என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat Titans"

    • குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

    சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது. 244 ரன் இலக்கை தூரத்திய குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது. 14 ஓவர் வரை நல்ல நிலையில் இருந்த அந்த அணி 'இம்பேக்ட்' வீரர் விஜய்குமார் வைஷாக்கின் 'யார்க்கர்' பந்து வீச்சில் போதிய ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது தோல்விக்கு வழிவகுத்தது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ராகுல் திவேதியா, ஷாருக்கான் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (3 விக்கெட்) தவிர மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், ரபடா, ரஷித் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது பந்து வீச்சில் அதிக ரன் கசியவிடுவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

    மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் உதை வாங்கியது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 155 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். திலக் வர்மா (31 ரன்), சூர்யகுமார் யாதவ் (29) தவிர யாரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் (3 விக்கெட்) பிரமாதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்தார். டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னெர் உள்ளிட்ட மற்ற பவுலர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை.

    கடந்த ஆண்டு மெதுவாக பந்து வீசிய புகாரில் 3 முறை சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவர் களம் திரும்புவது அந்த அணியின் உத்வேகத்தை அதிகரிக்கும்.

    முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முந்தைய ஆட்டத்தை போலவே ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 2-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு அல்லது கிளென் பிலிப்ஸ், ராகுல் திவேதியா, ஷாருக்கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், ரஷித் கான், கசிகோ ரபடா, முகமது சிராஜ்

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், சத்யநாராயணா ராஜூ.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று.
    • இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    2022-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே மகுடம் சூடிய குஜராத் அணி 2023-ம் ஆண்டில் 2-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது ஜோஸ் பட்லர், ரபடா, முகமது சிராஜ் வருகையால் அந்த அணி மேலும் வலுவடைந்துள்ளது. சமீபகாலமாக இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியில் ஜொலிக்காத ஜோஸ் பட்லர், ஐ.பி.எல். மூலம் இழந்த பார்மை மீட்கும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் பேட்டிங் தூண்களாக உள்ளனர். ரஷித்கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள். உள்ளூர் சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் பஞ்சாப் கிங்சும் ஒன்று. இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் வந்திருக்கிறது. குறிப்பாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்றுத்தந்த ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26¾ கோடிக்கு எடுத்து அவரையே கேப்டனாக்கி இருக்கிறார்கள். அவரது வருகை பஞ்சாப் அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பேட்டிங்கில் இங்லிஸ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா ஆகியோரும், பந்து வீச்சில் மார்கோ யான்சென், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹலும் வலு சேர்க்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரி சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    இவ்விரு அணிகள் இதுவரை 5 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் பஞ்சாப்பும், 3-ல் குஜராத்தும் வெற்றி பெற்றுள்ளன. இங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்னில் சுருண்ட குஜராத், சென்னைக்கு எதிராக 231 ரன்கள் திரட்டி ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சென்ற ஆண்டு இங்குநடந்த 8 ஆட்டங்களில் 6-ல் 2-வது பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    குஜராத்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, ரஷித்கான், சாய் கிஷோர், ககிசோ ரபடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), மேக்ஸ்வெல், நேஹல் வதேரா அல்லது பிரியான்ஷ் ஆர்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பலமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
    • பேட்டிங்களில் சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

    அறிமுக சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் சாம்பியன் பட்டம், 2-வது வருடம் இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் பிளேஆஃப் சுற்றை கூட எட்ட முடியாத நிலையில், இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் மீண்டெழும் முனைப்பில் உள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    சுப்மன் கில், ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளென் பிலிப்ஸ்

    ஆல்-ரவுண்டர்கள்

    நிஷாந்த் சிந்து, மஹிபால் லாம்ரோர், வாஷிங்டன் சுந்தர், முகமது அர்ஷத் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், கரிம் ஜனத், சாய் சுதர்சன், ஷாருக் கான்.

    பந்து வீச்சாளர்கள்

    ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதர், ஜெரால்டு கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், இஷாந்த் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, ராகுல் டெவாட்டியா, ரஷித் கான்

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி வந்தனர். தற்போது ஜாஸ் பட்லர் அணியில் இணைந்துள்ளார். இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் என்பதில் அணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் போட்டியில் பேட்டிங் கிளிக் ஆகிவிட்டால் பட்டைய கிளப்ப வாய்ப்புள்ளது.

    மிடில் ஆர்டர்

    மிடில் ஆர்டர்தான் சற்று பலவீனமாக உள்ளதாக தோன்றுகிறது. சுப்மன் கில், பட்லர் தொடக்க வீரராக களம் இறங்கினால் சாய் சுதர்சன் 3-வது வரிசையில் களம் இறங்குவார். அதன்பின் கிளென் பிலிப்ஸ், ஷாருக்கான், லாம்ரோர் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுக்க முடியும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள்

    ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த சர்மா முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் கோயட்சீ, குர்னூர் சிங் பிரார், கெஜ்ரோலியா உள்ளனர். ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சில்

    ரஷித் கான், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தர், டெவாட்டியா என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவர்களுடன் மானவ் சுதர் உள்ளார். பிலிப்ஸ், ஷாருக் கானும் சுழற்பந்து வீசக் கூடியவர்கள். இதில் ரஷித் கான், சாய் கிஷோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள்.

    வெளிநாட்டு வீரர்கள்

    பட்லர், ருதர்போர்டு, கிளென் பிலிப்ஸ், கரிம் ஜனத், ரபாடா, கோயட்சீ, ரஷித் கான் ஆகியோர் உள்ளனர். இதில் பட்லர், பிலிப்ஸ், ரஷித் கான், ரபாடா ஆகியோர் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ரபாடாவிற்குப் பதிலாக பட்லர் இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கலாம். பேட்டிங், பவுலிங்கை சமநிலைப் படுத்தும் வகையில் தேர்வு இருக்கும்.

    • என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.
    • நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ளது. இதன் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த சீசனில் ஒரே போட்டியில் 300 ரன்களை அடிப்போம் என்று குஜராத் அணியின் கேப்டன் கில் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் பொறுப்பையும் பேட்டிங்கையும் தனித்தனியாக பார்ப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நான் பேட்டிங் செய்யும்போது அதைக்குறித்து மட்டுமே கவனம் செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கிறது.

    பேட்டராக ஆக வேண்டும் என நான் எடுத்த முடிவு சிறந்ததென நினைக்கிறேன். பீல்டிங், அல்லது களத்துக்கு வெளியே இருக்கும்போது கேப்டன் பொறுப்பு குறித்து அதிகமாக சிந்திப்பேன். அதிகமான பேட்டிங் செய்வது எனக்கு நல்லதாக இருக்கிறது.

    கேப்டனாக இருப்பதின் சுவாரசியமான, சவாலான விஷயம் என்னவென்றால் தினமும் நீங்கள் ஒரு வீரரைப் பற்றி அல்லது உங்களைப் பற்றி புதியதாகக் கற்றுக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கேப்டனாக இருக்க விரும்பினால் இவையெல்லாம் சரியாக செய்தாக வேண்டும்.

    நெக்ராவிடம் இருந்து எனக்கு கிடைக்கும் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷமானது. எங்களது சொந்த மைதானம் மிகவும் உதவியாகவே இருக்கிறது. வெளி இடங்களில் நன்றாக விளையாட வேண்டியுள்ளது.

    கடைசி சீசன் திட்டமிட்டபடி செல்லவில்லை. ஆனால், அதற்காக வித்தியாசமாக எதுவும் செய்ய தோன்றவில்லை. கடைசி 3 ஆண்டுகளில் எங்களுக்குதான் அதிகமான வெற்றி விகிதம் இருக்கின்றன. அதையே கடைப்பிடித்தால் போதுமானது. இந்த சீசனும் நன்றாகவே செல்லும்.

    சூழ்நிலை சரியாக இருந்தால் 240, 250 அல்லது 260 ரன்கள் அடிக்கலாம். அதற்கு மேல் அடிப்போமா தெரியாது. ஆனால், சில விக்கெட்டுகளில் 150 அல்லது 160 போதுமானதாக இருக்கலாம். சூழ்நிலைக்கு தகவமைப்பதுதான் சிறந்த அணிக்கான தகுதி.

    என்று கில் கூறினார்.

    • மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது.
    • குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த தொடரில் இன்று நடைபெறும் 62-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை சந்திக்கிறது.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை நெருங்கி விட்டது.

    மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது.

    இந்நிலையில் புற்றுநோயுடன் போராடும் அனைருடனும் தோளோடு தோள் நிற்கும் விதமாக ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி லாவண்டர் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.

    • ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
    • இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

    அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்தார்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

    ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 233 ரன்களை குவித்தது.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர்.

    தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷுப்மான் கில் களமிறங்கினர். தொடக்கம் முதல் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில், சகா 18 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் கில்லுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    இதையடுத்து, ஷுப்மான் கில் அதிரடியாக ஆடி 49 பந்தில் சதமடித்து அசத்தினார். இது இத்தொடரில் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷுப்மான் கில் 60 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 129 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில்-சாய் சுதர்சன் ஜோடி 138 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

    இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 233 ரன்களை குவித்தது. பாண்ட்யா 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, திலக் வர்மா 43 ரன்களும், கேமரன் கிரீன் 30 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 8 ரன்களிலும், விஷ்ணு வினோத் 5 ரன்களிலும், நேகல் வதேரா 4 ரன்களிலும், திம் டேவிட் மற்றும் கிறிஸ் ஜோர்டன் தலா இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    17ம் ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மும்பை இந்தியன்ஸ் எடுத்திருந்தனர்.

    சரியாக 18வது ஓவரில் 12 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தனர்.

    அப்போது களத்தில் இருந்த குமார் கார்த்திகேயா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாசன் 3 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

    அடுத்ததாக, மே 28 ம்தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியனான நாள் தான் இன்று.
    • தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு 15-வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி இடம் பெற்று விளையாடியது.

    இதில், இறுதிப் போட்டிக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 22 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இதேபோன்று தற்போது ஐபிஎல் 16-வது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

    நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக போட்டி இன்று மாற்றப்பட்டது.

    எல்லாமே குஜராத் அணிக்கு சாதகமாகவே உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடக்க வேண்டிய போட்டி இன்று நடைபெறுகிறது, இன்றும் மழை வந்தால் குஜராத் அணிக்கே கோப்பை என இருக்கும் சூழலில் சென்னை தோல்வியடைந்து விடுமோ என சிஎஸ்கே ரசிகர்கள் கலத்தில் உள்ளனர்.

    இன்று இரவு நடக்கும் போட்டியிலும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்தால், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி அறிவிக்கப்பட்டால், 2-வது முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனாகும்.

    • இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார்.
    • ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் யாஸ் தயாள் இடம் பெற்றிருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படம் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் யாஷ் தயாளை கடுமையாக விமர்சித்தனர்.

    அந்த பதிவில் இஸ்லாமியர் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய யாஷ் தயாள், மன்னிக்கவும். அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன். வெறுப்பை பரப்ப வேண்டாம். அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

     

    இஸ்லாமியர்களுக்கு எதிராக யாஷ் தயாள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்து குஜராத் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தவர் தான் இந்த யாஷ் தயாள். 

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    ×