என் மலர்
நீங்கள் தேடியது "Paper price"
திருப்பூர்:
கடுமையான காகித விலை ஏற்றத்தால் தொழில் பாதிக்கப்பட்டு வருவதாக, பிரின்டிங் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் பிரின்டிங் நிறுவன உரிமையாளர்கள் கூறியதாவது:-
கடந்த ஓராண்டில் காகிதங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரின்டிங்கில் பில் புக், ரசீது உள்ளிட்ட அலுவலக ரீதியாக அதிகம் பயன்படுத்தப்படும் மேப் லித்தோ பேப்பர், 500 பேப்பர்கள் கொண்ட ரீம் ஒன்று, கடந்த ஆண்டு 580 ரூபாயாக இருந்தது.
தற்போது 820 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதேபோல் பல்ப் போர்டு, ஆர்ட் பேப்பர் உள்ளிட்டவை35 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. மேலும் 12 சதவீதம் இருந்த ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. காகிதங்களின் விலை ஏற்றம் காரணமாக, பிரின்டிங் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அலுவலக ரீதியான பயன்பாட்டுக்காக மட்டுமே மக்கள் பிரின்டிங்கை நாடுகின்றனர்.
திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு பத்திரிகை அடிப்பது குறைந்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியாலும் பிரின்டிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பள பற்றாக்குறை காரணமாக, ஆபரேட்டர்களும் இத்தொழிலுக்கு வர மறுக்கின்றனர். புதிதாக யாரும் இத்தொழில் துவங்க முன் வருவதில்லை. காகித விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.