search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99375"

    இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
    புதுடெல்லி :

    3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
    நாட்டில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 50 முதல் 73 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.
    புதுடெல்லி:

    இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ராம்ஸ்வரூப் சர்மா, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மக்களவை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் நந்த் குமார் சிங் சவுகான் மற்றும் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியின் மக்களவை உறுப்பினர் மோகன் தேல்கர் ஆகியோர் மரணமடைந்தனர்.
     
    இதையடுத்து, காலியாக உள்ள இந்த 3 மக்களவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதேபோல், பல்வேறு காரணங்களால் காலியாக இருக்கும் பீகார், அசாம், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    இதில் இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா சிங் மற்றும் இந்திய தேசிய லோக்தள தலைவர் அபய் சவுதலா உள்பட பல முக்கியமான வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 

    இந்நிலையில், 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த தேர்தலுக்கும் பொதுத்தேர்தல் போல பல மாநிலங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் முடிவுக்காக அந்தந்த மாநில மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.

    இந்நிலையில், இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க. 14 இடங்களையும், அ.தி.மு.க. 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என தெரியவந்துள்ளது.
    கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் துளசியம்மாள் என்ற 103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினார்.
    கோவை:

    தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.



    இன்றைய தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் சட்டசபை தொகுதியில் துளசியம்மாள் என்ற 103 வயதான மூதாட்டி தனது ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினார். உறவினர்கள் துணையுடன் வந்த துளசியம்மாள் பாப்பம்பட்டி அரசுப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில்  தனது வாக்கினை பதிவு செய்தார்.
    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக மற்றும் திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

    பதற்றமான 29 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

    இந்தநிலையில் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் அருகே அ.தி.மு.க., தி.மு.க.வினர் தேர்தல் பணிமனைகளை அருகருகே அமைத்திருந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் அங்கு அதிக அளவில் குவிந்திருந்தனர்.

    திடீரென அரசியல் கட்சியினர் திரண்டு நின்றதால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சற்றே பீதியுடன் காணப்பட்டனர்.

    உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் சென்று ஏன் இங்கு திரண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தி.மு.க.வினர் தங்களது வேட்பாளர் செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர். நீங்கள் இப்படி திரண்டு நிற்பதால் வாக்காளர்கள் அச்சம் அடைந்து இருப்பதாக கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

     


    இதேபோல் அ.தி.மு.க. வினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர். போலீசாருடன் தர்க்கம் செய்த தி.மு.க.வினர் நாங்கள் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறி வாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி மைக் மூலம்  எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அங்கிருந்து கலைந்து அருகில் உள்ள தெருவில் நாற்காலிகளை போட்டு அமர்ந்தனர். அங்கிருந்தும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு எந்த விதமான இடை யூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் கூறுவதாகவும், உடனே கலைந்து செல்லுமாறும் போலீசார் தொடர்ந்து கூறினர்.

    ஆனாலும் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி அங்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியல் 250 வாக்குச்சாவடிகளிலும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நின்றுகொண்டு தி.மு.க. மற்றும் எங்கள் தோழமை கட்சியினரின் களப்பணியை தடுத்து வருகிறார்கள். அதாவது எங்கள் கட்சி சின்னத்தை எடுத்துக்கூறுவதற்கு கூட அனுமதி மறுக்கிறார்கள்.

    மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். 300 மீட்டருக்கு அப்பால் வேட்பாளரின் பெயர், சின்னத்தை பிளக்சாக வைக்க தேர்தல் ஆணையமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கிறது.

    அதே நேரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரின் பிளக்ஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன் வைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இது காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
    சென்னை:

    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  இதில் திருப்பரங்குன்றம் தொகுதி சற்று வித்தியாசமானது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த தொகுதி 2-வது முறையாக இடைத்தேர்தலை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்த தொகுதிகளில் காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கும். ஏற்கனவே அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இடைத்தேர்தல் நடப்பதால், வாக்காளர்களின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும்.

    இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. சில இடங்களில் மாதிரி வாக்குப்பதிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழிக்காமல் விட்டுவிட்டனர்.

    அதன் அடிப்படையில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனை முன்னிட்டு 13 வாக்குச்சாவடியிலும்  மறுவாக்கு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    சென்னை:

    அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (19-ந்தேதி) நடக்கிறது.

    நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல் அமீது, மக்கள் நீதிமய்யம் சார்பில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் போட்டியிடுகிறார்கள்.

    இங்கு ஆண்கள் 99,052 பேரும், பெண்கள் 1,06,219 பேரும், இதர வாக்காளர்கள் 2 என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் 159 இடங்களில் 250 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 29 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 4 பேலட் யூனிட்டுகள் (பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்தும் எந்திரம்), ஒரு கண்ட்ரோல் யூனிட் (வாக்குப்பதிவினை கட்டுக்குள் வைத்திருக்கும் எந்திரம்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான விவிபேட் எந்திரம் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக 1199 பேலட் யூனிட்டுகள், 295 கண்ட்ரோல் யூனிட்டுகள், 313 விவிபேட் எந்திரங்கள் தயார் நிலையில் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவை இன்று மதியத்திற்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. 1200-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. 4 கம்பெனிகளை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் 320 பேர் தேர்தல் பணிக்காக வந்துள்ளனர். துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சூலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வி.பி. கந்தசாமி, தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, அ.ம.மு.க. சார்பில் சுகுமார், மக்கள் நீதி மய்யத்தில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 130 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு உள்ளது.

    அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சூலூர் தொகுதியில் 778 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், 388 கட்டுப்பாட்டு எந்திரங்களும், வி.வி. பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) 422-ம் பயன்படுத்தபப்பட உள்ளது.

    மாற்றுத் திறனாளிகளுக்காக 324 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் மையம் எது என்பதை எளிதாக கண்டறிய ஏற்கனவே பூத் சிலிப்புகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

    சூலூர் தொகுதியில் 324 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள 778 மின்னணு எந்திரங்கள் சூலூர் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டு சின்னம் பொருத்தப்பட்டது. இந்த மின்னணு எந்திரங்களை வாக்குச் சாடிக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. காலை முதல் சூலூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஓட்டுப்பதிவுக்கு தேவையான மை உள்ளிட்ட பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்கள் இன்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு செல்கிறார்கள்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர்.

    சூலூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 397 பேர். பெண்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் ஆவார்கள்.

    சூலூர் தொகுதியில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 324 பேரும், கூடுதல் பார்வையாளர்கள் 400 பேரும், 9 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. மக்கள் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 37 பேர் களத்தில் உள்ளனர். இங்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 பேர் ஆண் வாக்காளர்கள். 1 லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் பெண் வாக்காளர்கள். 27 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் அவனியாபுரத்தில் 150-ஏ, 186-ஏ, வாக்குச் சாவடிகள் முற்றிலும் பெண்களுக்கானது. இங்கு பெண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

     


     

    மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் 88 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 130 வெப்- கேமராக்கள் பொருத்தப்பட்டு, திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மானிட்டர் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்படுகிறது.

    தேர்தல் பணியில் 1500 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர நுண்பார்வையாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து 38 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடியில் வைக்கப்பட உள்ளன. இது தவிர கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பேட் எந்திரம் போன்றவையும் அமைக்கப்படுகிறது.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தர்ராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 8, பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 51, 3-ம் பாலினத்தவர் 16 என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 வாக்களாளர்கள் உள்ளனர்.

    அவர்கள் வாக்களிப் பதற்காக தொகுதி முழுவதும் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வாக்காளர்கள் வாக் களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ள 71 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 143 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    அவற்றில் 54 வாக்குச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், 17 சாவடிகளில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதுமட்டுமின்றி ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 46 இன்ஸ்பெக்டர்கள், 50 அதிரடி படை போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    ஒட்டப்பிடாரம் தொகுதி முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 300 துணை ராணுவ வீரர்கள் உள்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக்கூடிய கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொருத்தப்பட்ட 335 ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், 360 வி.வி.பேட் ஆகியவை ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு இன்று அனுப்பப்படுகின்றன.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இடைத்தேர்தல் நடை பெறும் 4 தொகுதிகளிலும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    மத்திய அரசின் முகமைகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நுண்பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொதுப் பார்வையாளர்களின் கீழ் செயல்படுவார்கள்.

    மேலும், 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 939 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இது மிக அதிக பாதுகாப்பாக இருக்கும். எனவே எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியும். அதோடு மத்திய ஆயுத போலீஸ் படையினர் 1,300 பேர் இருப்பார்கள்.



    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி அரசியல் கட்சியினரும் புகார் மனு அளித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

    அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெற உள்ளோம். அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்பரப்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதில் நான் கருத்து கூற முடியாது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்னை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    அதுபோல தபால் ஓட்டுகள் தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எல்லா தபால் ஓட்டுகளும் சரியான முறையில்தான் வழங்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் நிர்வகிப்பார்கள்.

    போலீசுக்கான தபால் ஓட்டுகள் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டன.

    ஓட்டு எண்ணிக்கையின்போது முதல் ரவுண்டு முடிவுகளை எத்தனை மணிக்கு எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு இப்போதே நான் பதிலளிக்க முடியாது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (‘விவிபாட்’) என்ற வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 ‘விவிபாட்’ எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

    ஒவ்வொரு ‘விவிபாட்’ எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். எனவே ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். 23-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    4 தொகுதிகளிலும் நினைத்ததை விட அதிகமாகவே கமல்ஹாசன் ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே. அவர் ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

    இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கமல் 30 வினாடிகள் பேசியதை 3 நாளாக பேசிக்கொண்டு இருக்கிறோம். பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவர்கள் இப்போது கமல் பேசியதை நாடு முழுக்க பிரபலப்படுத்தி விட்டார்கள்.



    இதைவிட ஒரு சூப்பர் பிரசாரம் அவருக்கு அமையுமா? இந்த 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே அவர் ஓட்டு வாங்குவார் பாருங்கள்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


    அரசின் சாதனைகளுக்காக இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்யுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை கழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது.

    காவேரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அம்மா வழியில் செயல்படும் இவ்வரசு மேற் கொண்ட தொடர் முயற்சிகளினால் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது. 70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ. 91 கோடி செலவில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் ரூ. 16.11 கோடி செலவில் குழந்தைகள் கேத் லேப் கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ. 229.46 கோடி மதிப்பில் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 13.75 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1,113.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும், அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது.

    கிராமப்புற பொருளாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான சிறிய, நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்பை வழங்கி பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக, ரூ. 62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ. 315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    அம்மா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.8 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ. 20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ. 2.52 கோடி செலவில் சென்னை காமராசர் சாலையில்

    பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் இராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமி அவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

    போக்குவரத்து, பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ் நாடு வலுவான பேருந்து போக்குவரத்து அமைப்பைப் கொண்டுள்ளது. அவற்றில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மாநிலத்திலுள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை வழங்குவதுடன் அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்கின்றன. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1,955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

    இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    600 கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற் கொள்ள ரூ. 1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

    மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அம்மா வழியில் நடைபெறும் கழக அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19.5.2019 அன்று நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு

    எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, புரட்சித் தலைவியால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு, வாக்காளப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    சட்டசபை இடைத்தேர்தலில் தினகரன் கட்சி திமுக வெற்றிக்காக போட்டியிடுகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட வசவப்புரம், வல்ல நாடு ஆகிய இடங்களில் அ.திமு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்ட வெற்றிச் சின்னம் தான், இரட்டை இலை சின்னம். அந்த சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் வரை சென்று போராடியவர் தான் டி.டி.வி. தினகரன்.

    இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். கட்சியை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தற்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அம்மாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அது ஒரு போதும் பலிக்காது.

    டி.டி.வி.தினகரனை வாழ வைத்தது இந்த இயக்கம். அடையாளம் காட்டியது இந்த இயக்கம், விலாசம் கொடுத்ததும் இந்த இயக்கம், அவருக்கு அரசியல் முகவரி தந்து புரட்சித் தலைவி அம்மாவால் வாய்ப்பளிக்கப்பட்டு அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு, வெற்றி பெறச் செய்து, பாராளுமன்றத்தில் அமர வைத்ததும் இந்த இயக்கம் தான். ஆனால் இன்றைக்கு அந்த கட்சிக்கே துரோகம் இழைத்து வருகிறார்.

     


     

    மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும். என்பதற்காக இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கும் போது தி.மு.கவால் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

    அவரது மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா தலைமை பொறுப்பை ஏற்கும் போது தி.மு.கவால் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். புரட்சித் தலைவி அம்மாக்கு தி.மு.க. பல்வேறு வகையில் இன்னல்களையும், இடர்பாடுகளையும் அளித்து வந்தது. அம்மா மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு, அம்மாவை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்ததின் காரணமாகவே, அவரது உடல்நிலை நலி வுற்று, இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

    அம்மாவை யார், யார் எல்லாம் இந்த நிலைக்கு ஆளாக்கினார்களோ, பழி வாங்கினார்களோ அவர்களுடன் தினகரன் தற்போது கூட்டணி சேர்ந்து கொண்டு. இந்த ஆட்சியையும், கட்சியையும் அழிக்கப்பார்க்கிறார். அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    நான் கிராமத்தில் விவசாய குடும்பத்திலே பிறந்தவன். விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்களை நன்கு உணர்ந்தவன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி 26 நாட்கள் தொடர்ந்து கடும் வெயிலிலும் பிரசாரம் செய்து மக்களை சந்தித்து வந்துள்ளேன். அனுபவ ரீதியாக கிராம மக்களின் இன்னல்களையும், துன்பங்களையும் நான் நன்கு அறிந்தவன்.

    ஆனால், ஸ்டாலின் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவரால் வெயிலில் பிரசாரம் செய்ய முடியவில்லை. 4 நாட்கள் கூட வெயிலை தாங்க முடியாதவர் ஸ்டாலின். இவர் மக்களின் கஷ்ட, நஷ்டங்களை தெரியாதவர். இவர் எப்படி மக்களுக்கு சேவை செய்வார். இவர் பிரச்சரக் கூட்டத்தில் பேசும் போது, நான் சிவப்பாக இருக்கிறேன், கவர்ச்சியாக இருக்கிறேன். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தற்போது கறுத்துள்ளேன் என பேசியிருக்கிறார். ஒரு தலைவர் இது போன்ற கருத்தை மக்களிடத்திலே தெரிவிக்கலாமா என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    இவர் பிரசாரத்திற்கு செல்லும் போது, பேண்ட், டிசர்ட் அணிந்து இருபது வயது இளைஞர் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருக்கிறார். எனவே, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தற்போது முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைகாலங்களில் பெய்கின்ற மழைநீரை தடுத்திடும் வகையில் தடுப்பணைகள் கட்டும் திட்டமும் செயல் படுத்தப்படுகிறது.

    அதே போன்று குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படுகிறது. இது வரை 3000க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் அண்மையில் ஏற்றப்பட்ட சூறைக் காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஏழை, எளிய மக்களும் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட முதல்- அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    தற்போது நான் தான் முதல்-அமைச்சராக இருக்கிறேன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராகத்தான் இருக்கிறார். அவர் எப்படி தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற முடியும். பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் திட்டமாகும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #ADMK #DMDK #Vijayakanth

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவை அளிக்கிறது.


    சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். #ADMK #DMDK #Vijayakanth

    ×