search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்ரம் படம்"

    விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி அரசியல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

    கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பெற்றனர்.

    இது கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது. உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொண்டது. இந்த 2 தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன், குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். மற்ற வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றியை ருசிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி அரசியல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். படத்தின் வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் நிர்வாகிகள் சேவை முகாம்களை நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை கட்சியினக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் கட்சியினரின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் இதனை வைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    விக்ரம் திரைப்படம்

    இதற்கிடையே கமல்ஹாசன் சென்னை சத்யம் தியேட்டரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் விக்ரம் படத்தை பார்த்து ரசித்தார். அப்போது கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் கமல்ஹாசனை பாராட்டினார்கள். அப்போது தொடர்ந்து விக்ரம் போன்று சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர்கள் கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டனர்.

    இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், சினிமா, அரசியல் இரண்டுமே எனக்கு முக்கியம். இரண்டிலும் வெற்றிகரமாக பயணிப்போம் என்று கூறியுள்ளார். இது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×