search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "house"

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
    • 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் வெள்ளகோவில் பகுதிகளில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகர், குமாரவலசு, கல்லாங்காடு வலசு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வங்கி, சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன. நேற்று காலை உப்புபாளையம் ரோடு, சக்தி நகர் விஜயகுமார் என்பவர் வீட்டின் முன்பு 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதை அறிந்த விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    • சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் குமார் இடிந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க தனது சொந்த செலவில் ரூ. 5000 மதிப்பில் ஹாலோ பிளாக் கல் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    • பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
    • நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை பூளவாடி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வகையில் நூலக வார விழாவையொட்டி, பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் வீடுதோறும், சிறு நூலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும், இத்திட்டத்துக்கு மாணவர்கள் சிறு தொகை சேமிக்க, நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் இணைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முடிவில் கிளை நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

    • திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
    • வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    • பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார்.

     அவினாசி :

    ஈரோட்டிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை சுப்பிரமணியம் (வயது 49) ஓட்டி சென்றார்.ரவிச்சந்திரன்(55) நடத்துனராக இருந்தார். பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர்.

    இந்த நிலையில் பஸ் நேற்று இரவு 9.45 மணி அளவில் அவினாசியை அடுத்து வெள்ளியம் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் தாறுமாறாக ரோட்டில் வந்துள்ளார். எனவே அவர்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் பஸ்சை திருப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக பஸ் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. இதனால் வீட்டின் சுவர் இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதில் பஸ்டிரைவர், ஒட்டுனர் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (40) ஆகிய மூவருக்கும் கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவினாசி போலீசார் சம்பவ இடம் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளக்காதலி வீட்டில் பூக்கடைக்காரர் தூக்கில் தொங்கினார்.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே முள்ளிசெவல் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி வேல் (வயது 50), பூக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமி (48). சக்திவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி முத்துலட்சுமி அதுபற்றி விசாரிக்கும்போது, கீழே விழுந்து விட்டதாக கூறி உள்ளார்.

    ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக மனைவி கூறியபோது, அதை மறுத்து விட்டு கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் லட்சுமி வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்துலட்சுமி அளித்த புகாரின்பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜோத்தம்பட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவான வேளையில் 4 பெண்கள் வந்துள்ளனர்.
    • 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடுமலை :

    உடுமலை ஜோத்தம்பட்டி பகுதியிலுள்ள சங்கர் என்பவர் தனது மகளுடன் தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். அவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.ஆள் நடமாட்டம் குறைவான வேளையில் அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அருகிலுள்ள தோட்டத்திலிருந்த ஒருவர் இந்த பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்து அங்கே சென்றுள்ளார். உடனடியாக ஆடைகளைக் களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்ற பெண்கள் அவரின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கரியும் அங்கே வந்துள்ளார்.வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடிய 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப் -இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா(வயது 30) என்பது தெரிய வந்தது.மேலும் அவர்கள் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பார்வதி,சித்ரா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • உணவு சாப்பிட மருந்து கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பிரத்திவிகா நகர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் மதன் (வயது 29). இவர் நல்லிக்கவுண்டன் நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட மதன் வீட்டிற்கு வந்துள்ளார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் இரவு வழக்கம்போல் மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்த மதன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மதன் ஊத்துக்குளி போலீசில் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  

    • சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    ×