என் மலர்
நீங்கள் தேடியது "Sri Lanka Crisis"
- 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், ராணுவத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறை மந்திரி பிரேமிதா பண்டார தென்னகோன் கூறியதாவது:-
இலங்கையின் ராணுவ பலம் தற்போது 200,783 ஆக உள்ளது. இதை மூன்றில் ஒரு பங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் ராணுவ பலத்தை 1,35,000 ஆகவும், 2030க்குள் 1,00,000 ஆகவும் குறைக்கப்படும்.
வரவிருக்கும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் நன்கு சமநிலையான பாதுகாப்புப் படையை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 539 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்தது விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
- இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது.
கொழும்பு:
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன. இலங்கைக்கு கடன்களையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் இலங்கை, சர்வதேச நாணய நிதியிடத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23 ஆயிரம் கோடி) கடன் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டது. ஆனால் கடன் வழங்கப்பட வேண்டும் என்றால் இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகள் தாங்கள் வழங்கிய கடனை மறுசீரமைக்க இணக்கம் தெரிவிக்க வேண்டும்.
இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா உத்தரவாதம் அளித்துள்ளது. இந்தியா சார்பில் எழுதப்பட்ட நிதி உத்தரவாதங்கள் சர்வதசே நாணய நிதியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள அவர் இன்று இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரேவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு மற்றும் பிராந்திய நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார்.
- தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
கொழும்பு:
இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு காரணங்களால் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கடினம் என்று இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் தேதி குறித்த அறிவிப்பாணை வரும் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இனி தேர்தல் நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தேர்தல் ஆணையம் கேட்க உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பேசுகையில், பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதே ஜனாதிபதியாக தனது பணி என்றும், இப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது கூடுதல் அழுத்தத்தையே தரும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை, இந்திய நிதியமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த கடனுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும்
கொழும்பு:
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உதவிகளை செய்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிடமிருந்து இலங்கை 100 கோடி டாலர்கள் புதிய தற்காலிக கடன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இலங்கை இந்த கடனுதவியை கோர உள்ளதாக அரசு பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடனுதவி பெறுவதற்காக இலங்கையின் நிதியமைச்சக அதிகாரிகள், இந்திய நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடனுதவி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்தார்.
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி கேட்டிருந்தது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. அதில் முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. 2027-ம் ஆண்டு வரை இந்த கடன் பல தவணைகளாக வழங்கப்படும்.
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனால் சில நாட்கள், கடற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த அவர், வெளியே தலைகாட்டாமல் இருந்தார். சமீபத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத், மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாலத்தீவு பத்திரிகையில் வெளியான தகவலை மேற்கோள் காட்டி, இலங்கை பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராஜினாமா செய்தவுடன், மகிந்த ராஜபக்சே, முகமது நஷீத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இலங்கையில் சுமூகநிலை திரும்பும்வரை மாலத்தீவில், தானும், தன் குடும்பமும் தஞ்சம் அடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாலத்தீவு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் தங்கி இருக்க ராஜபக்சே விருப்பம் தெரிவித்தார்.
அதை நிராகரித்த முகமது நஷீத், மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தங்கிக்கொள்ளுமாறு கூறினார். பின்னர், முகமது நஷீத், இலங்கைக்கு சென்றார்.
கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சே, குடும்பத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி மாலத்தீவுக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.
இத்தகவல்களை மாலத்தீவு அரசு உயர் அதிகாரி ஒருவர் சொன்னதாக இலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும், தனது குடுமபத்தினருக்கும் மாலத்தீவில் அடைக்கலம் கேட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
ஆனால் மாலத்தீவிடம் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் மறுத்து உள்ளார். கொழும்புவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற தவறான செய்திகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்குலைக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது முற்றிலும் தவறான செய்தி. இந்த புனைக்கதைகளை வெளியிடும் சக்திகள் மாலத்தீவுகளில் இருப்பது கவலையாக உள்ளது' என்று கூறினார்.
இலங்கை பயணத்தின்போது மகிந்த ராஜபக்சேவை சந்திக்கவில்லை என்று கூறிய நஷீத், இந்த பொருளாதார நெருக்கடிக்கு மாலத்தீவால் எவ்வாறு உதவ முடியும்? என்பது குறித்து ஆலோசிக்கவே இலங்கை வந்ததாகவும் தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. வரி உயர்வுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி மதிப்பு கூட்டு வரி (வாட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், தொலைத் தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
பெரு நிறுவன வரி 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு விலக்குகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு 30 லட்சத்தில் இருந்து 18 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் குறைந்த வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு வரி சலுகைகள் அறிவித்ததையடுத்து ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரி வருவாயில் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
2020-21-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால், வரி சீர்திருத்தங்கள் அரசாங்க வருவாயில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழி வகுத்த கொள்கைகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திற்கான வருவாய் 2021-ம் ஆண்டில் 8.7 சதவீதமாக குறைந்து மோசமடைந்துள்ளது.
இந்த நிதி ஏற்றத்தாழ்வு பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே வருவாயை மேம்படுத்துதல், நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றுவதில் வரி உயர்வை செயல்படுத்துவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.