என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பல்கலைக்கழகம்"

    • தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர்.
    • சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

    சென்னை:

    2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனப்படுகொலை குறித்து பி.பி.சி. நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து உள்ளது. இதனை உலகளவில் பி.பி.சி. வெளியிட்டு உள்ளது. கூகுள் இணையதளத்திலும் வெளியிட்டு உள்ளது.

    இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் குஜராத் ஆவணப்படத்தை கல்லூரிகளில் வெளியிட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் பொது இடங்களில் திரையிட்டு வருகிறார்கள்.

    பி.பி.சி. தயாரித்த ஆவணப்படத்தை வெளியிட தடை செய்யப்பட்டது. ஆனாலும் மாணவர்கள் பொது இடங்கள், கல்லூரி வளாகம், வீதிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் லேப்டாப் வழியாக மாணவ-மாணவிகள் இடையே பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் திருவாரூர் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தில் திரையிட்டனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியிலும் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    சென்னை மாநில கல்லூரி விடுதியிலும், பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரி, எம்.சி. ராஜா, கல்லூரி விடுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆவணப்படத்தை மாணவர்கள் வெளியிட முயற்சிக்கின்றனர்.

    சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட மாணவர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்து உள்ளது. ஆனாலும் பல்கலைக்கழக வளாகம் அல்லது சுவற்றில் ஆவணப்படத்தை வெளியிட முயற்சி செய்வதில் மாணவ அமைப்பினர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    • சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்ககழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • முதல் நடவடிக்கையாக அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க பணம் இல்லாததால், ஓய்வூதிய நிதியம் மற்றும் அறக்கட்டளை நிதியை எடுத்து ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் ரூ.500 கோடிக்கும் கூடுதலாக உபரி நிதி வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம், இப்போது ஊதியத்திற்கு கூட நிதியின்றி தவிப்பதும், அதற்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு மறுப்பதும் கவலையளிக்கிறது.

    சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்ககழகங்களும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும், அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது.
    • ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சென்னை பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர்.

    பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு கட்டணம் ரூ.5000 ஆக இருந்தது. அவை தற்போது ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    முழு நேரம் பி.எச்.டி. படிக்கும் விண்ணப்ப கட்டணம் முன்பு ரூ.100 நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க கூடுதலாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற அதிர்ச்சி தகவலை மாணவர்களை தெரிவிக்கின்றனர். 250 மடங்கு கட்டணம் உயர்ந்து உள்ளது.

    இதே போல மற்றொரு கட்டணமும் ரூ.2000 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ந் தேதியில் இருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சென்னை பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

    பல்கலைக்கழக மூத்த அதிகாரிகள் கூறும்போது, சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. ஜூனில் நடந்த சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டத்தில் இதற்கான முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன என்றனர்.

    கட்டண உயர்வை, பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்துள்ளார். கட்டணம் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.

    • உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் அது தாமதம் ஆகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
    • உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும். எதிர்காலம் உன்னுடையது.

    சென்னை:

    பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கு வதற்கான சென்னை பல்கலைக் கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவே சென்னை வந்துவிட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு இன்று காலையில் முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.

    அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 10.15 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வருகை புரிந்தனர்.

    அதன் பிறகு சரியாக 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. அனைவரையும் பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி வரவேற்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற 108 மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்றவர்களுக்கும், இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம்.

    நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியம் இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் சொல்லப்பட்ட அறிவார்ந்த கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தொடங்கிய மாபெரும் பக்தி மரபு, மகான்களால் வடக்கே கொண்டு செல்லப்பட்டது.

    தமிழ்நாட்டு கோவில்களின் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு. இளம் மாணவர்கள் உங்களிடம் உள்ள அபரிமிதமான வளமான கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு சமூகத்தில் முக்கிய குடிமக்களாக மாற வேண்டும்.

    இந்த பல்கலைக்கழகத்திலும் அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    பெண்கள் கல்வி பயில்வதன் மூலம், நாடு முன்னேற்றம் அடையும். படித்த பெண்கள் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும். பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை பெற முடியும்.

    1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கல்வி அறிவைப் புகட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுகிறது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது.

    165 ஆண்டுகளுக்கும் மேலான அதன் பயணம் முழுவதும் கல்வியாளர்களின் உயர் தரத்தை கடை பிடித்துள்ளது. அறிவுசார்ந்த ஆர்வத்தையும், விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்குகிறது. எண்ணற்ற அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை உருவாக்கி, கற்றலின் தொட்டிலாக இருந்து வருகிறது.

    உலகளாவிய சூழலில் கல்வியில் அவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு, இந்தியாவின் தென்மண்டலத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

    இந்தியாவின் 6 முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக பயின்றது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆவார்.

    இங்கு பயின்ற சர் சி.வி. ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர், நோபல் பரிசு பெற்றவர்கள். இவர்கள் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இங்கு பயின்று இந்தியாவின் 2 தலைமை நீதிபதிகள், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி மற்றும் நீதிபதி கே. சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையின் துறையை வளப்படுத்திஎள்ளனர்.

    சென்னை பல்கலைக்க ழகம் அத்தகைய சிறந்த அறிஞர்களை உருவாக்கி உள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்குவதற்கு உங்களை கடினமாக உழைக்கச் செய்ய வேண்டும்.

    இந்தியாவின் நைட்டிங் கேல் ஸ்ரீமதி, சரோஜினி நாயுடு மற்றும் துர்காபாய் தேஷ்முக். ஆகியோரும் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களே. சென்னை பல்கலைக் கழகத்தின் அனைத்து மாணவ-மாணவிகளும் இதன்மூலம் சிறப்பு உத்வேகத்தைப் பெற வேண்டும்.

    கடந்த மாதம், கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் நன்கொடைகளை வழங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுடன் நான் உரையாடினேன். கல்வி மற்றும் சமூகத்திற்காக பங்காற்றிய முன்னாள் மாணவர்களையும் பயனாளிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தச் சூழலில், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய சிறந்த மையமாக அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். பல்கலைக்கழகம் அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது.

    எனவே அவர்கள் தங்கள் கல்வி நிறுவனத்திற்கு திரும்ப கொடுக்க முயற்சிக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள் இளம் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்களை அணுகி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கல்வி கடுமையின் கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளது. இது பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை இயக்கி வரும் திறன்மிக்க மனித வளங்களை மேம்படுத்த உதவுகிறது.

    அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவும், இடைநிலை ஆய்வுகளை ஊக்குவிக்கவும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல்கலைக்கழகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒரு நிறுவனமாக இந்தப் பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.

    என் மனதில் பட்ட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அழுத்தம், நல்ல கல்வி நிறுவனங்களில் சேரவில்லையே என்ற பயம், மதிப்புமிக்க வேலையில் இறங்கவில்லையே என்ற பதட்டம், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை போன்றவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

    இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நமது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவதற்கும் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைவது முக்கியம். எந்தவொரு கவலையும் உங்களை மூழ்கடிக்க வேண்டாம் என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் அது தாமதம் ஆகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.

    பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, மாணவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை கடந்து செல்ல உதவலாம். இருவழித் தொடர்பை ஊக்குவிக்கும் சூழ்நிலையை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் பயம், கவலைகள் மற்றும் போராட்டங்களை பயப்படாமல் விவாதிக்க வசதியாக இருக்கும். சவால்களை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் நமது இளைஞர்கள் அன்பாகவும், மதிப்புடனும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உருவாக்க நாம் கூட்டாகப் பணியாற்ற வேண்டும்.

    உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் இலக்குகளை உயர்வாக அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உறுதியுடனும் அச்சமின்மையுடனும் உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும். எதிர்காலம் உன்னுடையது.

    இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

    இந்த விழா மூலம் சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 416 பேர் பட்டம் பெற்றனர்.

    விழாவில் சென்னை பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.

    விழா முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கி உள்ளார்.

    இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று அவர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அந்த அரங்குக்கு பெயர் சூட்டி கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    • மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
    • யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முதன்மை முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும், தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    இன்றைய விழாவின்போது, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டபோது போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவித்ததால் மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தல் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா ஏற்பாடுகளில் சில சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறவில்லை. குடியரசு தலைவர் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைதூர கல்வி நிலைய முறைகேடு புகார் என்பது பழைய புகார்; அது விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்தது.
    • குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

    சென்னை:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    பருவமழை தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    சென்னையில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்தது. மாலை 5 மணிக்கு மேலாக மழை அடித்து பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இரவு தாண்டியும் மழை நீடித்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொடர்மழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வேறொரு தேதியில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.
    • எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களான சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத்துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்தனர். தமிழக அரசிடம் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள மானிய நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்கக்கோரி இப்போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    போராட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அலுவலக பேரவை தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    தற்காலிக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர்.
    • ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் குறைந்தபட்ச கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, புளோரைடு மற்றும் சோடியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய இந்திய தர நிலைகள் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

    பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர். நிலத்தடி நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனங்களின் தண்ணீரில் மொத்த கரைந்த உப்புகளின் மதிப்பை குறைக்கிறது. 2000 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட உப்பு அளவை 56 மில்லி கிராம் வரை மட்டுமே பயன்படுத்துகிறது என்று வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். தற்போது விற்பனையில் உள்ள பிரபலமான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் கனிம சத்துக்கள் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 188 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் இருக்கலாம் என இந்திய உணவு தரநிலை வலியுறுத்திய நிலையில் இந்த நிறுவனங்கள் 3.5 மில்லி கிராம் மட்டுமே சேர்க்கிறது.

    உணவு உட்கொள்வதில் இருந்து பல தாதுக்கள் பெறப்படலாம். அவற்றில் சில புளோரைடுகள் தண்ணீரில் மட்டுமே உள்ளன. குறைந்த புளோரைடு எடுத்துக்கொண்டால் பல் சிதைவை ஏற்படுத்தும். அதிக புளோரைடு உட்கொண்டால் பற்களில் நிறமாற்றம் மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படலாம் என்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பேராசிரியர் சுதர்ஷினி கூறினார்.

    ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது. தரநிலை நிர்ணயம் வரம்பு 1.5 மில்லி கிராம் ஆகும். பரிசோதிக்கப்பட்ட குடிநீரில் 0.08 மில்லி கிராம் அளவே இருந்துள்ளது.

    உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் ஒருவர் 7 நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட குடிநீரை மட்டுமே குடித்தால் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இளங்கோ கூறினார்.

    • ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
    • வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற கல்வி ஆண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டேட்டா அறிவியலுடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும், ஏ.ஐ. உடன் பி.எஸ்.சி. கணினி அறிவியலையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. சில கல்லூரிகள் பி.பி.ஏ., பி.எஸ்.சி. உளவியல் பாடப் பிரிவுகளில் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளன.

    மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியலை டேட்டா அறிவியல் பாடத்துடன் தொடங்கவும் சமூக பணி முதுநிலை பாடப் பிரிவை புதிதாக தொடங்கவும் திட்டமிட்டு உள்ளது. வருகிற கல்வியாண்டில் 'பி.காம் கார்ப ரேட் செகரட்டரிஷிப் படிப்பை' தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் வில்லியன் ஜாஸ்பர் தெரிவித்தார்.

    ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.எஸ்.சி. டேட்டா அறிவியல் பாடப் பிரிவும் எம்.ஏ. தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் உணவு பதப்படுத்துதல் இளங்கலை பட்டப்படிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

    டேட்டா அறிவியல் தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்களிடம் அதிக தேவை உள்ளது என்றும் பல்கலைக் கழகத்தின் ஆய்வுக்கு பிறகு பாடநெறி கிடைக்கும் என்றும் ஸ்டெல்லா மேரி கல்லூரி யின் முதல்வர் ஸ்டெல்லா மேரி கூறினார்.

    டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் ஏற்கனவே உள்ள படிப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. டேட்டா அறிவியல் படிப்புக்கான இன்டர்ன்ஷிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்து 2 கிரெடிட் படிப்புகளை மாணவர்கள் படிக்க வைப்போம் என்று முதல்வர் சந்தோஷ் பாபு தெரிவித்தார். அடிப்படை அறிவியல் படிப்புகளை ஊக்குவிக்கவும் கல்லூரி திட்டமிட்டுள்ளது.

    கணினி தொடர்பாக படிப்புகளை படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் பால் வில்சன் கூறுகையில், "வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருள் அறிவியல் மற்றும் ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பாடங்களை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.

    • சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.
    • சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகள், பிற பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி விட்ட நிலையில், சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

    இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாத மத்தியில் வெளியிடப்பட வேண்டும். அப்போது தான் ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க முடியும். தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் குறித்த காலத்தில் வெளியிடப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையும் நிறைவடைந்து விட்டது.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத 108 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அக்கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு எழுதிய மாணவர்களால், பிற கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தாங்கள் படித்த கல்லூரிகளில் மட்டுமே இனி சேர முடியும். அந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் பிற கல்லூரி மாணவர்கள் போட்டியிடுவார்கள் என்பதால் அவர்களுக்கு கடும் போட்டி ஏற்படும். இதனால் பல மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். இதுவா திராவிட மாடல்?

    தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடாததை மன்னிக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடி, பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். இந்த சீரழிவுகள் அனைத்துக்கும் திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி பெறாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அவற்றில் சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் இணைந்து படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னைப் பல்கலைகழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமித்தல், நிதி நெருக்கடியைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ×