என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 94433"

    சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சூரிய ஒளி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் சூரிய ஒளி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். மன ஆரோக்கியத்திற்கும் வித்திடும். இருப்பினும், அதிகப்படியான சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். தோல் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடும். சரும புற்றுநோயையும் எதிர்கொள்ள வைத்துவிடும்.

    கோடை காலத்தில்தான் சூரிய கதிர்வீச்சுகள் உமிழும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. சன்ஸ்கிரீன் கிரீம்கள் பயன்படுத்துவதுதான் சிறந்த வழிமுறையாக அமையும். சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சரும சுருக்கம், மந்தமான தன்மையை போக்குவதோடு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீன் சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

    மடிக்கணினிகள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அவை நீல நிறத்தை வெளியிடுகின்றன. சன்ஸ்கிரீன் இவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. எனவே, நல்ல தரமான சன்ஸ்கிரீன் உபயோகிப்பது முக்கியம்.

    சன்ஸ்கிரீனில் எஸ்.பி.எப் அளவு குறைந்தபட்சம் 15 முதல் 20 வரை மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் தோல் புற்றுநோயை உண்டாக்கும் யூ.வி.பி. கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் அளவீடு ஆகும்.

    சன்ஸ்கிரீன் சருமத்துடன் ஒட்டாமல் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த சன்ஸ்கிரீனாக கருதப்படும். மேலும் பயன் படுத்தும்போது வெள்ளை நிறம் சட்டென்று நீங்கிவிடக்கூடாது. முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசுவதற்கு அரை டீஸ்பூன் சன்ஸ்கிரீன் போதுமானது. மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை மீண்டும் சருமத்தில் தடவுவது நல்லது. அதிலும் வெயில் அதிகம் இருக்கும் சமயத்தில் அடிக்கடி உபயோகித்து வர வேண்டும். வெளியே செல்வதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அது சருமத்தில் சரியாக உறிஞ்சப்படாது. வெயில் சருமத்தில் அதிகம் படர்வதற்கான வாய்ப்பும் உருவாகிவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது.

    கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீனுக்கு மாற்று ஏதுமில்லை. இருப்பினும், சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க வேறு சில வழிகள் உள்ளன.

    உதடுகளும் சூரிய ஒளியால் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, சன்ஸ்கிரீன் பண்புகளை கொண்ட லிப் பாம் தடவலாம். கூடுமானவரை உடல் பகுதிகளை மூடும்படியான ஆடைகளை அணிவது நல்லது. வெயிலில் இருந்து உச்சந்தலையைப் பாதுகாக்க அகலமான விளிம்பு கொண்ட தொப்பியை அணியலாம். குடையை உடன் எடுத்துச் செல்லலாம்.

    முடிந்தவரை நிழலான பகுதியில் நடமாடலாம். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்துவிடலாம்.
    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும்.
    வெயில், மாசு போன்றவற்றால் சருமம் பெரிதும் பாதிப்படைகிறது. அதற்காக வெளியில் செல்வதை நாம் தவிர்க்க முடியாது. சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே...

    இறந்த செல்களை நீக்குதல்:

    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இறந்த செல்களை நீக்கலாம்.

    சீத்தாப்பழம்

    சீத்தாப்பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சரும வறட்சியை நீக்கும். சீத்தாப்பழத் தோலை முகத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு நீரைக்கொண்டு முகம் கழுவுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் இறந்த செல்கள் நீங்கும். சீத்தாப் பழச்சாற்றை வாரம் 3 நாட்கள் பருகி வந்தால் சரும பிரச்சினைகள் ஏற்படாது.

    கூந்தல் அழகிற்கு:

    தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.

    நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம் வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    நகங்கள் பராமரிப்பு:

    நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

    வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரையும். சருமம் பொலிவாகும். ரசாயனப்பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். கூந்தல் அழகு பெற இயற்கையான முறையில் தயார் செய்த கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
    அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்.
    சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் சுற்றுச்சூழல்மாசுபாடு, எதிர்மறையான வாழ்வியல் மாற்றங்கள், முறையற்ற உணவுப்பழக்கம், ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு போன்றவை சருமத்தில் பாதிப்பை உண்டாக்குகின்றன. இதன் மூலம் முகத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தோல் சுருக்கம், சரும நிறம் மாற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும். அன்றாடம் பயன்படுத்தும் எளிமையான பொருட்களை கொண்டு முகப்பொலிவை அதிகரிக்கும் வழிமுறைகளை இங்கு காண்போம்

    காற்றாழை, புற ஊதாக்கதிர்களை பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாப்பதோடு சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவடையும்.

    எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்திருப்பதற்கு உதவும். இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் முகத்தில் படர்ந்திருக்கும் கருமையை நீக்கும் திறன் கொண்டது. ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சம அளவு தயிர் கலநது முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும். இந்த கலவையை வெயில் பட்டு கருத்த இடங்களில் பூசலாம்.

    2 டீஸ்பூன் முட்டைகோஸ் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகததில் தடவி சிறிது நேரம் கழித்து நீரால் கழுவி விடலாம். இதன் மூலம் முகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கலாம். மென்மையான பளபளக்கான சருமத்தை பெறலாம்.

    கால் தேக்கரண்டி கசகசா, 3 கிராம்பு, அரை அரை ஜாதிக்காய் இந்த மூன்றையும் சிறிதளவு பால் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த விழுதை முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களின் மீது பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் முகம் பளபளக்கும்.

    குப்பைமேனி இலை சாறு 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, ரோஜா பன்னீர் அரை தேக்கரண்டி, கற்றாழை சாறு 1 தேக்கரண்டி தேன் கால் தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊறவைத்த பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்கும். முகப்பருக்கள் உண்டாகாது. குப்பைமேனி சருமத்தில் உள்ள சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக்கும். முகப்பருவால் ஏற்பட்ட தழும்புபளை நீக்கும். குப்பை மேனியை பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திப்பொடி செய்தோ பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளிலும் குப்பைமேனி பொடி கிடைக்கும்.
    உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்களில் சருமத்தின் தன்மைக்கேற்பவும், ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் வகையிலான ‘ஸ்கிரப்’ பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மையை பெறலாம்.
    கோடை வெயிலின் வெப்பம் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இதில் தூசுகள் மற்றும் இறந்த செல்கள் படிவதால் சருமத் துளைகள் அடைத்துக்கொள்ளும். இதனால் சருமம் பொலிவு இழந்து கருத்துப்போகும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்கிரப்பிங் முறை உதவும்.

    பல வகை ஸ்கிரப்கள் இருந்தாலும், சருமத்தை பளிச்சென வைப்பதற்கு வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய ‘சர்க்கரை மற்றும் உப்பு கொண்டு தயார் செய்யும் ஸ்கிரப்’ உதவும்.

    சர்க்கரை ஸ்கிரப்:

    சர்க்கரை ஸ்கிரப் சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தரும். கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    பயன்படுத்தும் முறை:

    சர்க்கரையை, அழகுக்காக பயன்படுத்தும் எந்த வகையான எசன்ஷியல் எண்ணெய்யுடனும் கலந்து பயன்படுத்தலாம். காபித் தூளுடன் கலந்து பயன்படுத்த ஏற்றது. பாதாம் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தும்போது கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

    அதேசமயம், சர்க்கரை ஸ்கிரப் முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த ஏற்றது.

    உப்பு ஸ்கிரப்:

    உடம்பு வலியால் தவிப்பவர்கள், குளிக்கும் வெந்நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிக்கும்போது வலி நீங்கி, உடல் புத்துணர்வு பெறும். இந்த உப்பு ஸ்கிரப்பிங்கை, முகத்திற்கு மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன்படுத்தலாம். உப்பு ஸ்கிரப் வறண்ட சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டு தருவதுடன், இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. இதனால், சருமம் வழுவழுப்பாக மாறும். உடலில், உப்பு ஸ்கிரப்பைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.

    உப்பை காபித் தூளுடன் கலந்து உடலில் ஸ்கிரப்பாகப் பயன்படுத்தும்போது, செல்களுக்கு புத்துயிர் கிடைக்கும். சரும சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றம் பெற முடியும். உப்பு ஸ்கிரப்பிங் செய்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் போது, உடலும், மனதும் புத்துணர்வு பெறும். தக்காளியுடன் கலந்து முகத்தில் தேய்க்கும் போது, முகம் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

    உப்பு மற்றும் சர்க்கரை ஸ்கிரப்களில் சருமத்தின் தன்மைக்கேற்பவும், ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும் வகையிலான ‘ஸ்கிரப்’ பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நன்மையை பெறலாம்.
    பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...
    பூசணியில் உள்ள என்சைம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் போன்றவை, இறந்த செல்களை நீக்கி சருமப் பொலிவை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை, சுருக்கங்கள் வராமல் தடுத்து சருமத்தை மிருதுவாக்கும்.

    பூசணியில் உள்ள சத்துக்கள் ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டவை. இதன் மூலம் சருமம் இளமையாக இருக்கும். பூசணியைக் கொண்டு செய்யக்கூடிய சில பேசியல்கள் உங்களுக்காக...

    சரும நிறத்தை அதிகப்படுத்துவதற்கு…

    தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

    முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும். பின்னர் சிறிதளவு பூசணிக் கலவையை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து, பருத்தித் துணியை வெந்நீரில் நனைத்து பூசணிக் கலவையைத் துடைத்து எடுக்கவும். சில வினாடிகள் கழித்து, மீண்டும் மீதம் உள்ள பூசணிக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் மூலம் முகம் மற்றும் கை, கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மிளிரும்.

    மிருதுவான சருமத்திற்கு...

    தோல் நீக்கிய பூசணி - 1 துண்டு, தயிர் - 1 தேக்கரண்டி, ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்த பாதாம் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் விதை நீக்கப்பட்ட பூசணியைப் போட்டு, ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் தயிர், அரைத்த பாதாம், தேன் ஆகிய மூன்றையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

    பொலிவான சருமத்திற்கு...

    தோல் நீக்கி மசித்தப் பூசணி - 2 தேக்கரண்டி, ஜாதிக்காய் தூள் - ½  தேக்கரண்டி, பாதாம் எண்ணெய் - ½ தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி, பசுவின் பால் (காய்ச்சாதது) - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் மசித்த பூசணி, ஜாதிக்காய் தூள், பாதாம் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். அதில் தேவையான அளவு பால் சேர்த்து, பசை பதத்திற்கு வரும் வரை கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
    முல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.
    அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

    பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

    * ஒரு சிறிய பௌலில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

    * ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

    * 1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

    * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.
    உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

    இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

    முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

    கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.

    முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.
    முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும்  தரக்கூடியது.

    வெட்டிவேர், ஆவாரம் பூ, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றை நன்றாக உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தண்ணீரில் குழைத்து பேஸ் பேக் போல முகத்துக்குப் பயன்படுத்த, முகம் பொலிவடையும். வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

    செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில், வெட்டிவேர், ஆவாரம் பூ, சடாமஞ்சி போன்ற மூலிகைகளைச் சேர்த்து ஊறவைத்து, முடித் தைலமாக உபயோகிக்க, தலைமுடிக்குக் கூடுதல் ஆரோக்கியம்  கிடைக்கும்.

    வெட்டிவேரினை சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். இரண்டையும் முதல்நாள் இரவே கொதிக்கும் நீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் நன்றாக மைய அரைத்து அந்த விழுதினை பருக்கள் மீது மறைப்பதுபோல பூசவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்துவிடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது.

    பருக்கள் வந்து காய்ந்தாலும் ஒரு சிலருக்கு தழும்புகள் மட்டும் போகாது. இதனாலேயே முகம் கரடு முரடாக மாறிவிடும். அந்த தழும்புகள் மறைய ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத்தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி பிழிந்து முகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

    தலைக்கும் முகத்திற்கும் என்ன போட்டு குளித்தாலும் சிறிது நேரத்தில் முகம் டல்லாகிவிடும். இவர்கள் வாரம் இருமுறை தலைக் குளிக்க வெட்டிவேர் பவுடரை உபயோகிக்கலாம். உடனடியாக வித்தியாசம் தெரியும்.

    வெட்டிவேர் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம் சேர்த்து இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். கூந்தல் வாசனையாக இருக்கும். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. அதோடு உங்கள் கூந்தலின் நறுமணத்திற்கு எல்லோருமே மயங்குவார்கள்.
    தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.
    சருமம் முழுவதும் சீரான நிறத்தை பெறுவதற்காக பலவித அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை குறுகிய கால வெளிப்புற அழகை மட்டுமே வழங்கும் தன்மை கொண்டவையாகும். தற்காலிக முகப்பொலிவை மட்டும் தராமல் நிரந்தரத்தீர்வையும் இயற்கையான முறையில் கொடுக்கக்கூடிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் பானம் :

    * 1 ஆப்பிள், அரை பீட்ரூட், 1 கேரட், சிறிய இஞ்சித்துண்டு போன்றவைற்றை சேர்த்து அரைத்து அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தினமும்காலையில் பருகலாம். இந்த பானம் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து மேனியை பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது.

    * 3 தேக்கரண்டி கோதுமை மாவு, 2 தேக்கரண்டி தயிர், 1 தேக்கரண்டி கஸ்துரி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளப்பாகும்.

    * 4 தேக்கரண்டி சர்க்கரை, 2 தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து உடல் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சீரான நிறத்தை பெற முடியும். சருமமும் மென்மையாகும்.

    * 3 தேக்கரண்டி அரிசி மாவு, 5 தேக்கரண்டி கேரட்சாறு, 6 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

    * வெட்டி வேர் 50 கிராம், உலர்ந்த ஆவாரம் பூ 25 கிராம், உலர்ந்த மகிழம் பூ 50 கிராம், கஸ்துரி மஞ்சள் 50 கிராம், பூலான் கிழங்கு 50 கிராம், கோரைக்கிழங்கு 50 கிராம், வேப்பிலை பொடி 20 கிராம், இவற்றை பொடியாக அரைத்து கொள்ளவும். 100 கிராம் பச்சை பயிறு, உலர்ந்த ரோஜா இதழ்கள் 20, உலர்ந்த ஆரஞ்சு தோல் 30 கிராம் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடியாக்கி கொள்ளவும். தினமும் குளிக்கும் போது இரண்டு கலவையையும் முறையே 2 தேக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி அளவுக்கு எடுத்து பன்னீருடன் கலந்து உடல் முழுவதும் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் முழுவதும் சருமம் சீரான நிறம் பெறும்.
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
    மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும். அவர்கள் சரும அழகை சீராக்குவதற்கு மாம்பழத்தை கூழாக தயாரித்து பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

    மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம். ஒரு பவுலில் மாம் பழக்கூழை கொட்டி அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழ தோலை உலரவைத்து பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.
    தோல் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கும் வேப்ப எண்ணெய் தீர்வு தருகிறது. வேப்ப எண்ணெயின் பயன்களை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

    * தினமும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப விதை தூளை முகத்தில் தடவி வர தோல் சுருக்கங்கள் மறைந்து இளமையான தோற்றத்தை பெறலாம்.

    * வேப்ப எண்ணெய் தடவுவதால் தோல் மென்மையாக இருக்கும். தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் சிரங்குகளை வேப்ப எண்ணெய் போக்கும்.

    * குளிர்காலங்களில் ஏற்படும் தோல் வெடிப்பை வேப்ப எண்ணெய் சரிசெய்யும்.

    * வேப்ப எண்ணெய் தினமும் பயன்படுத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

    * படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது.

    * தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

    * தினமும் வேப்ப எண்ணெய்யை தலையில் தடவினால் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். முகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க உதவும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்
    செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்
    போய்விடும்.

    வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

    ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

    தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

    பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்,
    தேன் - ஒரு டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்,
    பாதாம் எண்ணெய் - அரை டீஸ்பூன்

    இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

    வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.
    ×