என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய நெடுஞ்சாலை ஆணையம்"

    • சாலை பணிகளுக்காக தமிழ்நாட்டில் 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
    • தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 54 பாலங்கள், 13 வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.

    சென்னை:

    சென்னை-பெங்களூரு இடையேயான 326 கி.மீ. தூரத்துக்கான விரைவு சாலையில் தினமும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணப்பட்டு வருகின்றன. இந்த சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. இதனை மாற்றி அமைக்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளுக்கு பயண அனுபவத்தை இனிமையானதாக மாற்றுவதற்காகவும் சாலைப் பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, குடிப்பாலா-வாலாஜாப்பேட்டை இடையே 24 கி.மீ. தூரத்துக்கும், வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் இடையே 24.5 கி.மீ. தூரத்துக்கும், அரக்கோணம்-காஞ்சிபுரம் இடையே 25.5 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதூர் இடையே 32.1 கி.மீ. தூரத்துக்கும் என 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 106.1 கி.மீ. தூரத்துக்கு விரைவுச் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

    106.1 கி.மீ. தூரத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கான பகுதிகள் ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளாக இருக்கிறது. இதைத் தவிர 96.1 கி.மீ. தூரம் தமிழ்நாட்டுக்குட்பட்ட பகுதியாக உள்ளது.

    இந்த சாலை பணிகளுக்காக தமிழ்நாட்டில் 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் 95 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது.

    சாலைப் பணிகளின் வடிவமைப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 54 பாலங்கள், 13 வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.

    சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடங்களுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் திட்டமாக இது கருதப்படுகிறது. மொத்தம் பணிகள் நடைபெறும் 96.1 கி.மீ. தூரத்தில், 14.4 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் 15 முதல் 16 மாதங்களுக்குள் முடிவடைய இருப்பதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, 100 சதவீத பணிகளில், தற்போது 15 சதவீத பணிகள் முடிந்து இருக்கின்றன.

    அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன், சென்னை-பெங்களூரு இடையே ஏற்கனவே இருக்கும் பயண நேரமான 5 மணி முதல் 7 மணி வரையிலான காலம், 2 முதல் 3 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாக செல்லும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் ரூ.16 ஆயிரத்து 730 கோடி மதிப்பில் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர்
    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது

    நெடுஞ்சாலைகளில் வரி வசூலிக்க நிறுவப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலோனோர் பேடிஎம் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பேடிஎம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் வேறு வங்கிக்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு, அதன் பயனர்கள் தங்கள் பேடிஎம் ஃபாஸ்டேக் பேலன்ஸ்களை ரீசார்ஜ் செய்யவோ அல்லது டாப்-அப் செய்யவோ முடியாது.

    நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தொந்தரவின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஃபாஸ்டேக்குகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட், பந்தன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி , மற்றும் யெஸ் வங்கி போன்ற 39 நிறுவனங்கள் உள்ளன.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
    • கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்நிலையில் மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுமுதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

    அதன்படி மணகதி, கல்லக்குடி, வல்லம், தென்மாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395. இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175, பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும். 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

    உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடியில் கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சுங்க கட்டணம் உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாடு முழுவதும் உள்ள 1228 சுங்கச்சாவடிகளில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 10 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதன் அடிப்படையில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம், தேர்தல் முடிந்தவுடனே மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையின் 7 திட்டங்களை ஆய்வு செய்ததில், ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்ததாக அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு சி.ஏ.ஜி. தெரிவித்த முறைகேடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்திலுள்ள 36 சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களே அந்தந்த சுங்கச்சாவடிகளில் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

    தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1 -ந்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மேலும் 3 சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் நங்கிளி கொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    நங்கிளி கொண்டான் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.60 முதல் ரூ.400 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் திரும்பி வர ரூ.85 முதல் ரூ.555 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.
    • குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய மக்கள் ஆயத்தமாகி விட்டனர்.

    பஸ், ரெயில்கள் நிரம்பி விட்டதால் அரசு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் பயணம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொந்தமாக கார்களிலும் பயணம் செய்கிறார்கள்.

    சென்னையில் இருந்து 29,30-ந் தேதிகளில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும். மேலும் சிறப்பு பஸ்களும் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    பாஸ்ட் டிராக் கட்டண முறை இருந்தாலும் பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.

    அதனை கருத்தில் கொண்டு வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கவும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தியது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.

    அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு திரும்பும் போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மைல் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.

    இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் எனவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் அதிக விபத்து நடக்கும் இடம் என சமீபத்தில் 214 பிளாக் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதற்கு தீர்வு காண நீண்ட கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 நாள் பிராந்திய அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத் தரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பது மட்டுமல்லாமல், விபத்தில்லா சாலைகளை அமைப்பதிலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்துகிறது. கேரளாவில் அதிக விபத்து நடக்கும் இடம் என சமீபத்தில் 214 பிளாக் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அதற்கு தீர்வு காண நீண்ட கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களை ஒன்றிணைத்து அறிவு, சாதனைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்திய தேசிய ஆணையம் ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி யை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

    இதுவரை கேரள மாநிலத்தில், 177 கி.மீ சாலை வலையமைப்பை இந்திய தேசிய ஆணையம் முடித்துள்ளது. மேலும் ரூ. 34,972 கோடி மதிப்பிலான 403 கி.மீ சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. கூடுதலாக 6 திட்டங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

    இவை தவிர, பாலக்காடு - மலப்புரம் - கோழிக்கோடு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை, 59 கி.மீ நீளமுள்ள செங்கோட்டை - கொல்லம் கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை மற்றும் ஆலப்புழா மாவட்டத்தில் துறவூர் முதல் அரூர் இடையே 12.34 கிமீ நீளமுள்ள உயர்மட்ட நெடுஞ்சாலை உள்ளிட்ட புதிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

    இந்த திட்டங்கள் மாநிலத்திற்குள் இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புத் திட்டமான பாரத்மாலா பரியோஜனாவை செயல்படுத்தி வருகிறது. 34,800 கி.மீ தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களும் மேம்படுத்தி வருகிறது. அதில் 31,621 கிமீ நீளத் திட்டங்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன.

    22 கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலைகள் மற்றும் அணுகல்- கட்டுப்படுத்தப்பட்ட தாழ்வாரங்களின் வளர்ச்சி பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாகும். இதன் நீளம் 8,400 கி.மீ மற்றும் மூலதனச் செலவு ரூ. 3.6 லட்சம் கோடி. இதுவரை, 20,473 கி.மீ., அதாவது திட்டத்தின் மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட 65 சதவிகிதம், மொத்த மூலதனச் செலவு ரூ.644,678 கோடியுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×