என் மலர்
நீங்கள் தேடியது "63 நாயனார்"
- இன்று தேரோட்டம் நடக்கிறது.
- காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை 11 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானை வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடைபெற்றது. நாயன்மார்களை சுமந்து செல்வதற்காக பள்ளி மாணவர்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர்.
அவர்கள் 63 நாயன்மார்களை தங்கள் தோள்களில் சுமந்து மாடவீதியில் செல்ல தொடர்ந்து திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் வீதி உலா வந்தனர்.
பின்னர் விநாயகரும், சந்திரசேகரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடந்த 2 வருடங்களாக தீபத் திருவிழாவின் போது 63 நாயன்மார்கள் உற்சவ வீதிஉலா நடைபெறவில்லை.2 ஆண்டுகளுக்கு பிறகு நாயன்மார்களை மாணவர்கள் சுமந்து செல்லும் காட்சியை காண மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி தேர், வெள்ளி இந்திர விமானம், வெள்ளி விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெள்ளி தேரையொட்டி திருவண்ணாமலை நகரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் திருவண்ணாமலை நகர மற்றும் மாட வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதிஉலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேர் (சாமி தேர்) இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் அணிவகுத்து வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். தேரோட்டத்தையொட்டி மாடவீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமியர்கள் இழுப்பார்கள். காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.
தேரோட்டத்தையொட்டி திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட உள்ளனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இன்று சனிக்கிழமை தேரோட்டம் நடக்கிறது.
- இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
செய்யாறு டவுன் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பள்ளி சிறுவர்களும், 63 நாயன்மார்கள் மற்றும் சிவன், பார்வதி, முருகன், விநாயகர் என பல்வேறு வேடங்களில் சாமிகளோடு உலா வந்தனர்.
முன்னதாக 63 நாயன்மார்களுக்கு அலங்காரம், பாலகுஜாம்பிகை அம்மன் மற்றும் வேதபுரீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் தூவி அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
- அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.
63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.
ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.
இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.
இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.
இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.
இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.
- பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் காண்பித்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
- வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடியதும், உலக புகழ் பெற்றதுமான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அன்று முதல் சாமி காலை, இரவு என இரு வேளைகளிலும் பவழக்கால் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர்பிரபை, பூத வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 6-ம் நாளான நேற்று காலை 63 நாயன்மார்கள் திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாளுடன் எழுந்தருளி முன்னால் செல்ல, 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து புடைச்சூழ பின் தொடர்ந்து வர மேளத்தாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் சாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் காண்பித்து பக்தி முழக்கமிட்டு பயபக்தியுடன் 63 நாயன்மார்களுடன் படைச்சூழ வந்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வேண்டி வணங்கி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். வழியெங்கும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.
- அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது.
- பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது.
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது. பிற்பகலில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலே குவிய தொடங்கினார்கள். சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.
கோவிலின் முன் பகுதியிலும், உள்ளேயும் பக்தர்கள் கூடினார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதனை பக்தர்கள் வணங்கினார்கள். பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.
மாலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வடம் பிடித்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு மாலையில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
பங்குனி திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கி தானமாக வழங்கினார்கள்.
- மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
- பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.
தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும்கி.பி.400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால் இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 'அறுபத்து மூவர் திருவிழா' என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது.
ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிலர், திருக்கயிலாய வாத்தியம் இசைத்தும், சிவ நடனமாடியும் சாமியை வரவேற்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.
மாடவீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சியில் விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீரபத்திர சுவாமிகள், திருவள்ளுவர்-வாசுகி ஆகியோர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.
விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்ற தலைவர் பேராசிரியர் நல்லூர்சா.சரவணன் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதேபோன்று பெண்கள் பலர் கோவிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.
மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். முன்னதாக நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.
அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலைச் சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெண்களின் நகைகளை பாதுகாப்பதற்காக ஊக்குகளை போலீசார் இலவசமாக பெண்களுக்கு அளித்தனர். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
- 63 நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார்.
- இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
அறுபத்துமூன்று நாயன்மார்களில், காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்தநிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.
பேய் உருவம் தாங்கிய அம்மையார், 'அற்புத திருவந்தாதி', 'திருவிரட்டை மணிமாலை' பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார்.
அப்போது அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், 'அம்மையே அமர்க!' என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
இவா் பல அற்புதங்களைச் செய்தவா் ஆவார். இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவா் அனந்தேசா். இவா் ஒரு முறை வெளியூர் செல்ல நோ்ந்ததால், தனது சிறுவயது மகனை அழைத்து, விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி கூறிச் சென்றார். அந்தச் சிறுவனின் பெயா் நம்பியாண்டார் நம்பி. அவனுக்கு உண்மையிலேயே நைவேத்தியத்தை விநாயகா் சாப்பிடுவார் என்ற எண்ணம் இருந்தது. அதனால் பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு, நைவேத்தியத்தை சாப்பிடும்படி விநாயகரிடம் கூறினான்.
தந்தை பூஜை செய்தால்தான் சாப்பிடுவாரா விநாயகா், நான் நைவேத்தியம் வைத்து பூஜித்தால் ஏற்றக்கொள்ளமாட்டாரா என்று மனம் வருந்திய அந்தச் சிறுவன், விநாயகரின் கல்சிலை மீது தன் தலையை மோதிக்கொண்டான். அறியாமை என்றாலும் அவன் கொண்ட பக்திக்கு இரங்கிய விநாயகா், அவன் முன்பாகத் தோன்றி, அவன் படைத்த நைவேத்தியத்தை உண்டு, நம்பியாண்டார் நம்பிக்கு ஞானத்தையும் வழங்கினார். இந்தச் செய்தி நாடெங்கும் பரவி, நம்பியாண்டார் நம்பியின் புகழ் பரவக் காரணமாக அமைந்தது.
சில காலம் கழித்து, சோழா்களில் சிறந்தவனான ராஜராஜசோழனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தேவாரப்பாடல்களும், திருத்தொண்டா்கள் வரலாறும் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதை பிற்கால சந்ததியா் அறியும் வண்ணம் செய்ய வேண்டும் என்று நினைத்தான். ஆனால் தேவாரப்பாடல்கள் எங்கிருக்கிறது என்பது தொியவில்லை. அப்போது நம்பியாண்டார் நம்பியைப் பற்றி அறிந்த ராஜராஜ சோழன், அவரிடம் வந்து தேவாரப்பாடல்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதையடுத்து நம்பியாண்டார் நம்பி, தான் எப்போதும் வணங்கும் பொள்ளாப் பிள்ளையாரிடம் இதுபற்றி கேட்டார்.
அவை அனைத்தும் தில்லையில் ஒரு அறையில், மூவா் கை முத்திரையுடன் வைக்கப்பட்டிருப்பதை, நம்பியாண்டார் நம்பிக்கு, விநாயகா் கூறியருளினார். அதன்பிறகு தில்லை எனப்படும் சிதம்பரத்திற்குச் சென்று, அங்கிருந்த தேவாரப் பாடல்கள், திருத்தொண்டா்கள் வரலாறு அடங்கிய ஓலைச்சுவடிகளை ராஜராஜசோழனும், நம்பியாண்டார் நம்பியும் மீட்டனா்.
பின்னா் அந்த பாடல்களை, நம்பியாண்டார் நம்பி ‘திருமுறைகள்’ என்ற பெயரில் தொகுத்தார்.
திருமுறைகள் 12 இருக்கிறது, அதில் 11 திருமுறைகளை தொகுத்தவா், நம்பியாண்டார் நம்பி. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களை முதல் மூன்று திருமுறையாகவும், திருநாவுக்கரசா் பாடிய தேவாரப் பாடல்களை 4 முதல் 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரத்தை ஏழாம் திருமுறையாகவும் தொகுத்தார். பின்னா் சமயக்குரவா்களில் நாலாவதாக இருக்கும் மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம் மற்றும் திருக்கோவையாரை எட்டாம் திருமுறையாக சோ்த்தார்.
திருமாளிகைத்தேவா் முதலான சிலா் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாக இணைத்தார். திருமூலா் அருளிய திருமந்திரம் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும், திருவாலவாயுடையார் பாடிய திருமுகப்பாசுரம் உள்ளிட்ட 12 போ் அருளிய பிரபந்தங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் சோ்த்தார். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களில், நம்பியாண்டார் நம்பி பாடிய பிரபந்தங்களும் அடங்கியிருக்கிறது.