search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு"

    • தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.

    மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.

    இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.

    அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.

    பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.

    பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
    • பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அரசு பரிவுடன் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் நலன் கருதி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் அனைத்தையும் உடனுக்குடன் வழங்கிட களத்தில் அதிகாரிகள் ஆயத்தமாக உள்ளனர். எனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள். தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள், முதலான விவரங்களை சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண் : 8148539914 மற்றும் "டிவிட்டர்" மூலமாக பதிவுகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாட்ஸ்அப் எண்: 8148539914

    டிவிட்டர் : Username - @tn_rescuerelief, @tnsdma

    Facebook id: @tnsdma

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
    • பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்த மழை பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    நேற்று காலை முதல் இன்று வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனாலும் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. பெரிய மழை பெய்தது என்ற சுவடே தெரியாத அளவுக்கு மழைநீர் வடியும் வகையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.

    ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.

    சைதாப்பேட்டையை பொறுத்தவரை 5 செ.மீ. மழை பெய்தால்கூட திருவள்ளூர் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், சுப்பிரமணிய சாலை போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கும்.

    ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்குவது கிடையாது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மேலாண்மை செய்த காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

    பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. 162 இடங்களில் நிவாரண மையங்களும் தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.
    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை மீண்டும் சட்டசபையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

    "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை" என்றார் புரட்சியாளர் மா சே துங். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாட்கள் வீட்டில் நான் ஓய்வெடுத்து வந்தாலும், எனது உடல்நலனைவிட இந்த மாநிலத்து மக்கள் நலன்-தாய்த்தமிழ் நாட்டின் நலன், நூற்றாண்டு கண்ட இந்த சட்டப் பேரவை நலன் தான் அதைவிட முக்கியம் என்ற மன உறுதியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

    கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நம்மை, இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

    தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.

    சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் காத்தல் ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை இதே சட்டமன்றத்தில் அறிவித்துச் செயல்படுத்தி வருவதை இன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.

    இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்றுகூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

    * ஒன்றிய அரசின் சில இடையூறுகள்

    இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும் என்று இதே மாமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னதாக நான் குறிப்பிட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.

    இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது.

    பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம்.

    அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது.

    மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர்.

    "i withhold assent" அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    மக்களாட்சித் தத்துவத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒரு அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்து உள்ளனர்.

    எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.

    10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும்! ஜனநாயக விரோதம் ஆகும்! மக்கள் விரோதம் ஆகும்! மனச்சாட்சி விரோதம் ஆகும்! அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்!

    தமிழ்நாட்டுக்கு கவர்னராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரெயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.

    தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.

    பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார்.

    அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குமான பிரச்சனை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    கவர்னரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

    தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், கவர்னர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத் தான் உள்ளது.

    அந்த அடிப்படையில் தான், இந்த 10 சட்ட முன் வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.

    ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

    கவர்னர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

    தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அந்தந்த மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களின் ஒருங்கிணைந்த 2 நாள் கள ஆய்வுக்கூட்டம் நேற்று மறைமலைநகரில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில் 3 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சட்டம்-ஒழுங்கை பேணி காத்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டம் முடிந்ததும் மறைமலைநகரில் உள்ள வெல்கம் ஓட்டலில் இரவு தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மீண்டும் மறைமலைநகரில் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் கள ஆய்வு கூட்டம் நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத் (செங்கல்பட்டு), கலைச் செல்வி மோகன் (காஞ்சிபுரம்), பிரபு சங்கர் (திருவள்ளூர்), ரஷ்மி சித்தார்த் ஜகடே (சென்னை), சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாரேஸ் அகமது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ.க்கள், பி.டி.ஓ.க்கள், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் என 4 மாவட்டங்களின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளது. அந்த பணிகள் எப்போது முடிவடையும் என்பதை விரிவாக ஆய்வு செய்தார்.

    இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எடுத்துரைத்தனர்.

    முடிவடையாத பணிகள் என்னென்ன காரணத்தால் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களையும் விளக்கினார்கள். மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர்? இதில் நிராகரிக்கப்பட்டவர் எவ்வளவு பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்? அவர்களது மனு மீது கள ஆய்வு நடத்தப்பட்டு மீண்டும் எவ்வளவு பேருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது ஆகிய விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் விளக்கம் அளித்தனர்.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    அரசு அறிவிக்கும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மக்களை சென்றடையும் வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

    பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும். அதை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான் என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம்.

    ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு சில சாதாரண பிரச்சினையில் ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். பிரச்சினயைில் சமரசம் செய்ய முயன்ற வரும் தாக்கப்பட்டுள்ளார்.

    இந்த விஷயத்தில் போலீசார் முறையாக நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் போலீசார் செயல்படுவது போல தெரிகிறது. போலீசார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை(24-ந்தேதி) திங்கள்சந்தையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து தான் செய்கிறாரா? என்று தெரிய வில்லை. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போகும் என்று ஒரு அமைச்சர் சொல்லி இருப்பதாக தெரிகிறது.அந்த அமைச்சருக்கும் வீடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நான் தமிழ்நாடு வளர்ச்சிக்காக ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த ஏழு அம்ச தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான “மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி” என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவது இந்தத் திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் அதை செயல்படுத்த இருக்கிறோம். இந்தத் திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும் என்பது இதனுடைய சிறப்பு!

    2021-22-ம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை இன்றைக்கு நான் துவக்கி வைத்திருக்கிறேன். இந்தத் திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சமே கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான்.

    இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டுவருதல்.

    நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல்.

    ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

    கால்நடைகளின் நலன் காத்து, பால் உற்பத்தியைப் பெருக்குதல்.

    வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல், சிறு-குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல்.

    கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல்.

    பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல்,

    உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து திட்டம் செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “தனி மரம் தோப்பாகாது” “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற மூதுரைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள உழவர்களை ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி, தேவையான தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வேளாண்மை உழவர் நலத்துறையின் பல துறைகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சி பலப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதால், கிராம அளவில் தன்னிறைவு ஏற்படும். அதனால் நகரத்தினை நோக்கி, கிராம மக்கள் இடம்பெயர்தல் தடுக்கப்படும்.

    கிராம வளர்ச்சி என்பது பெரும் மக்கள் இயக்கமாக மாறவேண்டிய இந்தக் காலகட்டத்தில், கிராமத்திலுள்ள அனைத்து உழவர்களையும், ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாவது பயனடையச் செய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தோடு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் அர்ப்பணிப்போடு, சிந்தையையும் செயலினையும் ஒரே நேர்கோட்டில் செலுத்தி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்திடக் கேட்டுக்கொண்டு, வேளாண் பெருமக்கள், அரசுக்கும், அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டு பிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறிவியல் நகரம் 2018-19ம் ஆண்டு முதல் தமிழக அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது” வழங்கி வருகிறது.

    இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் 2 சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    2020-21ம் ஆண்டிற்கான ஊரக அறிவியல் கண்டு பிடிப்பாளர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் மற்றும் அறிவியல் கண்டு பிடிப்பினை உறுதி செய்யும் ஆவணங்கள் ஆகியவை அறிவியல் நகரத்திற்கு 10.06.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    முதல்-அமைச்சரை பார்க்க 100 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே வந்த முதியவரின் செயல் மற்ற தி.மு.க. தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 75 வயது முதியவர் சைக்கிளில் வந்து பங்கேற்க வந்தார்.

    அதற்குள் கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் புறப்பட்டு சென்றதால் அவரால் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மாமுண்டி கிராமத்தை சேர்ந்த அவரது பெயர் பிச்சமுத்து(வயது75). தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அளவுகடந்த பற்று கொண்டவர். சுற்றுவட்டாரத்தில் எங்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றாலும் சைக்கிளில் கொடியை கட்டிக்கொண்டு சென்றுவிடுவார்.

    அதிலும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கூட்டம் என்றால் அதிகாலையிலேயே சென்று பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில்தான் நேற்று ஆத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட 100 கி.மீ.தூரத்துக்கு அவர் சைக்கிளிலேயே வந்தார். வெயில் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே நின்று இளைப்பாறி வந்தார்.

    இதனால் குறித்த நேரத்துக்குள் அவரால் பொதுக்கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசிவிட்டு சென்றபிறகே அவரால் கூட்டம் நடந்த இடத்துக்கு வர முடிந்தது. மு.க.ஸ்டாலினை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் அவர் கண்கலங்கியபடி சாலை ஓரம் நின்றார். முதல்-அமைச்சரிடம் கொடுப்பதற்காக ஒரு மனுவும் அவர் கையில் வைத்திருந்தார்.

    மிகவும் ஏழ்மை நிலையில் வசித்துவரும் பிச்சமுத்துவுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி கணவர் கைவிடப்பட்ட நிலையில் பிச்சமுத்துவுடன் வசித்து வருகிறார். இன்னொரு மகள் திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே உள்ளார். பிச்சமுத்துவின் வீட்டில்யே உள்ளார். மகன் ஜெயப்பிரகாஷ் திருமணமாகி தனியாக வசித்துவருவதோடு பிச்சமுத்துவை புறக்கணித்து அடித்து துன்புறுத்தி வருகிறாராம்.

    மகனுக்கு பிச்சமுத்து தனது இடங்களை தானமாக எழுதி கொடுத்தபிறகும் பெற்றோரை கவனிக்காமல் அடித்து துரத்துவதாகவும், இதுபற்றி போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் கூறினார்.

    எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது செட்டில்மெட் பத்திரத்தை ரத்து செய்யவேண்டியும், தனக்கு இருசக்கர வாகனம், நிதி உதவி வழங்கவேண்டும் என்று கேட்டு மனுவுடன் வந்ததாக கூறினார். பின்னர் தள்ளாத வயதிலும் சைக்கிள் மிதித்தபடி தனது மாமுண்டி கிராமத்துக்கு புறப்பட்டார். முதல்-அமைச்சரை பார்க்க 100 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே வந்த முதியவரின் செயல் மற்ற தி.மு.க. தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மணப்பாறையில் முருக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தினர்.

    முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

    முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

    முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் ஊக்க ஊதியத்துடன் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கும்.

    இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பயிற்சிகளை வழங்க திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் அலுவலகம் முழுவதையும் அவர் பார்வையிட்டார்.

    சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

    அமிர்த ஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார்.

    ×