என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா மரணம்"

    • ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த பரிந்துரை
    • மாநில காவல்துறையை நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது என மனுதாரர் கூறி உள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

    ஐந்து ஆண்டுகள் விசாரணைக்கு பின், ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது.

    இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியம் இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, முழுமையாக நியாயமாக விசாரணை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசின் உயரதிகாரிகள், அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காமல், உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு மனு அளிக்க வேண்டும் என்றும், மனு அளிக்காமல் தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
    • விசாரணை முடிவில் 608 பக்கம் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    சேலம்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.

    இதையடுத்து, 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்மணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதற்கு, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்ததாவது:

    நான் அறிக்கை கொடுத்து 4 மாதங்களுக்கு மேலாகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஒரு கட்சியின் தலைவரின் மரணம் என்பதால், இதுபோன்ற கேள்விகள் எழுகிறது. எனது அறிக்கையில் என்னால் முடிந்தது என்னவோ, கிட்டத்தட்ட எந்த சந்தேகமும் இல்லாமல் வழங்கியதால்தான் எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இந்த அறிக்கை குறித்து எந்தெந்த, என்னென்ன சந்தேகம் எழுந்ததோ, அதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அந்த அறிக்கையில் நான் நிறைய எழுதியுள்ளேன். என்னுடைய அறிக்கையில் மருத்துவர்கள் சாட்சியம் அளித்ததை வைத்துதான் சொன்னேன். இன்னும் சொல்ல போனால் நான் எதையுமே அதிகமாக எழுதவில்லை. காரணம் இது மருத்துவம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. நான் எனது கருத்து என எதையும் சொல்லவில்லை.

    நீங்கள் கூறியதில் திருத்தம் உள்ளது. அதாவது ஜெயலலிதாவை சிபிஆர் செய்தது மருத்துவரோ நர்சோ இல்லை, அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றும் நபர்கள்தான். எம்பார்மிங் செய்ய கடிதம் கொடுத்தது இன்னொருவர். அவர் யார் என நான் சொல்ல முடியாது. எய்ம்ஸ் மருத்துவ ஆணையத்தை தவிர வேறு யாருக்குமே தனியாக கருத்து சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    • தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
    • கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தனிக்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீா்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. மற்ற 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 30 கிலோ தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர். ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை கைப்பற்றினர். அந்த தங்க நகைகள் தற்போது கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த மனு அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன், இந்த வழக்கின் செலவு தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதை வங்கி வரைவோலையாக (டி.டி.) வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் கர்நாடக அரசு வசம் உள்ள தங்க நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை பெற தமிழக போலீஸ் துறை முதன்மை செயலாளர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றை ஏலம் விட்டு அபராதத்தை செலுத்த வேண்டும், வழக்கில் தொடர்புடைய நிலத்தின் மதிப்பை விரைவாக தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

    நான் கர்நாடக அரசின் சட்டத்துறையை அணுகி, இந்த உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யுமாறு வற்புறுத்த முடிவு செய்துள்ளேன். வழக்கு விசாரணை இங்கு நடைபெற்று கொண்டிருக்கும்போது, இங்கு தான் அந்த பொருட்களை ஏலம் விட வேண்டும்" என்றார்.

    ×