என் மலர்
தமிழ்நாடு

கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனையில் ரூ.1.63 கோடி மோசடி: 3 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

- போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
- மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார்.
சென்னை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முககவசம், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலக கவர்கள், எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதின்றங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார். தற்போது அவர், புதுக்கோட்டை மத்திய சிறையில் சூப்பிரண்டாக உள்ளார். அதேபோல், மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்த கண்ணன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை மத்திய சிறையில் நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாகவும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.