என் மலர்
நீங்கள் தேடியது "Gotabaya Rajapaksa"
- மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது.
- கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.
கொழும்பு :
இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர்.
இவர்கள் இருவரும் ஆட்சியில் இருந்தபோது முந்தைய ஓராண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்துக்கான செலவினங்களை அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் தற்போது வெளியிட்டு உள்ளன. அதாவது இருவரின் வெளிநாட்டு பயண செலவு ரூ.4.30 கோடி என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் வங்காளதேசம், இத்தாலிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மேற்கொண்ட பயணத்துக்கு ரூ.3.6 கோடி செலவாகி இருக்கிறது. இதைப்போல நியூயார்க், கிளாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரக பயணத்துக்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே ரூ.70 லட்சம் செலவிட்டு உள்ளார்.
நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது ராஜபக்சே சகோதரர்கள் வெளிநாட்டு பயணங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டு இருப்பது இலங்கை மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் நாடு திரும்பினார்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
கொழும்பு
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார்.
அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற அவர் பின்னர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பினார்.
இலங்கையில் அந்நாட்டு அரசு சார்பில் அவருக்கு சிறப்பு பாதுகாப்பும், அரசு பங்களாவும் வழங்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தாலும் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவருக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர இலங்கை அரசு சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் கேட்டு வந்தது.
இந்த நெருக்கடிகள் காரணமாக கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்தார். அதன்படி அவர் இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டார்.
இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் வசிக்கும் கோத்தபய ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்கள் செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே நேற்று திடீரென இலங்கையில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டார். அவர் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன.
குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
- கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது.
- வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். ஆனால் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த குடியுரிமையை அவர் துறந்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. அத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார். இந்த நிலையில் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது வக்கீல்கள் இந்த மனுவை அளித்து உள்ளனர். எனினும் கோத்தபய ராஜபக்சேவின் இந்த மனுவை அமெரிக்க அரசு இன்னும் பரிசீலனைக்கு எடுக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
- கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.
கொழும்பு :
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வலுத்து வன்முறையாக உருவெடுத்ததால் அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த ஆண்டு ஜூலை மாதம் குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பி ஓடினார். பின்னர் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அவர், மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தார். மக்களின் போராட்டம் ஓய்ந்த பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நாடு திரும்பிய பிறகு முதல் முறையாக கடந்த மாத இறுதியில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று, அங்கேயே குடியேற இருப்பதாகவும், இதற்காக அமெரிக்க குடியுரிமையை புதுப்பிக்க கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் துபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பினார்.
- பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கொழும்பு:
நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.
இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக இன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
- "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கை ஆகும்.
இலங்கையில் 1988-89 காலகட்டத்தில் நிகழ்ந்த மார்க்சிஸ்ட் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகளின்போது இந்த புதைகுழிகள் வெளிப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதைகுழிகள் தோண்டப்பட்டன.
குறிப்பாக 2013ம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 155 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் 81 உடல்களும், மற்றொரு இடத்தில் 318 எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கையில் மோதல்கள் நடந்த பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த மனித புதைகுழிகளை இலங்கை அரசு எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாக புள்ளி விவரங்களுடன் சர்வதேச மனித உரிமைகள் குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
"இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-
அகழ்வு பணிகளில் உள்ள பெரிய பிரச்சனை, அதில் உள்ள அரசியல் தலையீடு ஆகும். அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கைகை குறிப்பிடலாம். (கோத்தபய ராஜபக்சே 1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் ராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், பின்னர் இலங்கையின் அதிபராகவும் இருந்தார்). அவர் மாத்தளை மாவட்டம் உள்பட மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த ஐந்து வருடத்திற்கு முந்தைய கால கோப்புகள் அனைத்தையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இச்சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டனர்
- அந்த சந்திப்பின் போது நான் அங்கு இல்லை என ஆசாத் மவுலானா கூறினார்
இலங்கையில் 2019 ஏப்ரல் 21 காலை ஈஸ்டர் விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அன்று, 3 கிறித்துவ தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. சில மணி நேரங்கள் கழித்து அதே நாளில் டெமடகோடா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிலும், டெஹிவாலா பகுதியில் ஒரு விருந்தினர் விடுதியிலும் மீண்டும் குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில் 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 269 பேர் கொல்லப்பட்டதாகவும், 500 பேருக்கும் மேல் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆசாத் மவுலானா என்பவர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார்.
அதில், "அவ்வருடம் நடக்க இருந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷே வெற்றி பெறுவதற்காக இலங்கையில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்த ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புள்ள இலங்கையை சேர்ந்த கும்பலுக்கு, அந்நாட்டின் உளவுத்துறையில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரோடு சந்திப்பை ஏற்பாடு செய்தேன். அந்த சந்திப்பின் போது நான் இல்லை. ஆனால், சந்திப்பிற்கு பிறகு அந்த அதிகாரி, 'தேச பாதுகாப்பின்மை மட்டுமே ராஜபக்ஷேவின் குடும்பம் ஆட்சியில் அமர ஒரே வழி' என என்னிடம் கூறினார்," என்று அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டி இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதில் குறிப்பிடப்படும் உயர் அதிகாரி யார் என்றும் அவருக்கு குண்டு வெடிப்பில் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரிக்கவும் ஒரு பாராளுமன்ற கமிட்டி அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கையின் தொழிலாளர் துறை அமைச்சர் மனுஷ நானயக்கரா தெரிவித்தார்.
இலங்கையில் மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தநிலையில், கடந்த 9-ந் தேதி, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, கடந்த 12-ந் தேதி பதவி ஏற்றார். இலங்கையில் 19-வது அரசியல் சட்ட திருத்தம் மூலம், அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருந்தன. கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனவுடன், அதை ரத்து செய்து, 20ஏ அரசியல் சட்ட திருத்தம் மூலம் நாடாளுமன்றத்தை விட அதிபருக்கு அளவற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.
அதிபருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள சூழ்நிலையில், அவரது அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. இதற்காக 21-வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வருவதற்கான மசோதா, நேற்று இலங்கை மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவதாக இருந்தது.
ஆனால், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி எம்.பி.க்கள் திடீரென அம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். மசோதாவை அதே வடிவத்தில் ஏற்க முடியாது என்றும், முதலில் அட்டார்னி ஜெனரலின் ஒப்புதலை பெற்ற பிறகு மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இதனால், நேற்று இந்த மசோதா, மந்திரிசபையின் பரிசீலனைக்கு வரவில்லை. அதிபரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சேவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்பேரில்தான் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ஏற்றார். இதனால், இது அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த மசோதா, அதிபரின் அதிகாரத்தை குறைப்பதுடன், பல்வேறு ஆணையங்களை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கக்கூடியது. ரணில் விக்ரமசிங்கே மந்திரிசபையில், கடந்த 20-ந் தேதி 9 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்தநிலையில், நேற்று மேலும் 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.
இவர்கள் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா, இலங்கை சுதந்திரா கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகியவற்றை சேர்ந்தவர்கள். ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மீன்வளத்துறை மந்திரியாக பதவி ஏற்றார். இவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், நிதி மந்திரியாக யாரையும் நியமிக்கவில்லை. பொருளாதார சிக்கலை கையாள வேண்டிய அப்பதவி இன்னும் காலியாகவே உள்ளது.
இதற்கிடையே, கடந்த 9-ந் தேதி, மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸ் செய்தித்தொடர்பாளர் நிஹல் தால்டுவா தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 152 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
இந்த வன்முறையில் 10 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு, 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21-ந் தேதி, போலீஸ் ஐ.ஜி. சாந்தன விக்ரமரத்னேவிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். தாக்குதல் நடத்தச் சென்ற ராஜபக்சே ஆதரவாளர்களை தடுக்க வேண்டாம் என்று இவர் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடமும் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே, ரணஜெயபுராவில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளரது வீட்டை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. நீண்ட வரிசையில் நின்ற பிறகு பெட்ரோல் தீர்ந்து போன ஆத்திரத்தில், அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த உரிமையாளரின் மனைவியும், 2 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி, அதில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
புதிய பிரதமராக ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்கான கொள்கைகளை வகுக்காதவரையில் நிதி உதவி செய்ய வாய்ப்பு இல்லை என்று உலக வங்கி கூறி உள்ளது. எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் ரூ.3,250 கோடி கடனை இலங்கை நாடி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கே பணம் இன்றி இலங்கை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ஆசியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் 27-வது சர்வதேச மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே காணொலிக்காட்சி வழியாக பேசியபோது கூறியதாவது:-
இலங்கையின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய பங்காளி ஆகும். இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை களைகிற வகையில் தேவையான நிதி உதவியை ஜப்பான் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் இலங்கையின் சுற்றுலா துறை முடங்கியது.
கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டுக்கு பணம் அனுப்புவது குறைந்து விட்டது. வெளிநாட்டு கடன்கள் ஒருபுறம், பண வீக்கம் மறுபுறம் என்று இலங்கை நெருக்கடியில் இருக்கிறது. நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக உழைக்கிறோம். நாங்கள் சர்வதேச நண்பர்களிடம் அவசர உதவியை எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அத்தியாவசிய மருந்துகள், உணவு பொருட்கள், எரிபொருட்கள் தேவையை சந்திப்பதற்கு இந்த நிதி உதவி வேண்டும்.
இலங்கைக்கு சர்வதேச நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். கடினமான இந்த தருணத்தில் நாட்டிற்கு ஆதரவை வழங்க வேண்டுகிறோம் என்று அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியால் தத்தளித்து வரும் இலங்கையில் விவசாயமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை விவசாயத்துக்காக வேதி உரங்களின் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு அரசு தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் நெல், தேயிலை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் 50 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதனால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியும், விளைச்சல் இழப்பும் நீடித்தால் ஆகஸ்டு மாதத்தில் நாடு மிகப்பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்கும் என வேளாண் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விளைச்சலை அதிகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக மே-ஆகஸ்டு கால கட்டத்தில் நடைபெறும் யாலா பருவ சாகுபடிக்கு பெரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக இந்தியாவிடம் இருந்து உரம் கேட்டு இருக்கிறது. இந்தியா வழங்கி வரும் கடன் எல்லைக்கு உட்பட்டு இந்த உர கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இலங்கையின் இந்த கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்த்து உள்ளது. இலங்கை விவசாயிகளின் பயிரை பாதுகாத்து, நாடு உணவு பற்றாக்குறையில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், நேற்று உறுதி செய்துள்ளார்.
நீர்ப்பாசன அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய அவர், இலங்கையின் அடுத்த சாகுபடி பருவத்துக்கு இந்தியா உரம் வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அப்போது தெரிவித்தார். இந்தியா வழங்கும் இந்த உரம் கொழும்பை அடைந்தவுடன், 20 நாட்களுக்குள் நாடு முழுவதும் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உரம் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் டன் யூரியா வழங்கப்படும் என இந்தியா கடந்த மாதம் அறிவித்து இருந்தது. இந்தியாவில் உரம் ஏற்றுமதிக்கு தடை இருந்தபோதும், இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உரம் வழங்க ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை தூதரகம் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.