search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statue Opening"

    • பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
    • திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள மாநில தமிழ் சங்க வளாகத்தில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் தொடக்கமாக இள முனைவர் திருக்குறள் கி.பிரபா இறை வேண்டல் பாடினார். இசை தென்றல் அருணா சிவாசி திருவள்ளுவர் வாழ்த்து கூறினார். மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வரவேற்றார். மேயர் சரவணன் வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கலந்து கொண்டு 6 அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உலகை தமிழால் உயர்த்திடுவோம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என தனது பேச்சை தொடங்கினார்.

    நான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் பிறந்தவன். எனது தாயார் சந்தனத்தாய் நினைவாக எங்களது சங்கத்தின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.

    திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

    தற்போது பாளையங்கோட்டையில் 158-வது திருவள்ளுவர் சிலையை வழங்கி திறந்து வைத்துள்ளேன். திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது. 133 அதிகாரங்களில் 1,330 குறள்களில் ஒன்றே முக்கால் அடியிலே திருவள்ளுவர் உலகத்தை அளந்தார். உலகமெல்லாம் உயர்ந்தார். உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நமது மக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் நல்லாசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் திவான், ராமசாமி, பாண்டியன், கிருபாகரன், வக்கீல் சுதர்சன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×