என் மலர்
நீங்கள் தேடியது "special article"
- இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர்.
- உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்த தானம் என்ற நிலையெல்லாம் மாறி இன்று உடல் உறுப்பு தானம் மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியிருக்கிறது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
உடல் உறுப்பு தானத்தில் 2 விதமான தானம் உள்ளது. ஒன்று உயிரோடு இருக்கும் போது, மற்றொன்று இறந்த பிறகு. புற்றுநோய், ஹெபடிடிஸ், எச்.ஐ.வி. போன்ற நோய் அல்லாதவர்கள் வாழும்போதே உறுப்பு தானம் செய்ய முன் வரலாம். தானம் செய்யும் முன்பு ஏதேனும் நோய் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தானம் செய்வது மிகவும் எளிது. அரசு தலைமை ஆஸ்பத்திரியை அணுகி உறுப்பு தானத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்கள் தரும் அட்டையை எப்போதும் உடன் இருக்குமாறு பர்சிலோ அல்லது சட்டை பையிலோ வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுப்பு தான அட்டை பற்றி தகவல் தெரிவித்துக் கொள்வது அவசியம். உங்களின் ஆசையை அவர்கள் பூர்த்தி செய்ய இது உதவும்.
இயற்கை மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். மற்ற உயிர்காக்கும் உறுப்புகள் பெரும்பாலும் ரத்த உறைதலால் அதிவேகமாக கெடக்கூடும் என்பதால் இவற்றை தானம் செய்வதில் சவால்கள் உள்ளன. மேலும் உறுப்புகள் 6 மணி நேரத்திற்குள் தானம் செய்யப்பட வேண்டும். கருவிழிகளை ஈரத்துணியால் பாதுகாக்க வேண்டும்.
உயிரோடு இருந்தாலும், மூளை முற்றிலும் செயல்படாத நிலையில் இருந்தால் அது மூளைச்சாவு எனப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் தலைவர், நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் இதில் சம்பந்தப்படாத மற்றொரு டாக்டர் என 4 டாக்டர்கள் கொண்ட குழு தீவிர பரிசோதனை மேற்கொண்டே குறிப்பிட்ட நபர் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பதை உறுதி செய்வர். அதன்பின்னரே உறுப்பு தானம் பற்றி குடும்பத்தினரிடம் டாக்டர்கள் ஆலோசிப்பர். குடும்பத்தினர் சம்மதம் கொடுக்கும்பட்சத்தில் தான் உடல் உறுப்பு தானம் ஏற்றுக் கொள்ளப்படும்.
மூளைச்சாவு அடைந்தவரை வென்டிலேட்டரில் வைப்பதால் உறுப்புகளுக்கு சேதம் உருவாகுவதில்லை. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேர் முதல் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பிறருக்கு பொருத்தப்பட வேண்டியது அவசியம். இதயம் என்றால் 6 மணி வரையிலும், நுரையீரல் என்றால் 4-6 மணி நேரம் வரையிலும், சிறுநீரகம் என்றால் 72 மணி நேரம் வரையிலும், கல்லீரல் என்றால் 24 மணி நேரம் வரையிலும் பாதுகாப்பாக வைத்திருந்து மற்றவர்களுக்கு பயன்படுத்த முடியும்.
மூளைச்சாவு என்றால் என்ன?
மனித உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் மையப்புள்ளி மூளையில் உள்ளது. கையை நன்றாக ஆட்டுகிறோம், காலால் வேகமாக ஓடுகிறோம் என்றால் அந்த சக்தியை கொடுக்க கூடியது மூளை.
விபத்தின் போது ஒருவருக்கு மூளையில் அடிபட்டு மூளை வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பார்கள். அங்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படும். அப்போது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கும்.
மூளைக்கு ரத்த ஓட்டம் போகாது. கழுத்துக்கு கீழே அனைத்து உறுப்புகளும் வேலை செய்யும். அந்த நபரை கிள்ளி பார்த்தால் அவரால் உணர முடியாது. குண்டூசியை வைத்து குத்தினாலும் தெரியாது. ஆனால் இதயம் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கும். இது தான் மூளைச்சாவு அடைந்தவரின் நிலையாக இருக்கும்.
மூளைக்கு சரியாக ரத்த ஓட்டம் செல்லவில்லை என்றால் மூளை கெட்டு விடும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் ஒரு நிமிடம் தடைபட்டால் மயக்கம் வந்து விடும். இரண்டு நிமிடம், 3 நிமிடம் தடைபட்டால் மூளை செயல்படாமல் போகும். 4 நிமிடத்துக்கு மேல் ரத்த ஓட்டம் போகவில்லை என்றால் மூளை செயல்படாமல் போய் விடும். அது எப்படி என்றால் கெட்டியாக இருக்கும் மூளை ஜெல் போல் மாறி விடும். மூளை கெட்டுப் போய் விட்டால் அதனை திரும்ப மீட்க முடியாது.
இதேபோல ஏதோ ஒரு காரணத்தால் இதயம் நின்று விடுகிறது. அவ்வாறு இதயம் நின்று விடுவதற்கு பெயர் கார்டியாக் அரெஸ்ட். மசாஜ் கொடுத்து இதயத்தை பழைய படி துடிக்க வைத்துவிட்டால் மூளை தப்பித்து விடும். அதற்கு நேரம் 3-ல் இருந்து 4 நிமிடம் தான். 5 நிமிடம் ஆகிவிட்டால் இதயம் செயல்படத் தொடங்கி விடும். ஆனால் மூளை வேலை செய்யாது. மூளைச்சாவு ஏற்படும் இளைஞரின் இதயம் நன்றாக இருக்கும். அதனை வேறு யாருக்காவது தானம் செய்யலாம். ஆனால் மூளையை மாற்றும் சிகிச்சை இதுவரை வரவில்லை.
வழக்கமாக இறந்து போகிறவர்களுக்கு இதயம் நின்று விடும். வீட்டில் ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது. உடனே டாக்டரை கூப்பிடுகிறோம். அவர் நாடித்துடிப்பு பார்க்கிறார். ஸ்டெதஸ்கோப் வைத்து மூச்சு வருகிறதா, வயிறு மேலே, கீழே போகிறதா என்று பார்க்கிறார். வயிறு மேல், கீழ் ஏறி இறங்கவில்லை என்றால் மூச்சு இல்லை என்று அர்த்தம். தட்டி, தட்டி எழுப்புகிறார் எழுந்திருக்கவில்லை. மூளை வேலை செய்யவில்லை. சுய நினைவு இல்லை. முழுமையாக இறந்து விட்டார் என்று அர்த்தம். முழுமையாக இறந்து போனவரின் இதயத்தை மாற்ற முடியாது. உயிர்போன நபர், மூளைச்சாவு அடைந்த நபர் இது தான் வித்தியாசம்.
விபத்தில் சிக்கிய நபர் என்ன தட்டினாலும் எழுந்திருக்க மறுக்கிறார். ஆனால் இதயத்துடிப்பு மட்டும் இருக்கிறது. மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞருக்கு 30 நிமிடத்துக்கு கூட இதயம் துடிக்கும். அதற்குள் ஆஸ்பத்திரிக்கு வந்து வென்டிலேட்டர் பொருத்தி செயற்கை சுவாசம் கொடுத்தால் இதயம் தொடர்ந்து துடிக்க ஆரம்பித்து விடும். ஒரு நாள், 3 நாளைக்கு கூட இதய துடிப்பு இருக்கும். ஆனால் மூளையை இழுத்து பிடிக்க முடியாது. அவ்வாறு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் இதயத்தை எடுத்து மற்றொருவருக்கு தானமாக கொடுக்கலாம். அவ்வாறு தானம் செய்யப்படும் உடல் உறுப்புகள் யார், யாருக்கு என்பதை அரசு தான் முடிவு செய்யும். எனவே முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்கு கொடுக்காமல், மனிதர்கள் உயிர் வாழ கொடுப்போம். மற்றவர்கள் உடலில் சேரும்போது அவர்களுக்கு மறு உயிர் கொடுக்கிறார்கள்.
இறந்த பிறகும் உறுப்பு தானம் செய்யும் நபர்கள் வாழ்கிறார்கள். விபத்தினால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களில் 20 ஆயிரம் பேர் இதயத்தை தானமாக கொடுக்க தகுதியான நிலையிலேயே இருந்து மரணிப்பார்கள். எனவே உடல் தானம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
இதேபோல ரத்த தானம் செய்வது மிகவும் எளிமையானது. நீங்கள் கொடுக்கும் 200 மில்லி ரத்தத்தை பிரித்து 4 பேருக்கு கொடுப்பார்கள். இப்படி 4 பேரை காப்பாற்றக்கூடிய சக்தி உங்களிடம் உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை ரத்த தானம் கொடுங்கள். ரத்த தானம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.
45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள் என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது. ரத்தம் கொடுத்த பின்னர், பழச்சாறு, ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக்கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
தொடர்புக்கு:
info@kghospital.com, 98422 66630
- தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
- அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம்.
ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் அம்பாள் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகிறாள். இவளுக்கு உண்ணாமுலை அம்மன் என்றே திருநாமம்.
அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளியதே வெகு சிறப்பானதாகும். திருக்கைலாயத்தில் ஐயனும் அம்பிகையும் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக ஐயனின் திருக்கண்களைத் தன்னுடைய கைகளால் அம்பிகை பொத்திவிட்டாள். விளையாட்டு என்றாலும் எந்தச் செயலுக்கும் எதிர்வினை உண்டல்லவா! அதன்படி, உலகம் இருண்டது. உயிர்களெல்லாம் நடுங்கின. பிரளயம் சூழ்ந்தது. தன்னுடைய செயலால், அகாலத்தில் பிரளயம் வந்ததை உணர்ந்த அம்மை, தன் செயலுக்குப் பரிகாரம் தேட விழைந்தாள். பூவுலகம் அடைந்து காஞ்சிபுரத்தில் மணலால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்து இறைவனை வழிபட்டாள். இறைவனும் காட்சி கொடுத்து அம்பிகையை ஏற்றார்.
இந்நிலையில், சில காலம் முன்னர், பிருங்கி முனிவர் செய்ததொன்று அம்பிகையின் நினைவில் ஊசலாடியது. சிவனை மட்டுமே பிருங்கி வணங்குவார். அம்பிகை அருகில் இருந்தாலும் ஒதுக்கிவிட்டுச் சிவனை மட்டுமே சுற்றிவருவார். ஒருமுறை, பிருங்கி திருக்கைலாயம் வந்தபோது, வேண்டுமென்றே சிவனாரின் அருகில் அன்னை நின்றுகொண்டாள். ஐயனோடு ஒட்டி நின்றுவிட்டால், 'வலம் வரும்போது தன்னையும் சேர்த்துத்தானே வலம் வரவேண்டும்; பிருங்கி என்ன செய்கிறார் பார்க்கலாம்' என்று அம்பிகை எண்ண, பிருங்கியோ இன்னும் வேறு விதமாக எண்ணினார். மானுட உருவில் இருந்தால்தானே, அருகருகே நிற்கும் ஐயனுக்கும் அம்பிகைக்கும் இடையில் நுழையமுடியாது? என்று வண்டு வடிவம் எடுத்தார். இடையில் புகுந்தார். சிவனாரை மட்டுமே வலம் வந்தார்.
இப்போது அம்பிகைக்கு இந்நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. என்னதான் ஐயனுக்கு அருகில் நின்றாலும், தனியாக இருந்ததால்தானே பிருங்கியால் இடைபுக முடிந்தது? ஐயனிடமிருந்து பிரிக்கமுடியாத நிலையை அடைந்துவிட்டால்......? சிவனாரிடமே இதைக் கேட்க...... திருவண்ணாமலை சென்று தவம் செய்யச் சொன்னார் அவர். ஆமாம், திருவண்ணாமலையில் தவம் செய்தால், தாம் எழுந்தருளி இடப்பாகத்தில் அம்மையை அரவணைப்பதாகவும் கூறினார்.
இதன்படியே அம்பிகையும் செய்ய, தம்முடைய வாம பாகத்தில் அம்பிகையை ஏற்றுக்கொண்டு, மாதொரு பாதியனாக, அர்த்தநாரீஸ்வரர் என்னும் புதிய திருநாமம் கொண்டார்.
அண்ணாமலையாரின் திருவாட்டியாக, உண்ணாமுலை என்னும் திருநாமத்தோடு அம்பிகையும் இங்கே நிலைகொண்டாள்.
வாமபாகத்துக்குரியவள் என்னும் பெருமையை அம்பிகையின் கோவில் அமைப்பிலும் காணலாம். திருவண்ணாமலைத் கோவிலில், ஐயன் சந்நிதிக்கு இடது பக்கத்தில், மூன்றாம் பிராகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது உண்ணாமுலையம்மன் சந்நிதி.
அம்பிகைக்கு அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப்பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என்னும் திருநாமங்களும் உண்டு.
அம்பாள், நின்ற கோல நாயகி. திருக்கரங்களில் தாமரை மலர் ஏந்தி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண்போல திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறாள். சாந்தம் நிறைந்த முகம், எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்:
சித்தாந்தத்தெருளே வருக சிவஞானத் தேனே வருக திருவாளர்
தேடி வைத்தப் பேரின்பத் திரளே வருக சன்மார்க்க
அருளே வருக திருவருணை அருந்தாமுலையாய் வருக
அலகில் விளையாட்டு அயரும் எங்கள் அம்மே வருக வருகவே என்று அம்மையைப் போற்றுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத் தமிழ்.
பிள்ளைகளான விநாயகரும் முருகரும், சாதாரண மானுடப் பிள்ளைகளைப் போல் பாலருந்தா முலைகளைக் கொண்டவள் என்பதாலேயே உண்ணாமுலை என்று அம்பாளுக்குத் திருநாமம். இந்தத் திருநாமத்திற்கு சித்தாந்த ரீதியாகவும் வேதாந்த ரீதியாகவும் வேறு சில விளக்கங்களும் உள்ளன.
அர்த்தநாரீஸ்வரர் என்று சிவனாருக்குப் பெருமை சேர்த்தாலும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்திற்கு அம்பிகையே காரணம். சிவந்த செஞ்சடைக் கற்றை – கருங்கூந்தல் அலை; கொன்றை மாலை – மல்லிகைப் பூமாலை; திரிசூலம் – நீலோற்பல மலர்; பவள நிறம் – பச்சை நிறம்; தண்டை – சிலம்பு; அகன்ற மார்பு – கச்சணிந்த மார்பு; இவ்வாறாக, ஆணும் பெண்ணுமாக, ஐயனும் அம்மையும் காட்சி கொடுத்தார்கள்.
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரிகளல்ல, போட்டியாளர்களல்ல, ஆயின் சமமானவர்கள், இணையானவர்கள், இணைந்து செயல்படவேண்டியவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினார்கள். இவ்வாறு ஐயனுக்குப் புது பெருமையை அம்பிகை சேர்த்த அந்தத் திருநாள், கார்த்திகை மாதத்துப் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். இந்த நாளே திருவண்ணாமலையில் தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
அண்ணாமலை என்னும் பெயருக்கு 'அணுக முடியாத' என்று பொருள். உண்ணாமுலை என்னும் பெயருக்கு 'உண்ணாத' என்று பொருள். ஆனால், ஐயனும் அம்மையும் அன்பினால் அணுகக்கூடியவர்களாக, ஞானம் ஊட்டுகிறவர்களாக இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். மார்கழி மாதக் கடைசியில் கோவிலில் பத்து நாள் திருவிழா நடைபெறும். தை முதல் நாள் இந்தத் திருவிழா நிறைவடைந்த பின்னர், தை இரண்டாம் நாள் திருவூடல் திருவிழா நடைபெறும்.
அம்பிகையை உதாசீனம் செய்துவிட்டு ஐயனை மட்டும் வணங்கினாரில்லையா பிருங்கி முனிவர்? அவர் அவ்வாறு செய்தபோதும் அவருக்குச் சிவனார் முக்தி வழங்கினார். அர்த்தநாரீஸ்வரர் ஆனபின்னரும் உண்மை உணராத பிருங்கிக்கு முக்தியா என்று அன்னை சினந்தாள். பிருங்கி எப்படியோ போகட்டும், ஆனால், சிவனார் அவருக்கு முக்தி கொடுக்கலாமா? தன் இருப்பிடம் புகுந்து கதவடைத்துக்கொண்டாளாம் அம்பிகை. அம்பிகை சினம் கொண்டுவிட்டாள் என்பதைத் தெரிந்துகொண்ட சிவனார், சுந்தரமுர்த்தி சுவாமிகளைத் தூது அனுப்பினாராம். அம்பிகை அதற்கும் மசியவில்லை.
சிவனார் பாவம், தடுமாறித்தான் போனார். பக்தரையும் விடமுடியவில்லை; அம்பிகையையும் ஒதுக்கமுடியவில்லை. ஆகவே, மீண்டும் அம்பிகைக்குத் தூது அனுப்பினார். அம்பிகையின் கோபம், செல்லக் கோபம்தானே! யாரிடமும் சினம் கொள்ளாத ஜகன்மாதா ஐயனிடம் மட்டும் சினம் கொள்வாளா என்ன? சினம் தணிந்து வெளிப்பட்டாள். ஐயனுக்கு அருகில் வந்து அமர்ந்தும் கொண்டாள்.
இதைத்தான், திருவூடல் விழாவில் மீண்டும் நடித்துக் காட்டுகிறார்கள். முதல் நாள் இரவு அம்பிகை ஊடல் கொண்டுவிடுவாள். சினத்தை எப்படித் தணிப்பது என்று எண்ணித் தணிக்கும் சிவனார், அன்றிரவு குமாரக்கோவிலில் சென்று தங்கிவிடுவார். அடுத்த நாள் காலையில் கிரிவலம் செல்வார். கிரிவலத்தின்போது, பிருங்கி முனிவருக்குக் காட்சி கொடுத்து அருள்வார். பின்னர் அம்பிகைக் கோவிலை அடைந்து ஊடலுக்கு விளக்கம் தந்து அம்பிகையை சமாதானப்படுத்துவார்.
சின்னச் சின்ன கோபதாபங்கள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவி செய்தும் வாழுகிற வாழ்க்கைத் தாத்பரியத்தை எடுத்துக்கூறும் விதமாக ஐயனும் அம்பிகையும் நடித்துக் காட்டுகிற இந்நிகழ்ச்சி நடைபெறுகிற வீதிக்கே, திருவூடல் திருவீதி என்றுதான் பெயர்.
குறையாத பொருளாம், மாற்றறியாப் பொன்னாம் உண்ணாமுலை அம்மன் அள்ள அள்ளக் குறையாது அருளக் காத்திருக்கிறாள்; பாவப்பிணிக்கு மருந்தாம் இவளை வணங்குவோம்; வழிபடுவோம்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com
- இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.
- எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது.
சினிமாவையும் தாண்டி எங்களோடு வாழ்பவர் குஷ்பு. எங்கள் வீட்டில் கடைக்குட்டி தங்கை குஷ்பு என்று சொன்னேன் அல்லவா. அப்படித்தான் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிட்டார்.
என் தங்கை பிருந்தாவும், குஷ்புவும் பிரிக்க முடியாத சகோதரிகள் போன்றவர்கள். ஒன்றாக ஊர் சுற்றுவது முதல் கலாய்ப்பது வரை இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
இருவருக்கும் பிறந்த நாள் வந்தால் போதும் நள்ளிரவு 12 மணிக்கு போன் பண்ணி கடுப்பேத்துவாங்க.
ஏய், வாடி-போடி என்று இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு நெருக்கமாக, உரிமையுடன் பழகி வருகிறார்கள்.
குஷ்பு எங்கள் வீட்டுக்கு வந்தால் போதும் எங்கள் அம்மாவிடம் போய் முதலில் கேட்பது 'அம்மா இன்று என்ன சமையல் என்று தான் கேட்பார். புளிச்ச கீரை சாதம் என்றால் போதும் ஒரு பிடி பிடிப்பார். எங்க அம்மா சமைத்து கொடுப்பதில் புளிச்சகீரை சாதத்துடன் அரைத்த சாம்பார். இந்த இரண்டும் கிடைத்தால் போதும் நன்றாக ருசித்து சாப்பிடுவார்.
அது மட்டுமல்ல குஷ்புவே நன்றாக சமையல் செய்யக்கூடியவர். அவர் பிரியாணி மிக நன்றாக சமைப்பார். வீட்டில் பிரியாணி செய்தால் போதும் ஒன்றாக ஷுட்டிங் செல்வதாக இருந்தால் அங்கே பிரியாணி எடுத்து வந்துவிடுவார். இரவு பகலாக படப்பிடிப்பில் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தைகளுக்காக காலையிலே எழுந்து சமையல் செய்து கொடுக்க தவறமாட்டார்.
படப்பிடிப்புகளை பொறுத்தவரை பாடலுக்கு ஏற்ற நடனங்களை காட்சிப்படுத்தியதும் நான் சென்றுவிடுவேன். ஆனால் கலை நிகழ்ச்சிகளில் தான் முழு நேரமும் நாங்கள் ஒன்றாக இருப்போம். பயங்கர ஜாலியாக இருக்கும். துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் ஒரு நாள் இரு நாள் அல்ல. தொடர்ந்து ஒரு மாதம் வரை ஷோக்கள் நடத்துவோம். மோகன்லால் உள்பட பல நட்சத்திரங்கள் அதில் பங்கேற்றிருக்கிறார்கள். மலையாளம் சேர்ந்திருப்பதால் காட்சி நடக்கும்போதே திரைக்கு பின்னால் இருந்து சிரித்து விடுவோம்.
அதிலும் சிரிப்பது மட்டுமல்ல நீண்ட நேரம் அடக்க முடியாமல் சிரித்து விட்டு காட்சிக்கு செல்வதை கூட மறந்தது உண்டு. அப்படி தான் ஒரு நிகழ்ச்சியில் திரைக்கு பின்னால் இருந்து வாய்விட்டு நானும், குஷ்புவும் சிரித்து கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் குஷ்புவின் காட்சி வந்து இருக்கிறது. அதை நாங்கள் மறந்து விட்டோம். திரைக்கு பின்னால் இருந்த குஷ்பு துள்ளி குதித்து மேடையில் போய் நின்று சமாளித்து காட்சியை பிரமாதமாக ஆடி முடித்தாள்.
இலங்கையில் முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்களை வைத்து ஒரு ஷோ நடத்தினோம். அது பிரமாதமாக இருந்தது. அந்த ஷோவில் குஷ்பு ஆடியது மட்டுமல்ல தொகுப்பாளினி வேலையும் செய்தார். அவர் தொகுப்பாளினியாகிவிட்டால் பிரமாதமாக பண்ணுவார்.
குஷ்பு ரொம்ப ஜாலியான பெண். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் இவ்வளவு நேரம் தான் ஆடவேண்டும் என்றெல்லாம் நினைக்கமாட்டார். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவார். குஷ்புவும், பிருந்தாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. நான் நடன காட்சிகளுக்காக கம்போஸ் பண்ணிக்கொண்டு இருப்பேன். எனது வலது புறம் ஒருவரும், இடது புறம் ஒருவருமாக இருந்து கொண்டு அவர்கள் கேலி, கிண்டல் செய்வதற்கு அளவே இருக்காது. நான் கொஞ்சம் கோபப்பட்டு சத்தம் போட்டால் தான் இருவரும் எழுந்து செல்வார்கள்.
குஷ்பு எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நாங்கள் சொல்வதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் என் அம்மா இறந்த தருணத்தில் அந்த தகவலை கேட்டதும் உடனடியாக வீட்டிற்கு ஓடி வந்தார். சொந்த அம்மாவை இழந்த மாதிரி எங்களுடன் அழுது புரண்டார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை தேற்றிக்கொண்டு எங்களை தேற்றத் தொடங்கினார். அருகிலேயே அமர்ந்து கொண்டு அக்கா சாப்பிடுங்க, அக்கா சாப்பிடுங்க என்று சோறு கூட ஊட்டிவிட்டார். அந்த அளவுக்கு அக்கறையோடு எங்களை பார்த்துக்கொண்டவர்.
குஷ்புவை பற்றி பேசிகிட்டே போகலாம். என்ன துணிச்சல்? என்ன தைரியம்? யாருக்கும் பயப்படமாட்டார். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவார்.
தமிழே தெரியாமல் தமிழகத்துக்கு வந்த குஷ்புவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதையும் அவரது முயற்சியால் இன்று அடைந்திருக்கும் உயரத்தை பற்றியும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார் ஒரு நிகழ்ச்சியில் பெருமையாக கூறினார்.
அதே போல் 24 வருடங்களுக்கு முன்பு கஸ்தூரிராஜா நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை தொடர்ந்து எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் அந்த படத்தில் 'ஒத்தை ரூபாய் தாரேன்' என்ற பாடலுக்கு இரவு, பகலாக 36 மணி நேரம் நடித்து கொடுத்ததையும் அதற்காக தலையில் ஒரு இரும்பு கிளிப்பை மாட்டிக் கொண்டு அந்த வலியையும் தாங்கி கொண்டு நடித்ததை உணர்ச்சி பூர்வமாக அவர் கூறியபோது நானும் உணர்ச்சி வயப்பட்டேன்.
அவருக்கு இருக்கும் திறமைக்கும், தன்னம்பிக்கைக்கும் சினிமாவை போல் அரசியலில் நிச்சயம் சாதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
- அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.
- பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார்.
"அட! இது என்னங்க?"
"இது அரைச்சு வெச்ச சோளம்! படம் எடுத்து வெச்சிருக்காங்க!"
"இத வெச்சு என்ன செய்யணும்?"
"இந்த கம்ப்யூட்டர் மவுஸ் இருக்கு பாரு! இத அதுமேல வெச்சு அழுத்து!"
"அப்பா! இத்தன உப யோகமா சோளத்துல!
"சோளத்த மட்டும் பாக்காத! இந்த தொழில் நுட்பத்தப்பாரு! இதுல எந்த படத்துமேலயும் போய்த்தேடினா அந்தப்பொருளோட அத்தன உபயோகமும் ஸ்கிரீன்ல வந்துரும்!"
"எப்படீங்க இது சாத்தியம்?"
"எல்லாம் செயற்கை அறிவுத்திறனாம்!"
ஆம்! செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) வேகமாக அதிகரித்துவிட்டது. மனித மூளையைப்போலவே சிந்தித்து செயல்படும் மென்பொருள் தயாரிப்பும் பயன்பாடு களும் பரவிக்கொண்டே வருகின்றன. இந்தியாவில் கூகுள் கம்பெனியே இந்த முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றது.
ரெஸிப்பி புத்தகம் என்னும் சமையல் குறிப்பு செயலி ஒன்றில்கூட செயற்கை அறிவுத்திறனை உபயோகித்து தகவல் தரும் நுட்பம் இப்போது நம் நாட்டிலும் வந்துவிட்டது. கொச்சியில் உள்ள அக்ரிமா (Agrima) என்னும் கம்பெனி ஒரு மிக மேம்பட்ட படிவ உரு உணரும் மென் பொருளை (Advanced image Recognition software) உருவாக்கி அதை மேலே சொன்ன சமையல் குறிப்பு செயலியில் பதிப்பித்திருக்கிறது. இதன் மூலம் வெறும் படங்களை வைத்து அந்தப் பதார்த்தத்தைத் தயாரிக்கும் முறையை ஸ்கிரீனில் பார்த்துவிட முடியுமாம்.
இந்த அக்ரிமா கம்பெனியை முழுக்க முழுக்க ஊக்கு வித்தது கூகுள் தான்.
இன்னொரு சுவாரஸ்ய தகவல் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கிட்டத்தட்ட 4கோடி பேர்வழிகள் நீண்ட தூரப்பயணம் மேற்கொள்கிறார்களாம். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சரியான தகவல்கள் கிடைக்காமல் பல மணி நேரம் விரயம் செய்கிறார்கள். பல இடங்களுக்குத் தவறாகப்போய் பின்பு மறுபடி வந்து சேருகிறார்களாம்.
இந்தச் சங்கடத்தைத் தவிர்க்க ரெயில் யாத்ரி (Rail Yatri) என்னும் மென்பொருள் கம்பெனி, நம்ம உத்தரப்பிரதேச நொய்டாவைச்சேர்ந்த கம்பெனிதான், செயற்கை அறிவுத்திறனை செலுத்தி தயாரித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் புக் செய்வது, எந்தெந்த டிரெயின்களில் பயணம் செய்வது, எங்கெல்லாம் தத்தம் டிரெயின் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது, போகும் ஊரில் ஓட்டல் புக் செய்வது போன்ற சகலவித தகவல்களை தம் மொபைல் போனிலேயே பெறலாம்.
"இந்த செயலி, தகவல் ஆராய்வு மற்றும் செயற்கைத்திறன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகளுக்குத்தேவையான தகவல் தந்து அவர்களின் பயணத்தை இனிமையானதாகவும் சுருக்கமானதாகவும் செய்து விடுகிறது" என்று சிலாகிக்கிறார் இந்தக்கம்பெனியின் தலைவர் மணிஷ் ராத்தி.
பால் ரவீந்திரநாத் என்னும் கூகுள் இந்தியாவின் மென்பொருள் மானேஜர் இந்த செயற்கை அறிவுத்திறன் என்பது மிகப்பெரும் வரப்பிரசாதம் என்கிறார். "சாதாரண மென்பொருளை விட இந்த செயற்கை அறிவுத்திறன் மென்பொருளானது மிகச்சுலபமாக சிக்கல் தீர்க்கும் இயலைச்செய்துவிடும். எனவே கூகுள் கம்பெனி இந்த இயலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது" என்று சொல்கிறார்.
Innovation என்னும் புதியதைக்கண்டு பிடிக்கும் ஆர்வமும் முயற்சியும் கொண்ட ஸ்டர்ட் அப் கம்பெனிகளுக்கு கூகுள் தன்னால் இயன்ற ஊக்கத்தைத்தவறாது கொடுத்து வருவதைப்பார்க்கிறோம்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் புதுமையான முயற்சிகளில் ஆர்வம் கண்டு அந்தக் கம்பெனிகளுக்கு முதலீடு வழங்குவதில் இருந்து அமெரிக்காவில் சென்று செயலாற்ற அவர்களுக்குத் தேவையான விசா, அனுமதி என்று பல உதவிகளை கூகுள் செய்து வருகின்றது.
கூகுள் மட்டுமில்லை, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரும் மென்பொருள் கம்பெனிகளும் இந்தியாவில் புதுமையான முயற்சிகளுக்கு ஆர்வமும் உதவியும் தரத்தயங்குவதில்லை. இதில் அவர்களுக்கான லாப நோக்கும் கலந்திருப்பது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் இந்த ஊக்குவிப்பு புதுமையான் முயற்சிகளில் ஈடுபடும் இளைய சமுதாயத்துக்கு மிகப்பெரும் உதவி என்பதையும் மறுக்க இயலாது.
"என்னடி உம்புள்ள என்ஜினீயரிங் முடிச்சுட்டு எங்க வேலைக்குப்போறானாம்? என்னால இன்னமே அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கறது கஷ்டம், தெரிஞ்சுக்க!"
"ஒண்ணும் வேண்டாம்! வேலைக்கெல்லாம் போகல.!"
"பின்ன என்ன பண்ணப்போறாராம் தொர? இங்க என்ன பாட்டன் சொத்தா கொட்டிக்கெடக்கு?"
"அதெல்லாம் இருக்கட்டும் இதப்பாருங்க!"
"உம்புள்ள படிச்சுட்டு தெண்டமா சுத்திக்கினு இருக்கானேன்னு கேட்டா நீ என்னமோ அவனோட லாப்டாப்பை காட்டறே?"
கொஞ்சம் இத்த பாருங்களேன்!"
"இன்னாடி இது? உலக மேப்ப போட்டு வெச்சு என்னாண்ட காட்டறே?
"த பாருங்க! இந்த மவுசை வெச்சு இதோ இந்த இடத்துல கிளிக் பண்ணினா, பாருங்க பாருங்க!
"அட! எங்கூர் பேரு வருதே! அட! ஊரு பத்தி வெவர மெல்லாம் வருது!
"இது மாதிரி இந்த மேப்புல எந்த எடத்துல கிளிக் பண்ணினாலும் அந்தந்த ஊர் பத்தி எல்லா வெவரமும் வரும்!"
"சரி இப்ப எதுக்கு இத்த என்னாண்ட காட்டறே?
"இந்த புரோகிராம எழுதினது நம்ம புள்ள!"
இன்னாது?"
ஆமாய்யா! என்னவோ பாட்டன் சொத்து இல்லேன்னியே! ஒரு பாட்டன் சொத்தும் தேவையில்ல! நம்ம புள்ளாண்டானே சொந்தமா கம்பெனி ஆரமிக்கப்போறான்!"
"ஆமா பெரிய அம்பானி இவரு! போய் எதுனா நல்ல வேலையில சேரச்சொல்லுடி!"
"அவனோட முயற்சியைப் பார்த்துட்டு அமெரிக்காவிலேர்ந்து பணம் தராங்களாம்! எம் புள்ள ஒரு நாள் அம்பானியாகப்போறான் பாருங்க!"
நிச்சயம் நடக்கத்தான் போகிறது!
- பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்ட தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
- தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.
இந்த உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் உயிர் அமுதமாகிய தாய்ப்பால். நம்மிடம் கலப்படம் இல்லாமல் அன்பு செலுத்தும் ஒரே சொந்தமும், நாம் நேரில் காணும் தெய்வமும் நம் தாய்தான். பாலூட்டி, தாலாட்டி, தன்னை இழைத்து உருக்கி நம்மை வளர்த்த தாயின் அன்பிற்கும், தியாகத்திற்கும் ஈடு இணையோ, விலைமதிப்போ கிடையாது.
உலகிற்கெல்லாம் ஒளிதந்து உயிர்களைக் காக்கின்ற கதிரவனையே "தாய்" என்று ரிக்வேதமும், இதர இலக்கியங்களும் கூறுகின்றன. கவியரசு கண்ணதாசனும் எழுகதிராய் தோன்றி விரிகதிராக ஒளியால், வாழ்வு தரும் கதிரவனை "ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி" என்று பாடுகின்றார் என்றால் அனைத்திற்கும் மேலானவள் தாய் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
நாட்களைக் கொண்டாடுகின்ற நாம் மனிதர்களைக் கொண்டாடத் தவறிவிடுகிறோம். யாரை வேண்டுமானாலும் நாம் மறந்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி இவ்வுலகில் வாழவைத்துள்ள நம் தாய்-தந்தையை மறந்து தன்னலமாய் வாழ்கின்றோம் என்றால் நமக்கு அந்தப் பாவத்தில் இருந்து உய்வே இல்லை என்கின்றார் திருவள்ளுவர்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு''
என்ற குறட்பாவில் நேரடியாக செய்நன்றி மறந்த பிள்ளைகளைத்தான் சொல்கின்றார். இங்கே பிள்ளைகள் என்றால் அது ஆண், பெண் இருவரையுமே குறிக்கும்.
பத்துகிலோ அரிசியை இரண்டு பைகளில் பிரித்து அவற்றை இரண்டு கைகளில் சுமந்து கொண்டு நடந்துவர வேண்டுமென்றால் இரண்டு தெரு நடப்பதற்குள் பத்து இடத்தில் அப்பைகளை கீழே வைத்து வைத்து எடுத்து வர வேண்டியிருக்கும்.
ஆனால் வயிற்றில் பத்துமாதம் சுமந்து, படாதபாடுபட்டு, உயிர்போய் மீண்டுவரும் வலியை அனுபவித்து, மயக்கம் தெளிந்த நொடிமுதல், தன்இறுதி மூச்சுவரைக்கும் தான்பெற்ற பிள்ளைகளின் நலன் ஒன்றையே தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழும் அன்னைக்கு ஈடாக ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா இந்த உலகில்!
உலகில் மிகக் கடினமான வேலை எது தெரியுமா? ஒரு குழந்தையை வளர்த்து, நல்ல பண்புகள், குணநலன்களை கற்றுத்தந்து, சோர்வடையும்போது தட்டிக்கொடுத்து, அப்பிள்ளை விரும்புகின்றதை தேடித்தந்து, கல்வியும், சுயசார்பும் கொடுத்து, நல்ல மனிதனாகவோ, நல்ல பெண்ணாகவோ உருவாக்குவதுதான்!
இக்கடினமான பணியை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு தன் பசி, தேவைகள் அனைத்தையும் துறந்து தன் பிள்ளைகளுக்காக பல்வேறு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு செய்கின்ற தாயின் அருமையை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம் என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்!
"மாதா உடல் சலித்தாள்" என்று பிள்ளையின் வளர்ப்பில் தாய் எத்தனை துன்பமடைகிறாள் என்பதை பட்டினத்தார் பாடுவார்.
வரலாறு முழுக்க வெற்றி பெற்றவர்களில் பலபேர் அவர்களின் அன்னையின் தியாகத்தால் உருவானவர்கள். கணவனால் கைவிடப்பட்ட பின்னரும் தன் பிள்ளையின் நல்வாழ்விற்காக அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு வீரம் செறிந்த மகனாக அவனை வளர்த்து ஆளாக்கி, ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே தன் மகன் உருவாக்க காரணமாக இருந்தவர் மராட்டிய மாமன்னர் வீரசிவாஜியின் தாயான ஜீஜாபாய் ஆவார்.
பெற்றெடுத்த மகன் கூட அல்ல, இறந்துபோன தன் கணவர் தத்து எடுத்த மகன் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்ததோடு, அரசனாக வேண்டிய அச்சிறுவனுக்காக ஆங்கிலேயர்களின் கொடூரமான தாக்குதல்களையும் முறியடித்து தன் மண்ணையும், மகனையும் காத்தவர் கர்நாடகாவின் கிட்டூர் ராணி சென்னம்மா.
இப்படி வரலாற்றில் சாதனை புரிந்த தாய்மார்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அரசியல் என்றில்லை சாதாரண குடும்பத்துப் பெண்களும் தன் பிள்ளைகளுக்காக எந்த அளவிற்கு தியாகம் புரிந்தவர்கள் என்பதை அந்த பிள்ளைகள் பேரும் புகழும் பெற்ற பிறகும் கூட எப்போதும் தன் அன்னையை போற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள்திலகம் எம்ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்று பட்டியல் உள்ளது.
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே"
என்ற பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திரைப்பாடல் காவியக்கவிஞர் வாலியின் அற்புதப்படைப்பு. கண்ணை மூடி அப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம்முடைய தாயின் தியாகம் நினைவுக்கு வருவதை நம்மால் தடுக்க இயலுமா?
நீங்கள் உங்களை பெற்று வளர்த்த அன்னையை மிகப் பெரிதாக கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. மாறாக, வளர்ந்து ஆளான பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் பெற்றவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை அவர்கள் உயிருடன் இருக்கும் காலம்வரை நிறைவேற்றி வருவதும்,
வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு துன்பப்படும் வேளையில், "கலங்காதீர்கள் நான் இருக்கிறேன்; எதுவாக இருந்தாலும் நான் செய்கிறேன், கடைசிவரை நான் பார்த்துக்கொள்வேன்" என்று அவர்களின் கரங்கைளப் பற்றி ஆறுதல் வார்த்தைகளைத் தந்து அவர்களை மனக்காயம் ஏதுமில்லாமல் வைத்துக்கொள்வதையும்தான் எல்லாப் பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.
தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய வாழ்நாள் கடமைகளை நாம்தான் முன்னிருந்து, பொறுப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு செய்யவேண்டுமே தவிர, நம்முடன் வாழவந்தவர்கள் அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறு. ஏனென்றால் நம் தாய்-தந்தை நமக்குத்தான் எல்லாத் தியாகங்களையும் செய்து நம்மை உருவாக்கி இருக்கிறார்கள்.
எங்கோ பிறந்து வளர்ந்து நம்மைத் திருமணம் செய்துகொண்டு நம்முடன் வாழவந்தவர்கள் மீது நம்முடைய கடமைகளை திணிப்பது மடத்தனம். அதனால்தான் பல பிரச்சினைகள் உருவாகி முதியோர் இல்லங்கள் பெருகி வருவதும், வயதானவர்கள் பலர் தான்பெற்ற மக்களாலேயே கைவிடப்பட்டு கோயில் வாசல்களிலும், சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மானம், சுயமரியாதையை விட்டு கைநீட்டி பிச்சைவாங்கி பிழைக்கிறார்கள். தன் வாழ்வை முடித்துக் கொள்ள தனக்கு உரிமையுண்டு என்ற சட்டமிருந்தால் பல முதியோர் இல்லங்களும், பிச்சைக்காரர்களும் இங்கே இருக்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
"பெற்றோரைக் கவனிப்பதற்கு எனக்கு நேரமில்லை; என்னுடைய வேலைப்பளுவால் என்னுடைய கடமையை செய்யமுடியவில்லை; என் குடும்பத்திற்கே என்னுடைய வருவாய் போதவில்லை, என் பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும், என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், இதில் தாய்-தந்தையை பராமரிக்க, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளைச் செய்ய பணமோ, நேரமோ என்னால் ஒதுக்க முடியவில்லை" என்றெல்லாம் பல்வேறு காரணங்கள், சாக்குபோக்குகள் சொல்லி தாய்-தந்தையை கைவிட்டுவிடுவோர் தன் வாழ்நாளிலேயே நரகத்தை சந்திக்கவேண்டிவரும் என்பதையும், நாம் நம் சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவரை நிராகரித்து விடுவதுபோல் தன் சுகத்தையும், தன் நலத்தையும் பெரிதாக நினைத்து குழந்தைப் பருவத்தில் நம்மை அவர்கள் கைவிட்டிருந்தால் நாம் என்ன ஆகியிருப்போம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இருக்கும்போது கவனிக்காமல் விட்டுவிட்டு, இறந்தபின்னர் கலங்கி என்னசெய்வது? தற்காலத்தில் சிலர் கலங்குவதுகூட இல்லை. அப்பாடா! தொல்லைவிட்டது என்றல்லவா நினைக்கிறார்கள்!
பிள்ளைப்பேற்றின் போது ஆண்கள் உடன்இருப்பதை நம்சமூகம் அனுமதிப்பதில்லை. காலப்போக்கில்ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
இப்போதெல்லாம் மேலைநாடுகளில் குழந்தை பிறக்கும்போது பிரசவம் நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்று கணவன் விரும்பி கூட இருப்பதை அனுமதிக்கிறார்கள்.
வலியால் தாயின் உயிர்போய் மீண்டு வந்துதான் ஒரு குழந்தை இந்த மண்ணிற்கு வந்துள்ளது என்பதை உணர்கின்ற கணவன், அடுத்த பிரசவத்திற்கு தன் முதல் குழந்தையும் கூட இருந்து பார்க்கவேண்டும் என்று, தன் தாய் தன்னை எப்படிப் பெற்றெடுத்தாள் என்பதை அப்பிள்ளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்தி அழைத்து வருகின்றான். இது மேலைநாடுகளில் சாதாரண நிகழ்வாகி அதையும் சமூகவெளிகளில் காட்சிப்படுத்தி வருகிறார்கள்.
நம் நாட்டில் எல்லா தினங்களைப் போல் "அன்னையர் தினம்" என்கின்ற அற்புதமான நாளும் அம்மாவுடன் எடுத்துக் கொள்ளும் நிழற்படம், காணொளிப் பதிவு, ஏதாவது ஒரு கதை போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் அல்லது மற்றவர்கள் பதிவிட்டதைப் பார்த்து தன் பங்குக்கு தானும் எதையாவது காப்பி எடுத்து பதிவிடுவதோடும் சரி என்றாகிவிட்டது.
குறைந்தபட்சம் அன்னையர் தினத்திலாவது தன் அம்மாவிற்கு பிடித்தமானது எது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றித்தருவது, அம்மாவை வெளியில் எங்காவது அழைத்துச் சென்றுவருவது, அன்னையின் மனதில் ஏதேனும் வேதனைகள், ஏக்கங்கள், கவலைகள் இருந்தால் அவற்றை மிக மென்மையாகவும், பொறுமையாகவும் கேட்டறிந்து நம்மால் எதை தீர்க்கமுடியும் என்பதை உணர்ந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்வதும், அன்னையர் தினம் மட்டுமல்லாமல், அன்னையின் வாழ்நாள் இறுதிவரை அவரை மகிழ்ச்சியாக, நிம்மதியாக வைத்துக்கொள்வது என்பதையும் பின்பற்ற வேண்டும்.
அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து எங்கோ ஒருசிலருக்கு தன் பெற்றோரின் மீது சில கசப்பான நினைவுகள், மனவேதனைப்படும் அனுபவங்கள் வாய்த்திருக்கக் கூடும். அவற்றின் காரணமாக தாய்-தந்தையை நினைத்தாலே வெறுப்பு ஏற்படவும் கூடும். எல்லாவற்றிலும் சில விதிவிலக்குகள் இருக்கும்தான். அப்படிப்பட்டவர்களும் தன் வாழ்நாளில் ஏதேனும் நன்மை செய்து மனநிம்மதி தேட வேண்டுமென்றால் தன் பெற்றோர் மீதான வெறுப்பை தள்ளிவைத்துவிட்டு அவர்களின் இறுதிமூச்சுவரை அவர்களை கவனிக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். தன் மகனோ, மகளோ வெறுப்புக்குரியவர்களாகவே இருந்தாலும் எந்தத் தாயும் அவர்கள் பசிபொறுக்கமாட்டாள் என்பதை மட்டும் உணருங்கள்.
வசதியான குடும்பமாக இருந்தாலும், ஏழ்மையான குடும்பமாக இருந்தாலும் இந்த மண்ணிலே ஒவ்வொரு தாயிடமும் அவள் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில் ஒரு ஆழ்ந்த, அழுத்தமான பல துன்பங்கள் நிறைந்த உண்மைக் கதை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் தாயால் நீங்கள் வளர்க்கப்படடிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் சொல்லப்படாத துன்பக் கதையும் உங்கள் தாயிடத்தில் இருக்கும் என்பதை நினைவில் கொண்டு தாயைப் போற்றுங்கள். தாய்மையைப் போற்றுங்கள். திருக்கோயில் தெய்வங்கள் எல்லாம் நம் அம்மாதான் என்பதை மனதில் இருத்தி செயல்பட்டால் எல்லா நாளும் அன்னையர் தினமே!
தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in
- 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
- சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.
"தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆப் இந்தியா
என்னும் நிறுவனம் வழங்கும் படிப்பு தான் "ஆடிட்டர்" என சமூகத்தில் அந்தஸ்து பெற்ற பதவியை வழங்கும் ஆடிட்டர் படிப்பு ஆகும்.
இந்த நிறுவனம் மத்திய அரசின் "மினிஸ்ட்ரி ஆப் கார்ப்பரேட் அப்பையர்ஸ்" என்னும் துறையின் கீழ் இயங்குகிறது. 1949 -ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தி சார்ட்டர்ட் அக்கவுண்ட்டென்ட்ஸ் ஆக்ட்" என்னும் சட்டத்தின் மூலம் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இயங்குகிறது.
இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய முக்கிய நகரங்களில் உள்ளன. இவை தவிர 164 கிளைகள் இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு வசதியாக இயங்குகின்றன.
அபுதாபி, மெல்போர்ன், சிட்னி, பக்ரைன், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா, தோகா, துபாய், இந்தோனேசியா, ஜெட்டா, கென்யா, குவைத், நியூசிலாந்து, நைஜீரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, உகாண்டா, லண்டன், நியூயார்க், யு .எஸ். ஏ, சாம்பியா உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் ஆடிட்டர் படிப்பை நடத்துவதற்கு உதவியாய் இயங்குகின்றன.
இந்த நிறுவனம் மூன்று வகையான முக்கிய படிப்புகளை நடத்துகிறது.
அவை:
1. சார்ட்ர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ்.
2. போஸ்ட் குவாலிபிகேஷன் கோர்சஸ் பார் மெம்பர்ஸ்
3. சர்டிபிகேட் கோர்சஸ் பார் மெம்பர்ஸ் என்பன ஆகும்.
இவற்றுள் சார்டர்ட் அக்கவுண்டன்சி கோர்ஸ் என்பது பிளஸ் டூ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஆடிட்டர் படிப்பு ஆகும்.
ஆடிட்டர் படிப்பை படிப்பவர்களுக்கு தேவையான அனுபவ அறிவும் ஆழ்ந்த நூல் அறிவும் பெறுவதற்கு வசதியாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
சி .ஏ (ஆடிட்டர் ) படிப்பில் சேர்வது எப்படி?
சி.ஏ படிப்பில் நேரடியாக சேர்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
அவை,
1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட்
2. டைரக்ட் என்ட்ரி ரூட்.
1. பவுண்டேஷன் கோர்ஸ் ரூட் ( FOUNDATION COURSE ROUTE)
பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் அடிப்படை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
இருந்தபோதும், இவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்ற பொழுதே தங்களது பெயரை இந்நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும், ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பும் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
இப்படி பத்தாம் வகுப்பு தகுதியை வைத்து முன்கூட்டியே பெயரை பதிவு செய்தவர்கள்,பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடன் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுதலாம். அதாவது, மே /ஜூன் மாதம் அல்லது நவம்பர் /டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு எழுதலாம்.
பிளஸ் டூ மற்றும் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், அடுத்த கட்ட தேர்வான இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
இருந்தபோதும், இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் அடுத்த கட்ட தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் அவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும்.
பவுண்டேஷன் மற்றும் இன்டர்மீடியட் கோர்ஸ்களில் வெற்றி பெற்றவர்கள் கண்டிப்பாக நான்கு வாரங்கள் "கிரியேடிவ் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் படிப்பை முடித்து, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆடிட்டர் படிப்பில் தேவையான அனுபவ அறிவு பெறுவதற்கு கண்டிப்பாக மூன்று வருடங்கள் "பிராக்டிகல் டிரெனிங்" என்னும் பயிற்சியை பெற வேண்டும். இந்த பயிற்சியை ஆடிட்டர்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சி பெறுவதற்கு முன்பே, இந்த நான்கு வார "இன்டர்கிரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்" என்னும் பயிற்சியை தனியாக பெற்று சான்றிதழ் பெறுவது நல்லது.
ஆடிட்டரிடம் அனுபவ பயிற்சியை பெறுவதற்கு, இன்டர்மீடியட் கோர்ஸ் படிக்கும்போதே சேர்ந்து கொள்ளலாம் அல்லது இன்டர்மீடியட் கோர்ஸ் மற்றும் பைனல் கோர்ஸ் இரண்டிலும் வெற்றி பெற்ற பின்பும் சேர்ந்து கொள்ளலாம்.
பொதுவாக, ஆடிட்டர் படிப்பில் இறுதித் தேர்வு எனப்படும் பைனல் எக்சாம் எழுதுவதற்கு முன்பே ஆடிட்டரிடம் அனுபவப் பயிற்சி பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.
போதுமான அனுபவ பயிற்சி பெற்ற பின்பு இரு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பின்பு ஆடிட்டராக பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
2. டைரக்ட் என்ட்ரி ரூட்.
"டைரக்ட் என்ட்ரி ரூட்"என்னும் முறையில் சி. ஏ படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக வணிகவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்களும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வணிகவியல் பாடம் அல்லாத மற்ற பாடங்களில் படிப்பை பட்டப் முடித்தவர்கள், கண்டிப்பாக பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதேபோல், வணிகவியல் பாடம் அல்லாத பட்டப் மேற்படிப்பை முடித்தவர்களும் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
"இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா" நடத்துகின்ற "இன்டர்மீடியட் லெவல் "தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
தேர்வு திட்டம்.
பவுண்டேஷன் கோர்ஸ்.
பவுண்டேஷன் கோர்ஸ் எனப்படும் தேர்வில்,
1. பிரின்ஸ்பில்ஸ் அண்ட் பிராக்டிஸ் ஆப் அக்கவுண்டிங்
2. பிசினஸ் லாஸ் & கரஸ்பாண்டன்ஸ் பிசினஸ் அண்ட் ரிப்போர்ட்டிங் .
3. பிசினஸ் மேத்தமேடிக்ஸ் & லாஜிக்கல் ரீசனிங் மற்றும் ஸ்டாடிஸ்டிக்ஸ்,
4. பிசினஸ் எக்கனாமிக்ஸ் & பிசினஸ் அண்ட் கமர்சியல் நாலெட்ஜ் ஆகிய பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
இன்டர்மீடியட் கோர்ஸ்.
இன்டர்மீடியட் கோர்ஸ் என்னும் தேர்வில் குரூப் 1 குரூப் 2 ஆகிய பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன
குரூப்-1 தேர்வில்,
1. அக்கவுண்டிங்
2. கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ்
3. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங்
4. டேக்ஸ்சேசன்
பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
குரூப் 2 தேர்வில்,
1. அட்வான்ஸ் அக்கவுண்டிங்
2. ஆடிட்டிங் அண்ட் அசுரன்ஸ்
3. என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் மேனேஜ்மென்ட்,
4. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அண்ட் எகனாமிக்ஸ் பார் பைனான்ஸ் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
பைனல் கோர்ஸ்
பைனல் கோர்ஸ் எனப்படும் இறுதி தேர்வில் குரூப் -1 மற்றும் குரூப் -2 ஆகிய பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
குரூப் -1 தேர்வில்,
1. பைனான்சியல் ரிப்போர்ட்டிங்
2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்
3. அட்வான்ஸ் ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எத்திக்ஸ்,
4. கார்ப்பரேட் அண்ட் எகனாமிக் லாஸ்
ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
குரூப் 2 பிரிவில்
1. ஸ்ட்ராட்டஜி காஸ்ட் மேனேஜ்மென்ட் அண்ட் பெர்பார்மன்ஸ் எவாலுவேசன்,
2. விருப்ப பாடம் (கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களில் ஏதேனும் ஒரு விருப்ப பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
a) ரிஸ்க் மேனேஜ்மென்ட்
b) பைனான்சியல் சர்வீசஸ் அண்ட் கேப்பிட்டல் மார்க்கெட்ஸ்,
c) இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்,
d) எக்கனாமிக் லாஸ்
e) குளோபல் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்
f) மல்டி டிசிப்ளினரி கேஸ் ஸ்டடி
3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேசன்
4. இன்டைரக்ட் லாஸ்
ஆகிய பாடங்களில் தேர்வுகள் இடம் பெறும்.
ஏராளமான வேலை வாய்ப்புகள்
"சார்ட்டட் அக்கவுண்டன்ட்" படிப்பை முடித்தவர்கள் மிகச்சிறந்த திறமைகளை கொண்டவர்களாக இருப்பதால், இவர்களுக்கு பைனான்சியல் ரிப்போர்ட்டிங், நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ், பைனான்ஸ் அண்ட் கார்ப்பரேட் லா போன்ற துறைகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன.
இவர்கள் ஆடிட்டராகவும் சொந்தமாக தொழில் செய்யலாம். மேலும், அரசுத்துறை கூட்டுறவு சங்கங்கள் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக வேலை வாய்ப்புகள் இவர்களுக்கு உள்ளன.
இந்தியாவில் ஜி.எஸ்.டி எனப்படும் "கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்கு ஆடிட்டர்களின் உதவி கண்டிப்பாக தேவை.
பல நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சட்டபூர்வமாக செலுத்துவதற்கு, ஆடிட்டர்களின் உதவியை நாடுகிறார்கள். இவை தவிர, ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், துறை தணிக்கைகளுக்கு துணை நிற்கவும் ஆடிட்டர்களின் சேவை பெருமளவில் உதவியாய் அமைகிறது.
மேலும் விவரங்களுக்கு,
1. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 29, செக்டார் 62 நொய்டா-201 309.
இணையதள முகவரி : www.icai.org.
2. தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்க வுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஐ.சி.ஏ.ஐ. பவன், 122 மகாத்மா காந்தி ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034.
தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com
- எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!
- ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும்.
"தீபாவளி வருது! அந்த பழைய வெள்ளி விளக்கத்தொடச்சு வெய்ங்களேன்! நான் தான் காலையிலேர்ந்து பட்சணம் செய்திட்டு இருக்கேன்ல?"
"அட என்னம்மா! மாலை மலரை முழுசாப்படிக்க விட மாட்டேங்கற! இரு வரேன்!"
புகை எங்கும் புகை!
"அய்யோ! யார் நீ? பூதமா?"
"எனக்கு விடுதலை அளித்த வள்ளலே! உமக்கு ஒரு வரம் தந்தேன்! என்ன வேண்டும் கேளுங்கள்!"
"நெஜம்மாவே நீ பூதமா? சரி, எனக்கு ஆபீஸ் போய் வர ஒரு கார் தாயேன்!"
"அடசே! என்னய்யா மனுஷன் நீ? அங்க உள்ள உன் ஒய்ப் வீட்டு வேல செஞ்சு கஷ்டப்படறா! வீட்டுக்குத்தேவையான பொருளா எதுனா கேளு!"
"அப்படி என்ன பொருள் இருக்கு ஸ்பெஷலா?"
நானே சொல்றேன் கேட்டுட்டு முடிவு பண்ணு!"
பாண்டல்லிஜெண்ட் (Pantelligent) ன்னு ஒரு வாணலி இருக்கு. அத அடுப்புல வெச்சு புளூ டூத்ங்கற டெக்னாலஜி கொண்டு உன் மொபைல் போனிலேர்ந்து வித விதமா சமையல் பண்ண உதவும்!"
"என்னது புளூ டூத் வாணலியா?'
"ஆமா! ஒரு செயலி மூலம் வேணுங்கற ரெஸிப்பிய உன் மொபைலில டவுன்லோட் பண்ணிட்டா, அத வெச்சு அந்த ரெஸிப்பி சொல்லும் ஒவ்வொரு ஸ்டெப்பையும் தானா செயல்படுத்தி உனக்கு வேணுங்கற பதார்த்தத்தை அமர்க்களமா சமைச்சுக்கொடுத்துடும்! எப்போ சூடு அதிகரிக்கணும் எப்ப குறைக்கணுமெல்லாம் அந்த செயலியே பாத்துக்கும்!"
"அடேயப்பா!"
"அடுத்து இன்னொரு ஐட்டம் இருக்கு! வீட்டம்மா கடுமையா வேலை செஞ்சுட்டு நிம்மதியா டீவியில் சீரியல் சினிமான்னு பாக்கறாங்க இல்ல? அந்த அனுபவத்தை அவங்களுக்கு மேம்படுத்திக்கொடுத்தா எத்தன சந்தோஷப்படுவாங்க!"
"ஆமா கரெக்டுதான்! சொல்லு சொல்லு!"
" சாம்சங் கம்பெனியில வளைந்த திரையுடன் ஒரு 4K Ultra HD smart LED TV கொண்டு வந்திருக்காங்க! சும்மா இல்லை, 88 இஞ்ச் ஸ்கிரீன், அப்படியே சினிமா தியேட்டர் கணக்கா இருக்கும் பார்க்கும் அனுபவம்! படம் பார்க்கும்போது ரஜினி அப்படியே நம்ம வீட்லயே வந்து வசனம் பேசறாமாதிரி நெருக்கமான எக்ஸ்பீரியன்ஸ்!" கிடைக்கும்.
"அப்ப அது ஒண்ணு நோட் பண்ணிக்க!" வேறேன்ன?"
"புராண்டோ (Pronto) என்னும் செயலிக்கம்பெனி Peel Smart Remote என்னும் கம்பெனியோடு ஜோடி போட்டுத்தயாரித்துள்ள ரிமோட் ஒண்ணு வந்திருக்கு."
"ரிமோட்ட வெச்சுக்கிட்டு…?"
"முழுசா கேளு! இந்த ரிமோட் செயலி உன்னோட மொபைல் போனிலயே வீட்ல இருக்கும் எல்லா சாதனங்களையும் தொடர்பு கொள்ளச்செய்துவிடும். அவ்வளவுதான்! உன்னோட மொபைல் ஒண்ணை வெச்சுண்டு எதையும் இயக்கலாம். அமெரிக்காவுல செய்வது போல நீயும் இதை வாங்கினதோட ஒரு ரோபோவையும் வாங்கி வெச்சுடு. மொபைல் போன் மூலமா என்ன டி.வி. புரோகிராம் இருக்குன்னு தெரிஞ்சு, அப்படியே அந்த டைமுக்கு டி.வி. ஆன் பண்றாமாதிரி செட் பண்ணிட்டு, கூடவே உனக்கு ஞாபகப்படுத்த அலாரமும் வெச்சுட்டா போதும், அந்த டைமுக்கு அலாரம் அடிக்க, நீ வந்து சோபாவுல உட்கார்ந்தா, டி.வி. தானா ஆன் ஆகி அந்த புரொகிராம் ஓட ஆரம்பிக்கும். மொபைல் அழுத்தி ரோபோவைக்கூப்பிட்டு பிரிட்ஜ்ஜிலேர்ந்து ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் கோலா பாட்டிலும் கொண்டு வரச்சொல்லிட்டா, நீ பாட்டுக்கு ஹாய்யா உட்கார்ந்துண்டு டி.வி. பார்க்கலாம்!"
"அடடா கேட்கவே சொகம்மா இருக்கே! அப்புறம்?"
"போன மாசம் ஏதோ டாகுமெண்ட்டைக்காணும்னு ஒய்ப்கிட்ட சத்தம் போட்டுண்டு இருந்தியே?"
ஆமா! உனக்கெப்படி தெரியும்?'
"நான் இந்த விளக்குலதானே இருந்தேன், ஏன் தெரியாம! இன்னமே அந்த கஷ்டமெல்லாம் இல்லாம இருக்க ஒரு சேப் லாக்கர் வந்திருக்கு. பூட்டு எங்க சாவி எங்கன்னு அல்லாட வேண்டாம். (Wi Fi) ஒய் பை இணையம் மூலம் தொடர்பு கொண்டு உன் குரலை வெச்சே லாக்கரைத்திறக்கலாம், மூடலாம்! First Alertன்னு ஒரு கம்பெனி இந்த மாதிரி ஒய் பை அலமாரி செய்யறாங்க!"
"டெக்னாலஜி என்னவெல்லாம் பண்ணுது!"
"இதையும் கேளு! நம்ம பிலிப்ஸ் கம்பெனி இருக்கு பாரு அவங்க கூட நுண்ணறிவு கொண்ட லைட்டெல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சாச்சு!"
"என்னது நுண்ணறிவு கொண்ட விளக்கா?"
"ஆமா! இந்த லைட்டை ரிமோட் வெச்சு பிரைட்டாகவோ இல்லை டிம்மாகவோ ஆக்கலாம். நீ ஆபீஸ்லேர்ந்து ஒரு ஜாலி மூடுல வரும்போது உன்னோட மொபைல் போன்லயே மூடை செட் பண்ணிட்டா, ஸ்விட்ச் போட்டவுடனே லைட் உன் மூடுக்கேத்தா மாதிரி எரியும்!"
"இந்த ஒரு டெக்னாலஜி எனக்கு சரிப்பட்டு வராதே பூதமே!"
"அது ஏன்?"
"இப்படிதான் போன வாரம் வந்து ஆரஞ்சு பல்பைப்பொருத்தி ரொமாண்டிக்கான மூடுக்காக போட்டு வெச்சேன்!"
"என்னது ஆரஞ்சு பல்பு ரொமாண்டிக்காவா? அடக்கஷ்டமே!
"அதேதான்! என்ன அழுது வடிஞ்சுண்டுன்னு ஒரு விளக்குன்னு அவ உடனே ஆப் பண்ணிட்டா!"
" உன்னையும் சேர்த்தா?'
" ஏய் பூதமே! என்ன கேலியாபண்றே? இப்ப நீ சொன்ன ஐட்டம் எல்லாத்தையும் இங்க வீட்ல பொருத்து! ம் க்விக்!"
"முடியாது எஜமானனே! நீ வெளக்கை தேய்ச்ச தேய்ப்புக்கு ஒரு வரம்தான் அனுமதி!"
"சரி அந்த ஒரு வரத்தை தா!"
"கொடுத்தாச்சே!
"எப்பய்யா கொடுத்தே? அழுகுணி ஆட்டமா இருக்கே! பூதங்கள்ள கூட இந்த தப்பாட்டம் உண்டா?"
"இல்லை எஜமான்னே! இந்த டெக்னாலஜி விஷயங்கள்ளாம் உனக்கு தெரிவித்து உன் பொது அறிவை மேம்படுத்தியதுதான் நான் அளித்த வரம்!. உங்க சான்ஸ் ஓவர்! வர்ட்டா!"
"ஒரு வெளக்க துடைச்சு வெக்கச்சொன்னா என்ன வெட்டியா உட்கார்ந்துண்டு இருக்கீங்க?"
"இல்ல பூதம்…?"
"என்னது என்னைப்பார்த்தா பூதம் மாதிரி இருக்கா? இருக்காதா பின்னே? உங்க வீட்டு வேலையெல்லாம் மாஞ்சு மாஞ்சு இடுப்பொடிய செய்யறேனே! அதுக்கு எனக்கு பூதம்னு பேர் வெச்சுறதா?''
லொட்!
கடைசிச்செய்தியின் படி அரை மணிக்குப்பிறகு அந்த வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்ததாக அறிகிறோம்!
- காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி பிரிவை அறிவியல் பூர்வமாக அணுகி, பல நிறுவனங்களை திறம்பட நடத்த இந்த அமைப்பு மிகவும் உதவியாக அமைகிறது.
- எஸ்.எஸ்.எல்.சி என அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம்.
தி இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா (THE INSTITUTE OF COST ACCOUNTANTS OF INDIA) என்னும் நிறுவனம் நடத்தும் படிப்புதான் சி.எம். ஏ (CMA) ஆகும்.
இந்த நிறுவனம் முன்பு தி இன்ஸ்டியூட் ஆப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது.
1944-ம் ஆண்டு கம்பனி சட்டத்தின்படி( பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பு ,காஸ்ட் அக்கவுண்டன்சி (COST ACCOUNTANCY) சம்பந்தப்பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் உருவாக்கப்பட்டதாகும்.
உலகம் முழுவதும் இந்த அமைப்பிற்கு கிளைகள் உள்ளன.
இதன் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் செயல்படுகிறது. இந்த அமைப்பிற்கு இந்தியா முழுவதும் 113 கிளைகள் உள்ளன. உலக நாடுகளில் 11 கிளைகளும் இயங்குகின்றன.
காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் அக்கவுண்டன்சி பிரிவை அறிவியல் பூர்வமாக அணுகி, பல நிறுவனங்களை திறம்பட நடத்த இந்த அமைப்பு மிகவும் உதவியாக அமைகிறது.
ஏராளமான வேலை வாய்ப்புகள்:
சி.எம்.ஏ என அழைக்கப்படும் காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் என்னும் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, காஸ்ட் ஆடிட் (Cost Audit), மெயின்டனன்ஸ் ஆப் காஸ்ட் ரெக்கார்ட் ( Maintenance of Cost Records),
ஜி.எஸ்.டி ஆடிட்(GST Audit),
இன்டர்னல் ஆடிட் (Inernal Audit), ஸ்டாக் ஆடிட் பார் பேங்க்ஸ் ( Stock Audit for Banks), டேக்ஸ் கன்சல்டன்சி( Tax Consultancy), புராஜெக்ட் மேனேஜ்மென்ட் (Project Management), சர்வேயர் அண்ட் லாஸ் அஸ்ஸஸ்ஆர்- இன்சூரன்ஸ் (Surveyor and Loss Assessor- Insurance), ரிக்கவரி கன்சல்டன்ட் இன் பாங்கிங் செக்டார் (Recovery Consultant in Banking Sector), காம்ப்ளெய்ன்ஸ் ஆடிட் ஆப் ஆர்.பி.ஐ (Compliance Audit of R.B.I),
இன்சால்வன்சி புரொபஷனல் ( Insolvency Professional), ரிஜிஸ்டர்ட் வேல்யுவர் ( Registered Valuer), இன்பர்மேஷன் சிஸ்டம் செக்யூரிட்டி ஆடிட் ( Information System Security Audit), சர்டிபிகேஷன் அண்டர் எக்ஸ்சிம் பாலிசி (Certification Under EXIM Policy)
என ஏராளமான வேலை வாய்ப்புகள் இந்த படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயர்நிலை வேலை வாய்ப்புகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சி.இ.ஓ (CEO), சி.ஓ. ஓ.(COO) சி .எப். ஓ.(CFO), டைரக்டர் -(DIRECTOR-FINANCE) பிரசிடெண்ட்- பைனான்ஸ் (PRESIDENT -FINANCE), வைஸ் பிரசிடெண்ட்- பைனான்ஸ் (VICE-PRESIDENT -FINANCE), ஹெட் ஆப் பைனான்ஸ்(HEAD OF FINANCE)
ஸ்ட்ராட்டஜிக் ஹெட் (STRATEGIC HEAD),
காஸ்ட் அட்வைசர் (COST ADVISOR),
பைனான்ஸ் கண்ட்ரோலர் (FINANCE CONTROLLER)
காஸ்ட் கண்ட்ரோலர் (COST CONTROLLER), ரிஸ்க் மேனேஜர்(RISK MANAGER), பிசினஸ் அனலிஸ்ட் (BUSINESS ANALYST)
ரிசர்ச் அனலிஸ்ட்( RESEARCH ANALYST)
புரொபசர் ஆப் பைனான்ஸ் (PROFESSOR OF FINANCE) போன்ற பதவிகள் சி .எம். ஏ (CMA) படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்க ளுக்கு கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.
படிப்பில் சேர தகுதிகள்:
எஸ்.எஸ்.எல்.சி என அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், இவர்கள் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற பின்புதான், பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுத இயலும்.
பிளஸ் டூ முடித்தவர்கள் பவுண்டேஷன் கோர்ஸ் (FOUNDATION COURSE)என அழைக்கப்படும் அடிப்படை நிலை வகுப்பில் நேரடியாகவே முதலில் சேர்ந்து கொள்ளலாம்.
பவுண்டேஷன் கோர்ஸ் படிப்பில் வெற்றி பெற்ற பின்பு இன்டர்மீடியட் கோர்ஸ் (INTERMEDIATE COURSE)மற்றும் பைனல் கோர்ஸ் ( FINAL COURSE) ஆகிய தேர்வுகள் எழுதி சி.எம். ஏ படிப்பில் வெற்றி பெறலாம்.
தேர்வுக்கான பாடங்கள்:
சி.எம்.ஏ தேர்வுகளில் இடம்பெறும் பாடங்கள் விவரம்.
பவுண்டேஷன் கோர்ஸ் (FOUNDATION COURSE).
1. பண்டமென்டல் ஆப் பிசினஸ் லாஸ் அண்ட் பிசினஸ் கம்யூனிகேஷன்.
2. பண்டமென்டல் ஆப் பைனான்சியல் அண்ட் காஸ்ட் அக்கவுண்டிங்.
3. பண்டமென்டல் ஆப் பிசினஸ் மேத்தமேடிக்ஸ் அண்ட் ஸ்டேடிஸ்டிக்ஸ்
4. பண்டமென்டல் ஆப் பிசினஸ் எக்கனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட்.
இன்டர்மீடியட் கோர்ஸ் (INTERMEDIATE COURSE):
குரூப் -1 (GROUP-1)
குரூப்-1 தேர்வில்,
1. பிசினஸ் லாஸ் அண்ட் எதிக்ஸ்
2. பைனான்சியல் அக்கவுண்டிங்
3. டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் டேக்ஸ் சேஷன்.
4. காஸ்ட் அக்கவுண்டிங்
-ஆகிய பாடங்கள் உள்ளன.
குரூப் 2 (GROUP-2):
குரூப் 2 தேர்வில்,
1. ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் அண்ட் ஸ்டேடர்ஜிக் மேனேஜ்மென்ட்
2. கார்ப்பரேட் அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங்
3. பைனான்சியல் மேனேஜ்மென்ட் அன்ட் பிசினஸ் டேட்டா அனாலிடிக்ஸ்
4. மேனேஜ்மென்ட் அக்கவு ண்டிங்.
-ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.
பைனல் கோர்ஸ் (FINAL COURSE):
குரூப் - (GROUP-3):
குரூப்-3 தேர்வில்,
1. கார்ப்பரேட் எக்கனாமிக் லாஸ்
2. ஸ்ட்ராட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மென்ட்
3. டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டேக்ஸ்சேஷன்
4. ஸ்ட்ராட்டஜிக் காஸ்ட் மேனேஜ்மென்ட்
-ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.
குரூப் -4 (GROUP-4):
குரூப் 4 தேர்வில்,
1. காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் ஆடிட்
2. கார்ப்பரேட் பைனான்சியல் ரிப்போர்ட்டிங்
3. இன்டைரக்ட் டேக்ஸ் லாஸ் அண்ட் புராக்டீஸ் -ஆகிய பாடங்கள் இடம்பெறுகின்றன.
மேலும் விருப்ப பாடங்களாக மூன்று பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும்.
விருப்ப பாடங்கள் (ELECTIVE SUBJECTS):
1.ஸ்டேட்டர்ஜிக் பெர்பார்மென்ஸ் மேனேஜ்மென்ட் அண்ட் பிசினஸ் வேல்யூவேஷன்.
2. ரிஸ்க் மேனேஜ்மென்ட் இன் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ்
3. என்ட்ரபிரநியூர்ஷிப் (ENTREPRENEUR SHIP) அண்ட் ஸ்டார்ட் அப்.
இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதோடு சி.எம்.ஏ. படிப்பில் கீழ்கண்ட பயிற்சிகளையும் பெற வேண்டியது அவசியமாகும்.
டிரைனிங் அண்ட் வொர்க்ஷாப்ஸ் (TRAINING AND WORKSHOP.)
டிரைனிங் அண்ட் வொர்க் ஷாப்ஸ் பிரிவின் கீழ்,
I. சாப்ட் அண்ட் டெக்னிக்கல் ஸ்கில் டிரைனிங்(140 மணி நேரங்கள்) (SOFT AND TECHNICAL SKILLS TRAINING ( 140 HOURS)
இந்த பிரிவின் கீழ்,
1. SAP Finance Power User Training
2. Microsoft Office Training
3. Cambridge University Press Soft Skill Training.
4. E -Filing Training
ஆகிய சிறப்பு பயிற்சிகள் உள்ளன.
II. டுயூட்டோரியல் ஒர்க் ஷாப்ஸ் (44 மணி நேரங்கள்) ( Tutorial Workshops) (44 Hours)
III. இண்டஸ்ட்ரி ஓரியண்டட் டிரைனிங் ப்ரோக்ராம்ஸ் (7 நாட்கள்) ( Industry Oriented Training Programme)( 7 Days)
IV பிராக்டிகல் டிரைனிங் (15 மாதங்கள்) (Practical Training )(15 months)
பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் கவனத்திற்கு...
ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு நடத்தப்படும். ஜூன் மாதம் நடைபெறும் தேர்வு எழுத விரும்புபவர்கள் அந்த வருடத்தில் ஜனவரி 31-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதைப்போலவே,டிசம்பர் மாதம் நடைபெறும் பவுண்டேஷன் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அந்த வருடத்தின் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு,
Southern India Regional கவுன்சில்
4, Montieth Lane, Egmore, Chennai - 600 008
Ph:044-28554443/28554326/28528219
Fax : 91- 044- 28554651 , Website: www.sircoficwai.com, Email: sirc@icmai.in
தொடர்புக்கு: nellaikavinesan25@gmail.com
- எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.
- அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது.
எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது.திறமை இருந்தால் நீங்களும் ஆடலாம் என்று ஆட தெரியாதவர்களையும் ஆட வைத்த மேடை மானாட... மயிலாட...
ஏற்கனவே 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 3-வது சீசன் தொடங்கியது. இது புதுமைகளை புகுத்திய சீசன் என்பதை விட புதியவர்களும் புகுந்து விளையாடிய சீசன் என்பதுதான் சரியாக இருக்கும்.
ஏற்கனவே 2-வது சீசன் பற்றி நான் தெரிவித்து இருந்தேன். அந்த சீசனில் மிகச்சிறந்த போட்டியாளர்களாக இருந்த ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி சூழ்நிலை காரணமாக அரை இறுதிக்கு பிறகு கலந்து கொள்ள முடியாமல் போனது. எனவே அவர்களுக்கு இந்த சீசனில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இந்த சீசனில்தான் புதிதாக எங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறோமே இதே போல் திறமையானவர்கள் வெளியிலும் இருக்கலாமே! அவர்களையும் தேடி பிடித்து ஆட வைத்தால் என்ன? என்று நினைத்தோம்.
எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற தொலைக்காட்சிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஆடிசன் நடத்தப்பட்டது. பலரும் தேர்வுக்கு வந்திருந்தார்கள். அதில் இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தோம்.
அப்போது என்னிடம் கேட்டார்கள். சின்னத்திரையில் நடித்து கொண்டிருப்பவர்கள் நன்றாக நடனம் ஆட தெரிந்தவர்கள். அவர்களுக்கென்று ரசிகர் பட்டாளமும் இருக்கும். ஆனால் நீங்கள் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? அவர்களுக்கு வரவேற்பு கிடைக்குமா? என்றார்கள்.
நான் நடனம் பயின்றவள். பயிற்சி அளித்து கொண்டிருப்பவள். எனவே ஒருவர் நடந்து வருவதை வைத்தே இவரிடம் ஆடும் திறமை இருக்கிறதா என்பதை கணிக்க முடியும். அப்படித்தான் போட்டியாளர்களை தேர்வு செய்தோம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அசார்-ரஜினி ஜோடி, தர்ஷினி-பயாஸ் ஜோடி. இவர்களுடைய நடனம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது. இவ்வளவு திறமை உள்ளவர்கள் வெளியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது திறமைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. நன்றாக ஆடினால் போதும். ரசிகர்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அசாரின் நடனத்தை பார்த்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருந்தது. இப்போது ரஜினிக்கும் திருமணமாகிவிட்டது. அசாருக்கும் திருமணமாகிவிட்டது. இருவரும் நல்ல நிலையில் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
அதேபோல் தர்ஷினி-பயாஸ் ஜோடியில், பயாசுக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்து சினிமாவிலே சில வாய்ப்புகள் கிடைத்தன.
இந்த சீசனில் காட்சிக்காக செட்டுக்கள் அமைப்பதிலும் புதிய கற்பனையை கையாண்டோம். செட்டுக்கள் அனைத்தும் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 3-வது தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது. 3-வது சீசனுக்கு 3-வது தளம்... என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்? கோயம்பேடு மார்க்கெட் போன்ற செட், வீடுகள் போன்ற செட், வரலாற்று காட்சிகளுக்காக அரன்மணை போன்ற செட் ஆகியவற்றை அமைத்து இருந்தோம்.
வீடுகள் போன்ற செட்டுக்கு எம்.ஜி.ஆர். நடித்த நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்... என்ற பாடலுக்கு ஏற்றபடி கையில் சாட்டையை வைத்துக்கொண்டு ஆடினார்கள். நிஜமாகவே வாத்தியாரை கண்முன் கொண்டு வந்துவிட்டார்கள். பழைய பாடலுக்கு ஆடினார்கள். இந்த சீசனில்தான் இன்னொரு புதுமையையும் அரங்கேற்றினோம். கலர்ஸ் என்ற பெயரில் ஒரு சுற்று. இந்த சுற்றில் போட்டியாளர்கள் பெயர்களில் ஒரு குலுக்கள் நடத்தப்படும். அதில் அவர்கள் எடுக்கும் சீட்டில் என்ன நிறம் இருக்குமோ அந்த நிறத்திலான காஸ்டியூம்களை அணிந்து அவர்கள் ஆட வேண்டும். அவர்கள் ஆடை அணிவது மட்டுமல்ல அந்த மேடையும் முற்றிலும் அதே நிறத்தில் மாற்றப்பட்டிருக்கும். அமர்ந்திருக்கும் நடுவர்களும் அதே கலர் காஷ்டியூமில்தான் இருக்க வேண்டும்.
இப்படி ஒரு காட்சி அமைப்பை நான் சொன்னதும், இது சிரமம். முடியாது என்றுதான் சொன்னார்கள். ஆனால் அதையும் முடித்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். இதில் என்ன சிரமம் என்றால் அந்த கலருக்கு ஏற்ற வகையில் மேடையை மாற்றுவதுதான். அதற்குதான் குறைந்தபட்சம் 3 மணி நேரம் வரை ஆனது. இப்படி ஒவ்வொரு ஜோடியும் ஆடியதை காட்சிப்பதிவு செய்வதற்கு காலை முதல் சூட்டிங் முடிவதற்கு நள்ளிரவு வரை ஆகும். அப்படித்தான் காட்சிகளை எடுத்தோம். இது மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
சூரியகாந்தி பூக்களின் பின்னணியில் இருப்பதை போன்ற ஒரு செட் அமைத்து அதில் அந்த பூந்தோட்டத்துக்குள் ஹீரோ சுற்றி வந்து டூயட் பாடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுஇருந்தது. அந்த காட்சியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைவிட முக்கியமாக வெளியில் இருந்து தேர்வு செய்து கொண்டு வந்த போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள் என்று சொல்வதை விட நாங்களும் நட்சத்திரங்களுக்கு ஈடு கொடுப்பவர்கள்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒரு போட்டியாளரான அசார், குஷ்புவுடனே ஜோடி போட்டு ஆடினார்.
அவர் குஷ்புவுடன் ஆட தயார் என்றதும் குஷ்புவுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவரும் இணைந்து ஆடுவதற்கு சம்மதிக்கவே 'ரோமியோ ஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே... அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே" என்ற பாடலுக்கு கைதேர்ந்த கலைஞரை போல அசார் ஆடியதை பார்த்து குஷ்புவும் ஆச்சரியப்பட்டார். அவரும் அசாருக்கு ஈடு கொடுத்து அந்த டூயட் பாடலில் அசத்தினார்.
அதே போலதான் அசாருடைய ஜோடி ரஜினி ஒரு எபிசோட்டில் ஒரு விபத்து காரணமாக ஆட வர முடியவில்லை. உடனே அந்த எபிசோட்டின் தொகுப்பாளினி யாக இருந்த கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து ஆட தயார் என்றதும், கீர்த்தியும் அவரோடு ஆடி அசத்தினார்.
ஒவ்வொரு சீசனிலும் 30 முதல் 35 எபிசோடு வரை இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 3-வது சீசனில்தான் 100-வது எபிசோட்டை நிறைவு செய்திருந்தோம். அதற்காக சிறப்பு சுற்று ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். அதல் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அதாவது சிம்பு, தனுஷ் ஆகியோரது படப் பாடல்களை எடுத்து அதற்கு ஏற்ற வகையில் ஆட வேண்டும் என்பதுதான் அது.
இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ புது புது நிகழ்ச்சிகள் டி.வி.க்களில் வருகின்றன. அதிலும் திறமையானவர்களை தேடி பிடித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதற்கு அடிப்படையாக இருந்தது எங்களின் மானாட மயிலாட தான் என்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
3-வது சீசன் நிறைவு விழாவுக்கும், பரிசளிப்பு விழாவுக்கும் நடிகை ஸ்ரேயா வந்து சிறப்பித்தார். அவர்தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அளித்தார். இந்த சீசனில் ஐஸ்வர்யா-ரஞ்சித் ஜோடி முதல் பரிசை தட்டி சென்றது. 2-வது பரிசை பயாஸ்-தர்ஷினி ஜோடியும், 3-வது பரிசை அசார்-ரஜினி ஜோடியும் பெற்றது. அசாருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் காரணமாக அவருக்கு 3-வது பரிசு கொடுக்கப்பட்டது கூட சர்ச்சையானது. பல ரசிகர்கள் அவருக்கு 3-வது பரிசா என்று ஆதங்கப்பட்டதும் உண்டு. அந்த அளவுக்கு சாதாரணமானவர் களையும் ஜொலிக்க வைத்த மேடை மானாட... மயிலாட... அடுத்த வாரம் இன்னும் புதிய தகவல்களுடன் 4-வது சீசனில் உங்களை சந்திக்கிறேன்.
- புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார்.
- சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.
"நான் வாழும்வரை, என் கரங்களில் இரத்த ஓட்டம் இருக்கும்வரை, எந்தக் காரணத்தை முன்னிட்டும் சுதந்திரத்திற்கான என் போராட்டங்களை விட்டுவிட மாட்டேன். நான் ஒரு பெண்ணாக, கவிஞராக உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கேடயமாகவும், ஆயுதங்களாகவும் தருகிறேன். என் பாடல்களை ஒலிப்பதாகைகளாக வீசுகிறேன். அதன் மூலம் போருக்கான அழைப்பை விடுக்கிறேன். என் மக்களே! அடிமைத்தனத்திலிருந்து உங்களை எழுப்பும் சுடரை நான் எப்படித்தான் ஏற்றுவது?"
மேற்காணும் உணர்ச்சி மிக்க கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர்தான் இந்தியாவில் முதல்பெண் ஆளுநராக பதவியேற்று சிறப்பாக பணியாற்றியவர். பல்வேறு சாதனைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவர். சிறப்பான தன் கவிதைகளின் மூலம் அயல்நாட்டு ஆங்கிலக் கவிஞர்களால் கொண்டாடப்பட்டவர். மகாத்மா காந்தியால் "இந்தியாவின் நைட்டிங்கேல்" என்று பட்டம் சூட்டப்பட்டவர்.
பிறக்கும்போதே அறிவார்ந்த செல்வக்குடும்பத்தில் பிறப்பதும், கல்வி, கலைகள், பன்மொழிப் புலமை, கவிதை, கட்டுரை படைக்கும் ஆற்றல், அயல்நாடு சென்று உயர்கல்வி பெற்று அறிவும், ஆற்றலும் பெருகுதல் என்று எங்கோ ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்புகளும் வாழ்க்கையும் வாய்க்கும். அப்படி வாழ்க்கை அழகாகவும், வசதியாகவும், சுகமாகவும் அமைந்துவிடும்போது அவற்றை துய்த்து மகிழ்வதில்தான் எல்லோரும் நாட்டம் கொள்வர்.
பெருமைக்குரிய, மகிழ்ச்சியான உயர்வாழ்வு அமைந்தாலும் அவற்றை எல்லாம் அனுபவிப்பதை விட்டுவிட்டு குடும்பக் கடமைகளையும் கவனித்துக்கொண்டே நாட்டின் விடுதலைக்காகவும், எளிய மக்களின் உரிமைகளுக்காகவும், மகளிர் வாழ்க்கையை மேம்படுத்தவும் பாடுபட தன்னை ஒப்புவித்தார் ஒரு பெண். பொதுநலன் கருதிய தன் இலட்சியங்களை அடைய பல போராட்டங்களை முன்னெடுத்து, கைது செய்யப்பட்டு சிறைச்சாலை வாழ்வையும் அனுபவித்து, பல்வேறு சாதனைகளை படைத்து அந்தப் பெண்மணி வாழ்ந்தார் என்றால் அவர் பெரிதும் வியப்புக்குரியவர் அல்லவா!
ஹைதராபாத்தில் ஒரு கல்லூரியை நிறுவி அதன் நிர்வாகியாக இருந்தவர் அகோர்நாத் சட்டோபாத்யாயா எனும் வங்காளத்துக்காரர். இவரின் வாழ்க்கைத் துணைவி வங்கமொழி கவிஞரான பரதாசுந்தரிதேவி. இவர்களுக்கு எட்டாவது மகளாக பிப்ரவரி 13, 1879-ல் பிறந்தார் சரோஜினி.
வங்காளம், ஆங்கிலம், பாரசீகம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் சீரிய புலமை வாய்ந்த சரோஜினி 12 வயதிலேயே உருதுமொழியில் கவிதைகளையும், நாடகத்தையும் இயற்றியவர். 1300 வரிகள் கொண்ட "லேடி ஆப் த லேக்" எனும் இவரின் படைப்பு புகழ்பெற்றது.
பாரசீக மொழியில் சரோஜினி எழுதிய "மஹேர் முனீர்" என்ற நாடகத்தால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிசாம் மீர் மகபூப் அலிகான், சரோஜினி இங்கிலாந்து சென்று மேற்கல்வி பயில கல்விக்கொடை வழங்கினார். இங்கிலாந்தில் இரண்டு கல்லூரிகளில் படித்துத் திரும்பிய சரோஜினி, தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை காதலித்து மணம்புரிந்தார். சாதிமறுப்பு திருமணம் நடைமுறையில் இல்லாத காலத்தில் தன்மகளின் விருப்பத்தை நிறைவேற்றிவைத்தார் சரோஜினியின் தந்தையார்.
புகழ்பெற்ற கவிஞராக, எழுத்தாளராக விளங்கிய சரோஜினி, 1905-ல் கர்சன் பிரபுவால் நிகழ்த்தப்பட்ட வங்கப்பிரிவினையால் பெரிதும் மனம் வருந்தினார். வங்கப் பிரிவினைக்கு எதிராக இந்திய தேசியக் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுத்த சமயத்தில்தான் கோபாலகிருஷ்ண கோகலேவை சரோஜினி நாயுடு சந்திக்க நேர்ந்தது.

நாட்டுக்காக போராட வரும்படி சரோஜினியை அழைத்தார் கோகலே. அதனை ஏற்றுக்கொண்ட சரோஜினி, நாட்டின் விடுதலையை நோக்கிய பயணத்திற்கு அடியெடுத்துவைக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். முகமது அலி ஜின்னா, சி.பி. இராமஸ்வாமி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்கள் பலரையும் சரோஜினிக்கு அறிமுகப்படுத்திவைத்தார் கோகலே.
சமூகத்தில் பெண்கள் படும் துன்பங்களைக் கண்ட சரோஜினியின் மனதில் மண் விடுதலையோடு பெண்விடுதலையும் வேண்டும் என்ற சிந்தனைகள் ஓடின. இந்திய தேசிய காங்கிரசின் 22வது சமூக மாநாடு 1908-ல் நடைபெற்ற போது, கைம்பெண்களுக்கு கல்வி அளிப்பது, பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் தொடங்குவது, கைம்பெண் மறுமணத்தில் இருக்கும் தடங்கல்களை நீக்குவது என தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு.
இந்திய மக்கள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட போது, சரோஜினி நாயுடு செய்த தொடர்சேவைகளுக்காக 1908-ல் இந்தியப் பேரரசர் எனும் பொருள்படும் "கைசர்-இ-இந்த்" எனும் பட்டத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது.
சமூகப்பணிகளோடு அரசியல் பணிகளையும் இணைத்தே சுழன்றுவந்த சரோஜினி, 1916-ல் ஜவகர்லால் நேருவை சந்தித்தார். அவரோடு இணைந்து பீகாரில் பிரிட்டிஷாருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய இன்டிகோ போராட்டமான 'சம்பரன் சத்யாக்கிரகத்தில்' கலந்துகொண்டார். இதே ஆண்டில்தான் மகாத்மா காந்தியையும் சந்தித்த சரோஜினி நாயுடு அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியை மிக்கிமௌஸ் என்று அழைத்தவர் சரோஜினி.
இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரான அன்னிபெசன்ட் அவர்களுடன் இணைந்து 1917-ல் "இந்திய பெண்கள் கூட்டமைப்பை"த் தொடங்கிய சரோஜினி நாயுடு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தார். பெண்களுக்கு சம உரிமை கோரி லண்டனுக்குச் சென்ற பெண்கள் வாக்குரிமைக் குழுவை வழிநடத்திய இவர், பெண்களின் வாக்குரிமைக்கான சர்வதேச இயக்கத்திலும் இணைந்தார். 1918-ல் லண்டனில் இருந்து திரும்பிய சரோஜினி நாயுடு, இந்திய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டிருந்த குழுவிடம் பெண்களுக்கான வாக்குரிமையை கொண்டுவர வலியுறுத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசின் பிரதிநிதியாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தி வந்தார்.
1919-ல் ரவுலட் சட்டத்திற்கு எதிராக காந்தியால் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் முதலில் இணைந்தவர் சரோஜினி. தன்னாட்சி இயக்கக் குழுவின் இங்கிலாந்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டு, 1919 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். தொடர்ந்து காந்தி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தபோது அதனை கண்டித்து தனக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கிய "கைசர்-இ-இந்த்" பட்டத்தை திருப்பித் தந்தார் சரோஜினி.
1924 ஜனவரியில் இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவராக கிழக்கு ஆப்பிரிக்க இந்திய காங்கிரசில் இருந்து, கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கா முழுவதும் பயணித்து சிதறிக் கிடந்த இந்திய மக்களின் தேவைகளை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
1925-ல் இந்திய தேசிய காங்கிரசின் முதல் இந்திய பெண் தலைவராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. காங்கிரஸ் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதை "இந்திய பெண்மைக்கு வழங்கப்பட்ட நற்சான்று" என்று அவர் கருதினார். தனது தலைமையுரையின் போது, சமூகத்தில் பெண்களின் பங்கை மீட்டெடுப்பது குறித்து அவர் பேசினார். "பெண்களுக்கு சமத்துவம்" இருந்தால் மட்டுமே சுதந்திரம் எட்டப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசில் பெண்கள் பிரிவைத் தொடங்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பது குறித்து பேசுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் சரோஜினி நாயுடு. தமிழ்நாடு எதிலும் முன்நிற்கும் மாநிலம் என்பதற்கிணங்க இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி நியமிக்கப்பட்டார். இது சரோஜினியின் குரலுக்குக் கிடைத்த வெற்றி எனலாம்.
இந்து-முஸ்லீம் கலவரங்களை அடக்கி சமாதானப்படுத்துவதில் காந்திக்கு பெரிதும் உதவினார் சரோஜினி. 1928-ல் அமெரிக்கா சென்ற சரோஜினி, அங்கு காந்தியின் அகிம்சைக் கொள்கையை பரப்பினார்.
சரோஜினி நாயுடுவின் முயற்சிகளால் தொடங்கப்பட்ட மகளிர் அமைப்புகள் அரசியல் சார்பற்றவையாக இருந்ததால், அவை பல திறமையான பெண்களுக்கு தங்களை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புகளை அளித்தன. மேலும் அவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் சேர்ந்து தேசிய இயக்கத்திலும் பங்கேற்றனர்.
1930-ல் காந்தியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்தபின்னர், குஜராத்தில் உள்ள 'தாராசனா' என்னுமிடத்தில் மீண்டும் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கப்போவதாக காந்தி அறிவித்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரையும், அவரைத் தொடர்ந்த நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களையும் கைதுசெய்தது. ஆனாலும் சரோஜினி நாயுடு தலைமையேற்று பல எதிர்ப்புகளுக்கிடையில் அபுல்கலாம் ஆசாத்துடன் இணைந்து 28 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தாராசனா சத்யாக்கிரக போராட்டத்தை தொடர்ந்தார்.
1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காந்தியுடன் இணைந்து கலந்துகொண்டார். விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்து பணியாற்றியமைக்கு 1930, 1932 மற்றும் 1942-ல் சிறைத் தண்டனைகளை பரிசாக பெற்றார் சரோஜினி நாயுடு. குறிப்பாக 1942ல் "வெள்ளையனே வெளியேறு" இயக்க போராட்டத்தின் பரிசாக 21 மாதங்கள் சிறையில் இருந்தார். ஆனால் சிறைத்தண்டனைகளுக்கு அவர் எப்போதுமே அஞ்சியதில்லை.
நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்த சரோஜினி நாயுடு, தன் குடும்பத்தையும், நாட்டையும் பிரித்துப் பார்த்தவர் இல்லை. இளமைக்காலம் தொட்டு இந்திய விடுதலைப் போராட்டங்களில் மிகத் தீவிரமாக பங்கெடுத்து வந்ததோடு பெண்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், எழுதியும், மேடைகளில் பேசியும், அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று பெரும் அக்கறையோடு வலியுறுத்தி வந்த சரோஜினி நாயுடுவின் தியாகம் சேவைகளுக்கு கிடைத்த பரிசுதான் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் எனும் பதவி.
நாடு விடுதலைபெற்ற 1947 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் சரோஜினி நாயுடு. பதவி ஏற்ற நாள்முதல் அதிகாரப்பூர்வமாக தன் சேவையைத் தொடர்ந்த அவர், தன் இறுதி சுவாசத்தையும் தன் அலுவலகத்திலேயே மார்ச் 2, 1949-ல் நிறுத்திக் கொண்டார்.
பாரதீய கோகிலா, நைட்டிங்கேல் ஆப் இந்தியா என்றெல்லாம் பாராட்டப்பட்ட சரோஜினி நாயுடு மறைந்த மார்ச் 2, இந்தியாவின் "தேசிய பெண்கள் தினமாக" போற்றப்படுகிறது.
தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in
- இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.
- அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.
`பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா' என்ற கண்ணதாசன் திரைப்பாடல் அனைவரும் அறிந்தது.
ஒருவர் சரியான இடத்தில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம், ஆனால் அந்த இடம் பறிபோய்விட்டால் அவர்கள் நிலை ஆபத்தானது என்பதே இந்தப் பாடலின் பொருள்.
பரமசிவன் கழுத்தில் இருக்கும் வரை பாம்புக்கு கருடனால் பிரச்சினை இல்லை. ஆனால் சிவன் கழுத்தை விட்டு விலகிவிட்டால் அதன்பிறகு பாம்பின் கதி அதோகதிதான்,
நாகத்தையே ஆபரணமாக சிவன் தன் கழுத்தில் அணிந்துகொண்டுள்ளான்,
கடவுளின் கழுத்தில் நாகம் உள்ளது என்பது மட்டுமல்ல, நாகமே கடவுளாகவும் வழிபடப்படுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் நாகராஜர் கோவில்கள் உள்ளன. பல ஆலயங்களில் நாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாகம் பூஜிக்கப்படுகிறது.
நாகர்கோவில் என்ற பெயரிலேயே தமிழகத்தில் ஓர் ஊர் உண்டு. அங்கு புகழ்பெற்ற நாகராஜர் ஆலயம் ஒன்றும் உண்டு.
சிவன் கழுத்தில் ஆபரணமாக உள்ள பாம்பு, பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு ஆதிசேஷனாக படுக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல ஒவ்வோர் அவதாரத்திலும் பாம்பு ஒவ்வொரு விதத்தில் திருமா லுக்கு சேவகம் செய்கிறது. ராம அவதாரத்தில் ஆதி சேஷனே லட்சுமணனாக உருக் கொள்கிறது.
பாம்பு பற்பல அவதாரங்களில் எந்த வகைகளில் எல்லாம் உதவுகிறது என்பதை பொய்கையாழ்வார் அருளிச் செய்த முதல் திருவந்தாதி வெண்பா ஒன்று அழகாக விவரிக்கிறது.
`சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு.'
பெருமாளுக்கு அவர் உலவும்போது நாகம்தான் குடை. அமரும்போது அதுவே சிம்மாசனம். நிற்கும்போது நாகம்தான் பாதுகை. பாற்கடலில் அதுவே மெத்தை. திருமால் அருகில் எப்போதும் திருவிளக்காக இருப்பவரும் திருமாலுக்குப் பட்டாடையாக இருப்பவரும் அணைப்பதற்கு அணையாக இருப்பவரும் நாகம்தான் என்கிறது அந்த வெண்பா.
கிருஷ்ண அவதாரத்தில் தன் மனைவி தேவகிக்குக் குழந்தையாகப் பிறந்த கண்ணனை யசோதை இல்லத்திற்குக் கொட்டும் மழையில் கூடையில் எடுத்துச் செல்கிறார் வசுதேவர். அப்போது கண்ணன்மேல் மழைநீர் விழாதவாறு தன் படத்தையே குடையாக விரித்து உடன் செல்வது ஆதிசேஷன் என்ற பாம்புதான் என்பதை விவரிக்கிறது கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணம்.
திருமால் கண்ணனாக அவதரித்தபோது சின்னக் கண்ணன் காளிங்கன் என்ற கொடிய பாம்பின் தலைமீது பாதங்களைப் பதித்து நடனமாடினானே, அது அவன் லீலைகளில் ஒன்று.
`பாம்புத் தலைமேலே நடம்செய்யும்
பாதத்தினைப் புகழ்வோம்'
எனக் கண்ணனின் லீலை குறித்துப் பாடி மகிழ்கிறார் பாரதியார்.
பாற்கடலிலிருந்து அமிர்தம் வெளிப்பட உதவுவது வாசுகி என்ற பாம்புதான். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கித் தான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள்.
இந்நிகழ்ச்சியை இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் பேசுகிறது.
வடவரையை மத்தாக்கி
வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள்
கடல்வயிறு கலக்கினனே
கலக்கியகை அசோதையார்
தடக்கயிற்றால் கட்டுண்கை
மலர்க்கமலப் புந்தியான்
மாயமோ மருட்கைத்தே
எனப் புகழ்கிறது அந்தப் பாடல்.
அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. அதைத் தாம் அருந்தி தேவர்களைக் காப்பாற்றினார் சிவபெருமான்.
அந்த நஞ்சு சிவனின் வயிற்றுக்குள் போனால் அவர் வயிற்றிலிருக்கும் உலகங்கள் அனைத்தும் பாதிக்கப்படுமே எனக் கவலை கொண்டாள் பார்வதி.
திருமணத்தின்போது சிவன் கையைப் பிடித்தவள் இப்போது அவன் கழுத்தைப் பிடித்தாள். நஞ்சு சிவன் கழுத்திலேயே நின்றது. அவன் நீலகண்டன் ஆனான். இவ்விதம் அன்னை பார்வதியின் செய்கையால் உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
நம் ஆன்மிகம் குண்டலினி சக்தி பற்றிப் பேசுகிறது. முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் உள்ளதாகச் சொல்லப்படும் குண்டலினி ஒரு பாம்பாகவே உருவகிக்கப் படுகிறது.
நாகலோகம் என்ற ஒரு தனி உலகம் பூமிக்குக் கீழ் உள்ளதாகவும் அங்கே ஏராளமான நாகங்கள் வசிப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
நாக அஸ்திரம் என்பது வலிமை வாய்ந்த ஓர் ஆயுதம். நாகப் பாம்பின் கொடிய விஷ சக்தியைத் தாங்கியுள்ள இந்த அஸ்திரத்தைப் பற்றிய குறிப்பு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களிலும் வருகிறது.
மகாபாரதத்தில் கர்ணனிடம் இந்த வலிமை வாய்ந்த அஸ்திரம் உண்டு. இதை அர்ச்சுனனை நோக்கி ஒருமுறை மட்டுமே பிரயோகிக்கலாம் எனக் கண்ணனின் ஆலோசனைப்படி குந்திதேவி கர்ணனிடம் வாக்குறுதி வாங்குகிறாள் . அர்ச்சுனன் மீது கர்ணன் நாக அஸ்திரத்தை ஏவிவிடும் தருணத்தில் தேரைச் சற்றே கீழே அழுத்தி கிருஷ்ணர் அது அர்ச்சுனனைத் தாக்காதவாறு காப்பாற்றி விடுகிறார்.
ராமாயணத்திலும் நாக அஸ்திரம் வருகிறது. ராம ராவண யுத்தத்தின்போது இந்திரஜித் லட்சுமணன் மீது நாக அஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய லட்சுமணன் நாக பாசத்தால் கட்டுண்டு மயங்கி விழுகிறான் என்பதையும் பின்னர் வானிலிருந்து பறந்துவரும் கருடனால் அந்தக் கட்டுகள் எப்படி விலகுகின்றன என்பதையும் ராமாயணம் யுத்தகாண்டத்தில் விவரிக்கிறது.
லட்சுமணனே ஆதிசேஷன் என்ற பாம்பின் அவதாரம் தான் என்றும் அவன் ஆதிசேஷனின் அவதாரமாக இருப்பதால்தான் ராமாயணப் பாத்திரங்களிலேயே அவனுக்குக் கோபம் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.
இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் பாம்பு பற்றிய ஒரு செய்தி வருகிறது. கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் தன் பிள்ளையை வளர்த்ததோடு கூடவே பாசத்துடன் ஒரு கீரிப் பிள்ளையையும் வளர்த்தாள்.
ஒருநாள் அவள் குளத்தில் தண்ணீர் எடுக்கப் போனாள். வீட்டில் தொட்டிலில் இருந்தது குழந்தை.
அந்தக் குழந்தையை ஒரு பாம்பு கடிக்க வந்தது. பாய்ந்து சென்ற கீரிப் பிள்ளை அந்தப் பாம்பைக் கடித்துக் குதறிக் கொன்றுவிட்டது. பின் பெருமிதத்தோடு வீட்டு வாயிலில் வந்து நின்றது அது.
குடத்தில் தண்ணீரோடு திரும்பி வந்த தாய், கீரியின் கோலத்தைப் பார்த்தாள். பாம்பு வந்ததை அறியாத அவள் குழந்தையைத் தான் கீரிப்பிள்ளை கொன்றுவிட்டதாகத் தவறாக நினைத்தாள். உள்ளே சென்று குழந்தையின் அருகே பாம்பு. இறந்து கிடப்பதைக் காணத் தவறினாள். குழந்தையைக் காப்பாற்றிய கீரிப் பிள்ளையின் தலையில் தண்ணீர்க் குடத்தைப் போட்டுக் கீரியைக் கொன்றுவிட்டாள் அவள்.
அந்தக் கொடும் பாவத்திலிருந்து அவள் விடுபட, கோவலன் எவ்விதம் உதவி செய்தான் என்பதை விவரிக்கிறது சிலப்பதிகாரம்.
`சீதக் களபச் செந்தாமரை ` எனத் தொடங்குகிறது அவ்வையார் எழுதிய விநாயகர் அகவல். யோக சாஸ்திரம் முழுவதையும் உள்ளடக்கி எழுதப்பட்ட உயர்ந்த ஆன்மிக நூல் அது. ` நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி ` என அது குண்டலினியாகிய பாம்பைப் பற்றிப் பேசுகிறது.
வயதான நாகங்களின் தலையில் அவற்றின் விஷமே ஒரு ரத்தினமாக உருவாகும் என்றும் அதுவே நாகரத்தினம் என்றும் சொல்வதுண்டு. அந்த நாகரத்தினத்தின் ஒளியிலேயே வயதான நாகங்கள் இரை தேடும் என்றும் ஒரு கருத்தோட்டம் நிலவுகிறது.
ராமகிருஷ்ண மடத்தின் இலச்சினையில் பாம்பு உண்டு. கார்க்கோடகன் என்ற பாம்பைப் பற்றிய குறிப்பு நளசரிதத்தில் உண்டு. அது கடித்ததால் நளன் உருவம் பெரிதும் மாறியது என்றும் அதனால்தான் குறிப்பிட்ட காலம்வரை அவனால் மறைந்து வாழ முடிந்தது என்றும் நளசரிதம் சொல்கிறது.
காட்டுத் தீ பற்றியபோது அதில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது கார்க்கோடக நாகம். அதைக் காப்பாற்றுகிறான் நளன். அப்போது தன்னைக் கையில் ஏந்தியவாறு பத்தடி நடந்து பத்தாவது அடி முடியும்போது தச என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறது நாகம். நளனும் அவ்விதமே செய்கிறான்.
தச என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் பத்து என்றும் கடி என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. கடி என்ற அர்த்தத்தையே தான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் கார்க் கோடக நாகம் நளனைக் கடிப்பதையும் அந்த நாக விஷத்தால் நளனின் தோற்றம் குறுகியதாகவும் கரிய நிறம் உடையதாகவும் மாறுவதை நளசரிதம் படிப்பவர்கள் பிரமிக்கும் வகையில் விவரிக்கிறது.
பதினெண் சித்தர்களில் ஒருவர் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றவர். அவர் பாம்பை முன்னிலைப்படுத்தி பாம்புக்குச் சொல்வதுபோலப் பல பாடல்கள் எழுதியிருக்கிறார்.
கொடிய விஷப் பாம்புகளை எவ்விதம் கையாளுவது என்ற கலையில் அவர் தேர்ச்சி பெற்றிருக்கலாம் என்றும் குண்டலினியே பாம்பாக உருவகப் படுத்தப்படுவதால் அவர் குண்டலினி யோகத்தில் சிறந்தவராக இருக்கலாம் என்றும் இருவேறு விதமாகக் கருத்து நிலவுகிறது.
திருவண்ணாமலையில் மகரிஷி ரமணர் தங்கியிருந்த குகையில் ஒருமுறை பாம்பு வந்துவிட்டது. அன்பர்கள் அதை அடிக்கப் போனார்கள். ரமணர் தடுத்து நிறுத்தினார். பாம்பை ஏன் விரட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். நீங்கள் தங்கியிருக்கும் குகையில் பாம்பு வந்துவிட்டது, அதனால் அதை அடிக்கிறோம் என்றார்கள். குகை என்பது பாம்புகள் வசிக்கும் இடமல்லவா…அது தங்கியிருக்கும் இடத்திற்கு நாம் வந்துவிட்டு அதை விரட்டுவது நியாயமா…சற்றுப் பொறுங்கள். அதுவே தானாக விலகிச் சென்றுவிடும் என ரமணர் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடியே யாரையும் எதுவும் செய்யாமல் சற்று நேரத்தில் பாம்பு ஊர்ந்து வெளியேறிச் சென்றுவிட்டது.
எண்ணற்ற ஆன்மிகச் செய்திகளை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன ஆன்மிகப் பரப்பில் நெடுக ஊர்ந்துசெல்லும் புனிதம் நிறைந்த நாகங்கள்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
- சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.
பிரமாண்டம்... வித்தியாசம்...
இதுதான் மானாட மயிலாட ஷோவின் அடிப்படையாக அமைந்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் அப்படித்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கவும் செய்தார்கள்.
மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டாத அந்த காலத்திலும் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி பிரமாண்டங்களையும், வித்தியாசங்களையும் மேடையில் உருவாக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினோம்.
ஒவ்வொரு சீசனிலும் அமைக்கப்பட்ட காட்சிகளை விட அடுத்து வரும் சீசன் அதைவிட பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற நிர்பந்தம் இயற்கையாகவே ஏற்பட்டது.
கடந்த சீசனில் இந்தமாதிரி காட்சிகளை அமைத்திருந்தோம். அடுத்து வரும் சீசனில் என்னென்ன புதுமைகளை புகுத்தலாம் என்ற எண்ணம்தான் எப்போதும் எங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். 3 சீசன்களை நிறைவு செய்துவிட்டோம். 4-வது சீசன் தொடங்கியது. இந்த சீசனிலும் அறிமுகம் இல்லாத புதுமுகங்கள் பலரை தேர்வு செய்து ஜோடிகளாக உருவாக்கினோம்.
அவர்களில் எந்த ஜோடியும் சோடை போகவில்லை என்ற ரீதியில் போட்டிப்போட்டு அவ்வளவு அற்புதமாக ஆடினார்கள். பொதுவாக ஒருவர் நன்றாக டான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் எங்களிடம் குறுகிய காலத்திலேயே பயிற்சி எடுத்துக்கொண்டு கைதேர்ந்த நடன கலைஞர்கள் போல் ஆடியது எங்களையே பிரமிக்க வைத்தது.
4-வது சீசனில் கோகுல்-நீபா, லோகேஷ்-ஸ்வேதா, கிரண்-பூஜா, மகேஷ்-பிரியதர்ஷினி, ரகுமான்-நிகிதா, குமரன்-அப்சரா, கார்த்திக்-சவுந்தர்யா, கிரண்-ஸ்ரீதேவி என்று எல்லா ஜோடிகளுமே ரசிகர்களை கவர்ந்த ஜோடிகள்தான். மேலும் இந்த சீசனில் இருந்துதான் போட்டியாளர்களை தேர்வு செய்யும் முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தோம். அதாவது போட்டிக்கு நடுவராக இருப்பவர்கள் போடும் மதிப்பெண்ணில் 50 சதவீதம் வாங்குபவர்களும், அதேபோல் ரசிகர்களின் வாக்குகளில் 50 சதவீதம் வாங்குபவர்களும் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ரசிகர்களையும் பங்கெடுக்க வைத்தது நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.
இதனால் ஒருதொய்வு நீங்கி பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சீசனில் வித்தியாசமான போட்டியாளர்களாக இருந்தவர்கள் மனோவும், சுகுமாரும். மனோ மிமிக்கிரியில் கில்லாடி. இவர்கள் இருவரும் தான் மேடையை களை கட்ட வைப்பார்கள்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்தான் தற்போது சின்னத்திரையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் குமரன். இவரும் மிகச்சிறந்த டான்சராக இருந்து சின்னத்திரைக்குள் புகுந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இந்த சீசனில் கிராபிக்ஸ் சுற்று என்ற புதிய சுற்றை அறிமுகப்படுத்தினார்.
பின்னணியில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பின்னணியில் மேடை அமைப்பு கச்சிதமாகவும், பார்க்க பிரமாண்டமாகவும் இருக்கும். அதில் போட்டியாளர்களின் நடனம் இடம் பெறும். அது ஒரு ரியல் ஷோ போல் காட்சி அளிக்கும் ரசிகர்களின் நாடித்துடிப்பு பார்த்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப என்னால் இப்படி புதுமையாக காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் நிகழ்ச்சியை தயாரிப்பதில் எந்த தலையீடும் இல்லாதது தான்.
நான் காட்சியை பற்றியும், இந்த இந்த மேடைகள் அமைக்க போகிறோம் என்றும் சொல்வேன். அவ்வளவுதான். என் விருப்பப்படி அமைத்துக்கொள்ள சொல்வார்கள். அதனால்தான் என்னால் அந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது.
4-வது சீசனில் நான், குஷ்பு, நமீதா ஆகியோர் நடுவர்களாக இருந்தோம். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை காட்சியாக அமைப்பேன். அது ரசிகர்களையும் கவரும். எனது கற்பனை என்பது நான் ரசிகர்களை நேரில் பார்க்கும் போது அவர்களது ரியாக்ஷனை பார்த்துதான் வரும்.
உதாரணத்துக்கு ஒரு குதிரையில் இருந்தபடி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலுக்கு ஒரு ஜோடி ஆடியது. அதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆட்டம்? எப்படி இருக்கிறது என்றனர். அவர்கள் எப்படிபட்ட ரசனை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காட்சிகளையும், ஷெட் அமைப்புகளையும் கொண்டு வந்தேன்.
இந்த காலக்கட்டத்தில் எவ்வளவோ ரியால்டி ஷோக்கள் நடக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மானாட... மயிலாட...தான் அடிப்படை என்பதில் எனக்கு பெருமை.
சின்ன வயதில் எனக்கு படிப்பு வராது. ஆனால் ஆசிரியர் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை இந்த துறைக்கு வந்திருக்காவிட்டால் ஆசிரியர் வேலைக்கு போயிருப்பேன்.
எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது எப்படி சாத்தியமாகும். மிகவும் சிரமமாயிற்றே என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி அதை உருவாக்கியே தீருவேன். அதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியின் வெற்றிக்கும் காரணமாக இதுவரை இருந்து வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களில் வெள்ளித்திரையை விட பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டது எல்லோராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இந்த சீசனில் விமான நிலையம் போன்ற மேடையை அமைத்திருந்தோம். மேடை வடிவமைப்பாளர் தோட்டா தரணி அதை அமைத்து தந்தார். விமானம் நிற்பதுபோலவும், விமான நிலையத்தின் டிராலிகள் ஆங்காங்கே நிற்பது போலவும் இருந்த அந்த காட்சி விமானநிலையத்தையே கண்முன் கொண்டு வந்தது.
இந்த சீசனில் கோகுல்-நீபா முதல் பரிசையும், அனீஷ்-கவிதா 2-வது பரிசையும், லோகேஷ்-தர்ஷியா 3-வது பரிசையும் பெற்றிருந்தார்கள்.
பரிசளிப்புவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. பரிசளிக்க சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு அழைக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அக்கா...நான் வருவதில் சிரமமாக இருக்கிறது என்று அவர் சொன்னதும் எப்படியாவது வரப்பாருங்கள் என்று சொல்லி இருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியது. சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.
இரவு 8 மணி அளவில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தார். அதன்பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அனைவருக்கும் அவர் தான் பரிசை வழங்கினார்.
தமிழகத்தில் சக்கைபோடு போட்ட மானாட மயிலாட முதல்முறையாக வெளி நாடுகளுக்கு பயணப்பட்டது. அதுபற்றிய தகவல்களுடன் அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்.