என் மலர்
நீங்கள் தேடியது "சரத்பாபு"
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலைய செயலாளரான சரத்பாபு அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பா.ஜனதா தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன் நிலையில் அவர் பா.ஜனதாவில் இணைகிறார். கட்சியில் இருந்து விலகியது தொடர்பாக சரத்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளம் தொழில் முனைவராகவும் சமூக சேவகராகவும் அறியப்பட்ட நான் இந்தியா முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுமார் 25 லட்சம் மாணவர்களுக்கு ஊக்க உரை நிகழ்த்தியுள்ளேன்.
கடந்த 2009-ம் ஆண்டு தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எனது 29வது அகவையில் 15885 வாக்குகள் பெற்றேன். 2011 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டு 7472 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தேன், 2011 சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டேன்.
2021-ம் வருடம் முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தேன். 2021 சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, 21,139 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தேன்.
தேர்தல் முடிவிற்கு பின் ஜூன் மாதம் தலைவர் கமல்ஹாசன் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கினார். அதன் பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலையும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முழு பங்காற்றி எதிர்கொண்டு கணிசமான வேட்பாளர்களையும் வாக்குகளையும் கட்சிக்காக பெற்றுக் கொடுத்தேன்.
தலைவரின் ஈடுபாடு இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் மிகவும் குறைவாக இருப்பதை காண முடிந்தது. அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாக குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியினால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டு சேர்க்க முடியாது என்ற நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்.
பட்டினி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எனது பயணம் தொடரும் இன்னும் பல மடங்கு வீரியத்துடன் தொடர்ந்து 2024-ல் இந்திய அளவிலும் மற்றும் 2026-ல் தமிழகத்திலும் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க மக்களுக்கான ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்பேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து மக்கள் நீதி மய்ய உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.