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு அந்த பகுதியில் வட்டமடிக்கவோ, உடனடியாகவோ தரையிறங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.



    இந்நிலையில், குழந்தையை தவறவிட்டு விமானத்தில் ஏறிவிட்ட அந்த தாயின் வேண்டுகோளின்படி ஜெட்டா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க ஜெட்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சிறிதுநேர ஆலோசனைக்கு பின்னர் அனுமதி அளித்ததாக சவுதி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

    கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் அந்த விமானி பேசிய பதிவுகளையும் சில ஊடகங்கள் வீடியோவாக வெளியிட்டுள்ளன. #Saudiplane #jeddahairport #motherforgetsbaby
    பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்-2000 விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.

    இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.

    இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.

    ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.

    இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.

    இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.

    இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.

    எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.

    இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமான நிலையங்களின் நிர்வாகம், பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. #Adanigroup #Adanigroupwins #fiveairportsbids
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்திய விமானப்போக்குவரத்து முகமையிடம் இருந்த இந்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு உலகத்தரமான சேவைகளை வழங்கும் வகையில் பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

    மேற்கண்ட விமான நிலையங்களை பராமரிப்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அகமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை பராமரிக்க தலா 7 நிறுவனங்களும், லக்னோ, கவுகாத்தி விமான நிலையங்களை பராமரிக்க தலா 6 நிறுவனங்களும், திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்க தலா 3 நிறுவனங்களும் முன்வந்து டெண்டரில் பங்கேற்றன. மொத்தம் 10 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன.

    இவற்றில் அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருந்த பிரபல தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 5 விமானங்களை பராமரித்து நிர்வகிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

    கவுகாத்தி விமான நிலையம் தொடர்பான தகவல் ஏதும் இன்றுவரை வெளியாகவில்லை. #Adanigroup #Adanigroupwins #fiveairportsbids 
    வங்காளதேசம் நாட்டின் டாக்கா நகரில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்த முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டுள்ளனர். #planehijackAttempt #Dubaiboundplane #planehijack #Bangladeshplanehijack
    டாக்கா:

    வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 245 கிலோமீட்டர் தூரத்தில் அந்நாட்டின் தென்கிழக்கு கடற்கரை பகுதியில் பிரபல துறைமுக நகரமான சட்டோகிராம் என்னும் நகரம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், வங்காளதேச அரசுக்கு சொந்தமான ‘பிமன் பிஜி 147’ வழித்தட எண் கொண்ட போயிங் ரக விமானம் டாக்கா விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை சுமார் 5 மணியளவில் 142 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

    புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கையில் துப்பாக்கியுடன் விமானியின் அறைக்குள் நுழைந்த ஒரு பயங்கரவாதி விமானியை மிரட்டி, விமானத்தை கடத்திச் செல்ல முயன்றான்.

    இதையடுத்து, தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, அருகாமையில் உள்ள சட்டோகிராம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். 

    அதற்குள் சட்டோகிராமில் உள்ள ஷா அமானத் விமான நிலையத்தில் ஏராளமான போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். மாலை 5.40 மணியளவில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.

    அதில் இருந்த 142 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், உள்ளே இருக்கும் பயங்கரவாதியை தாக்கிப் பிடிக்க அதிரடிப்படையினர் அந்த விமானத்தை சூழந்து முற்றுகையிட்டுள்ளதாகவும் டாக்காவில் இருந்து வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #planehijackAttempt #Dubaiboundplane #planehijack #Bangladeshplanehijack
    ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். #Italy #Helicopter #PlanceCrash
    ஆல்ப்ஸ்:

    இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே அஸ்டா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

    அங்கு உள்ள மலையில் ஏறுவதற்காக 4 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். விமானி மற்றும் மலையேற்ற பயிற்சியாளர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்தனர்.

    இதற்கிடையே பயிற்சி விமானிகள் 3 சிறிய ரக விமானத்தில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பயிற்சியாளர் விமானத்தில் இருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் மாயமாகினர்.

    விமான பயிற்சியாளர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 
    கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம் குளிரில் தவித்தனர். #Canada #UnitedAirlines
    மாண்ட்ரியல்:

    அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து ஹாங்காங்குக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 250 பயணிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது ஒரு பயணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே விமானத்தை கனடாவில் உள்ள நியூ பவுண்டுலேண்டு என்ற இடத்தில் விமானி அவசரமாக தரை இறக்கினார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பயணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதையடுத்து விமானம் புறப்பட தயாரானது. ஆனால் கடும் பனி கொட்டியது. தட்பவெட்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆனது. எனவே விமானம் இயங்காமல் என்ஜின் கோளாறு ஏற்பட்டது.

    விமானத்தின் கதவு பனிப்பொழிவால் உறைந்து விட்டது. இதனால் திறக்க முடியவில்லை. எனவே பயணிகளால் வெளியே செல்ல முடியவில்லை. பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். போர்த்திக்கொள்ள மெல்லிய கம்பளி மட்டுமே கொடுக்கப்பட்டது. இதனால் விமானத்துக்குள்ளேயே 16 மணி நேரம் கடும் குளிரில் நடுங்கியபடி அவதிப்பட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காபி மற்றும் நொறுக்கு தீனி வழங்கப்பட்டது. பொழுது விடிந்த பிறகு வெயில் பட்டதும் விமானத்தின் கதவு திறக்க முடிந்தது. அதன் பின்னர் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறி பஸ் மூலம் வேறு விமானத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    மதியம் அவர்கள் மீண்டும் அமெரிக்காவின் நெவார்க் நகருக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். #Canada #UnitedAirlines 
    சென்னைக்கு வந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை இந்தூர் டாக்டர் காப்பாற்றிய சம்பவம் குறித்து அவரை சக பயணிகள், விமான ஊழியர்கள் பாராட்டினர். #Indoredoctor #AkhileshDubey
    இந்தூர்:

    சென்னையைச் சேர்ந்த அனந்தராமன் என்பவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டு இருந்தார்.

    விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அனந்த ராமனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இருக்கையிலேயே சுயநினைவின்றி மயங்கினார்.

    இதை பார்த்த சக பயணிகள் விமான ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் விமானத்தில் டாக்டர் யாராவது பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டனர்.

    விமானத்தில் பயணம் செய்த இந்தூரைச் சேர்ந்த டாக்டர் துபே, அனந்தராமனுக்கு சிகிச்சை அளித்தார்.

    அப்போது அவருக்கு நாடி துடிப்பு இல்லாமல் இருந்தது. மேலும் மூச்சும் விடவில்லை. உடனே அனந்தராமனுக்கு கார்டியோபுல் மோனரி மறு இயக்க சிகிச்சை அளித்தார். சுமார் 1½ மணி நேர சிகிச்சைக்கு பிறகு அனந்தராமனின் நாடி துடிப்பு, முச்சு விடுதல் சீரானது.

    இதையடுத்து விமானம் தரை இறங்கியதும் அனந்த ராமன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பயணியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் துபேவை சக பயணிகள், விமான ஊழியர்கள் பாராட்டினர். #Indoredoctor #AkhileshDubey
    ×