என் மலர்
நீங்கள் தேடியது "Northeast Monsoon"
- கேரள கடற்கரை பகுதியில் அதிக அலை அடிக்கும் என்று இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இடுக்கி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சியின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 30-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
29 மற்றும் 30-ந்தேதிகளில் மாநிலத்தில் லேசான மற்றும் மிதமாக மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமின்றி கேரள கடற்கரை பகுதியில் அதிக அலை அடிக்கும் என்று இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 1.8 மீட்டர் உயரம் வரை எழுந்து அடிக்கும் என்பதால், கடலோர கிராமங்களுக்குள் கடல்நீர் புகும் அபாயம் இருப்பதாகவும், ஆகவே கடற்கரையோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
- கடந்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வேகமாக நகர்ந்து வருகிறது.
- சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.
நேற்று முன்தினம் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து அது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது.
நேற்று சென்னையில் இருந்து தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் அது நிலைக்கொண்டிருந்தது. நேற்றிரவு தொடர்ந்து கடலோரத்தை நோக்கி மேற்கு வடமேற்கு திசை நோக்கி வந்தது.
இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும். இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு மாவட்டங்கள் அனைத்திலும் முழுமையாக மேகம் திரண்டு இருப்பதை சாட்டிலைட் படங்கள் மூலம் காண முடிந்தது.
இந்த புயல் சின்னம் தற்போது மணிக்கு சுமார் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவை கடந்து தமிழக வட கடலோரத்தை நெருங்கி இருக்கிறது.
இன்று மதியம் அந்த புயல் சின்னம் சென்னைக்கு மிக அருகே நெருங்கி வருகிறது. இது தொடர்பாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.
இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிக்ஜம்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 6-ந்தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும்.
இன்று கடலூா், மயிலாடுதுறை, நாகை , திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தவிர, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.
நாளை புயலாக வலுப்பெற்ற பிறகு அதன் நகர்வு வேகமும் அதிகரிக்கும். முதலில் வந்த கணிப்பின்படி இந்த புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதி இடையே கரையைய கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
ஆனால் அதன் நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அருகே நெருங்கி வந்த பிறகு அந்த புயல் வடக்கு திசை நோக்கி திரும்பும். இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு புயல் இடம் மாறும்.
அந்த புயல் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நகர்ந்து வரும் புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சென்னை உள்பட வட மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையிலும் தரைக் காற்று வீசும்.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 75 கி.மீ. முதல் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார்.
- பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர்.
சென்னை:
'மிச்சாங்' புயல் மற்றும் பலத்த மழை காரணமாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இங்கு வசிக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் வேளச்சேரி பகுதியில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் மழை வெள்ளம் தேங்கவில்லை.
எனவே மனைவியை குழந்தையுடன் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக அழைத்து வர கணவர் விரும்பினார். இதை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த வாலிபர், அவரது தாயார், சகோதரி ஆகியோர் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட படகில் சென்றனர். அந்த பெண்ணின் வீட்டை அடைந்ததும், மாமியார் படகில் இருந்தபடியே மருமகளை அழைத்தார்.
உடனே வீட்டை விட்டு வெளியே வந்த மருமகள், மாமியாரை வீட்டுக்குள் வருமாறு கூறினார். ஆனால் மாமியாரோ வீட்டுக்குள் செல்லவில்லை. படகில் இருந்தபடியே மருமகளிடம், 'குழந்தையை எடுத்துக்கொண்டு வாம்மா... வீட்டுக்கு போகலாம்' என்றார். இதைக்கேட்டு வெளியே வந்த பெண்ணின் தந்தை, 'உங்கள் வீட்டுக்கு எனது மகளை அனுப்ப முடியாது' என்று கூறினார்.
உடனே அந்த பெண்ணிடம் நாத்தனார், 'இப்ப வருவியா, மாட்டியா' என்று கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்தது. கணவர் குடும்பத்தினரும், மனைவி குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து சண்டை போட்டனர்.
படகில் நின்றபடியே சண்டை போட்டதால் படகை ஓட்டி சென்றவர் பரிதாபமாக தவித்தார். படகை விட்டு இறங்குமாறும், வேறு இடத்தில் மீட்பு பணிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர்கள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர்.
இதற்கிடையே அந்த பச்சிளம் குழந்தையின் தந்தையோ, குழந்தையை எப்படியாவது அழைத்து சென்று விடலாம் என்று அமைதியாக நின்றபடியே பாசப்போராட்டம் நடத்தினார். ஒரு கட்டத்தில் நாத்தனார் கடும் ஆத்திரம் அடைந்து, 'இந்த பெண்ணே வேண்டாம். நாம் வீட்டுக்கு போவோம்' என்று சகோதரனை அழைத்தார். அதன்பிறகு சண்டை உச்சத்தை எட்டியது.
இதனால் பெண் வீட்டார், கணவர் குடும்பத்தினரை அடிக்க பாய்ந்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த படகோட்டி கணவர் குடும்பத்தினருடன் படகை அங்கிருந்து ஓட்டி சென்றார். இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட இருந்த அடிதடி சண்டை தடுக்கப்பட்டது.
வேளச்சேரியை சேர்ந்த அந்த வாலிபருக்கும், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் திருமணம் முடிந்ததில் இருந்தே இந்த இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 3 வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவர்களின் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தனது குழந்தையை பத்திரமாக மீட்டு அழைத்து வருவதற்காகத்தான் தந்தை, தனது குடும்பத்தினருடன் சென்றார். தனது மனைவியையும், குந்தையையும் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துவர பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் சண்டையாலும், புயல் தாக்கத்தையும் மிஞ்சிய குடும்ப பிரச்சனையாலும் வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை அழைத்து வர முடியாமல் போய் விட்டது.