என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடுமலை"
- அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது.
- அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
உடுமலை:
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக் காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கும், சுற்றுப்புற கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு கடந்த 66 நாட்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. ஆனாலும் நீர் வரத்து மற்றும் நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு நீர்வரத்து குறைந்தது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
இதனால் வடகிழக்கு பருவ மலையை எதிர்நோக்கி காத்துள்ளனர். அதற்கு முன்பாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனால் அணையில் நீர் இருப்பு குறைந்து வடகிழக்கு பருவ மழையால் ஏற்படுகின்ற நீர் இருப்பை தேக்கி வைக்க இயலும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.98 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
- அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
- ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
- விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
திருப்பூர்,ஜூலை.11-
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
எனவே கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர் வளம் மற்றும் நிலவளம் கொண்ட பகுதியாகும்.
சிறப்பம்சம் கொண்ட இந்த ஆலை பராமரிப்பு இன்றி தற்போது இயங்கப்படாமல் இருப்பதால் கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள னர் .
எனவே மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
- உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகின்ற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வசனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வன பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.
அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
- அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் குறுமலை ஆறு, பாரப்பட்டி ஆறு, கிழவிப்பட்டி ஓடை, உழுவி ஆறு, கொட்டை ஆறு, உப்பு மண்ணம் பள்ளம் உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.
அப்போது வனப்பகுதியில் நீர்வழித்தடங்களில் தேங்கி இருக்கும் மருத்துவ குணமிக்க மூலிகைகள் தண்ணீருடன் கலந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீர்வரத்தை முற்றிலுமாக இழந்து விட்டன. இதனால் பஞ்சலிங்க அருவி தண்ணீர் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது.
இதன் காரணமாக திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர். ஆனாலும் அருவிக்கு சென்று பார்வையிட்டு திரும்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். வெப்பத்தின் தாக்கம் குறைந்து வனப்பகுதியில் மழை பெய்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
கோவிலுக்கு வந்து விட்டு திரும்பி செல்கின்ற பக்தர்கள் குறைவான நீர் இருப்பு உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில் இறங்கி ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள். அணையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பி வேலி சேதமடைந்ததே இதற்கு காரணம். அதை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விலைமதிப்பற்ற மனித உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் சேதம் அடைந்த கம்பி வேலியை சீரமைத்தும், கோடைகாலம் முடியும் வரையில் தகுந்த போலீஸ் பாதுகாப்பையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நடனமாடி வனதேவதைக்கு விழா எடுத்த மக்கள்.
- மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கருமுட்டி, காட்டுப்பட்டி, குலிப்பட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக வனப்பகுதி காய்ந்து விட்டது. அதைத்தொடர்ந்து வன தேவதைகளுக்கு விழா எடுத்து அதன் மூலமாக குளிர்வித்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மலைவாழ் மக்கள் சாமிகளுக்கு விழா எடுத்து வருகின்றனர். அதன்படி கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்கு விழா எடுப்பது என மலைவாழ் மக்கள் முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து கம்பம் போடுதல் நிகழ்வு, மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
விழாவை பாரம்பரிய இசைக் கருவிகளுடன் மலைவாழ் மக்கள் ஆடல் பாடல் நடனத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். முடிவில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.
இதே போன்று மாவடப்பு மற்றும் சம்பக்காட்டு பகுதியிலும் மழைப்பொழிவு வேண்டி வன தேவதைகளுக்கு மலைவாழ் மக்கள் விழா எடுத்தனர். சமவெளி பகுதியில் கிராமங்கள் மற்றும் நகரப்புறத்தில் உள்ள கோவில்களில் மழைப் பொழிவு வேண்டி சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.
- கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.
இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
- கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.
குடிமங்கலம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.
மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளை கையில் வைத்து சலங்கை மாடுகளுடன் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வந்து உருமி இசைக்கேற்ப ஆடுகின்றனர்.
பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது கோவிலில் வைத்து பால், பழம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்களை தொடர்ந்து பாடும் போது சலங்கை மாடுகள் தானாகவே சென்று பால், பழம், பொங்கல்களை சாப்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.
உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் குடிமங்கலம் அருகே பண்ணைகிணரில் கிராமமக்கள் பொது இடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
- அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.
உடுமலை:
திருப்பூா் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் போனது. இதனால் அணையின் நீா் இருப்பைப் பொருத்து குடிநீா்த் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப்பயிா்களை காப்பாற்றவும் ஜூன் 29, ஆகஸ்ட் 8, அக்டோபா் 13-ந் தேதி என 3 முறை அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா் இருப்பு குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 10-ந் தேதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது. அதன் பின்னா் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.
இதனால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட அரசுக்கு பொதுப் பணித் துறையினா் கருத்துரு அனுப்பியுள்ளனா். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது:- ஆண்டுதோறும் நவம்பா் மாதம் வடகிழக்குப் பருவமழையை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழையை நம்பிக்கையோடு எதிா்பாா்த்துள்ளோம். ஆகையால் இன்னும் சில நாட்களிலேயே அணையைத் திறந்துவிட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து விளக்கமாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம் என்றனா்.
- ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
- வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஜெயந்தி உற்சவ விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழாவின் 5- வது நாளான நேற்று வெண்ணை தாழி கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். இந்த நிகழ்வுக்காக கோவில் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் கண்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பெரியதிருமொழி, திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட பாடல்களை பாடி வெண்ணை தாழி அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணனை சாமி தரிசனம் செய்தனர்.
- விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
- கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.
உடுமலை:
உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,
ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.
உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்