search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide dsp vishnupriya"

    திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது தந்தை கோவை கோர்ட்டில் ஆஜரானார். விசாரணையை ஜூன் 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி விஷ்ணுபிரியா தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய மகேஸ்வரி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி சென்னை ஐகோர்ட்டில மனு தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தில் வழக்கு கைவிடப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விஷ்ணு பிரியா தந்தை ரவிக்கு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டு ஒரு சம்மன் அனுப்பியது. அதில் சி.பி.ஐ. விசாரணை கைவிடப்படுவதாக அறிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக நீங்கள் ஏதேனும் கூற இருந்தால் கோர்ட்டில் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த 9-ந் தேதி ரவி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்ற நீதிபதி மலர் மன்னன் முன்னிலையில் ஆஜரானார். அவர் விசாரணையை இன்று (24-ந் தேதிக்கு) தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    அதன்படி விஷ்ணு பிரியா தந்தை ரவி இன்று கோர்ட்டில் ஆஜராக வந்தார். தலைமை குற்றவியல் நீதிபதி விடுமுறை என்பதால் அவர் ஜே.எம்.-3 கோர்ட்டில் நீதிபதி வேலுசாமி முன் ஆஜரானார். அப்போது அவர் சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் சந்தேகம் உள்ளது. அவர்களது அறிக்கை எனது கைக்கு வந்து படித்து பார்க்க ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என கூறினார்.

    வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×