என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97757"

    இந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
    பாலக்காடு:

    கேரள மாநிலம், ஆலப்புழை அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்த பைபி என்ற 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு சுற்றுலா சென்றார். 

    சுற்றுலா முடிந்த அவர் நேற்று சேர்த்தலாவிற்க்கு திரும்பிகொண்டிருந்தபோது, பாலக்காடு வடக்கஞ்சேரி அருகே மாலை 5 மணி அளவில் அவர் வந்த டெம்போ டிராவலர் வாகனம், சிற்றூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. 

    இதில் பைபி, அவருடைய மனைவி ரோஸ்லி (65), பைபியின் தம்பி மனைவி ஜெலி (51). ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். 

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டது. அதாவது மே 23-ந்தேதியே மழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியும் தென்பட தொடங்கியது. 

    அதன்பின்னர் வானிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டது. பருவமழையின் வருகையை அறிவிக்கும் அறிகுறிகள் தென்படாததால், 30-ந்தேதிக்கு முன்பு மழை தொடங்க வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று (மே 29) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    சென்னை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-

    கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 30, 31, 1, 2, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    இன்றும், நாளையும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    கடந்த 24 மணிநேரத்தில் மதுரை தல்லாகுளம் 7 செ.மீ, கள்ளிக்குடி, மதுரை தெற்கு தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் திருச்சூர் மாவட்டம் பனஞ்சேரியை சேர்ந்த ஜோபி என்பவர் மேற்கு நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    இதையடுத்து மாநில சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. மேற்கு நைல் காய்ச்சல், க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

    திருச்சூர் மாவட்ட மருத்துவ சிறப்புக் குழு, உயிரிழந்த நோயாளி வசித்து வந்த கண்ணாரா பகுதிக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. 

    திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரத்த மாதிரிகள்
    சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வெஸ்ட் நைல் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றார்.

    தற்காப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொசுக்களை அழிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்தி உள்ளார். 

    பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    காய்ச்சல் அல்லது நோயின் பிற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனை சிகிச்சையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேரள மக்களை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஆர்எஸ்எஸ் தொண்டரை இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    திருவனந்தபுரம்:
     
    கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் இன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது. 

    இதில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை எதிரொலியால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இது முழுக்க முழுக்க இந்திய சமூக ஜனநாயக கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை என்றும், ஆளும் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றும் பாலக்காடு மாவட்ட பாஜக தலைவர் கே.எம். ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
    பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்துக்கு பயன் அளிக்கும்.
    சென்னை:

    முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரத்தை வெட்ட அனுமதித்தற்கு நன்றி. கேரள அரசின் அனுமதி இருமாநில மக்களுக்கு நீண்டகாலம் பயனளிக்கும் வகையில் அமையும். இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்படவும் வழிவகுக்கும்.

    பினராயி விஜயன்


    பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்டகாலத்துக்கு பயன் அளிக்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. அவ்வகையில், சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 1 முதல் 7ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் உற்சாகமாக காணப்பட்டனர்.

    பள்ளிகள் அனைத்தும்  சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளுக்கு புத்தகங்கள், பேனா, சானிடைசர், மாஸ்க், பலூன்கள் அடங்கிய சிறிய கிப்ட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது, சானிடைசர் வழங்கப்பட்டது, மாஸ்க் அணிவது உறுதி செய்யப்பட்டது. 

    இதேபோல் 8, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பள்ளிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வகுப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
    பாஜகவிற்கு சற்று பின்னடைவாக உள்ள மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு கூடுதலாக மத்திய மந்திரி பதவிகளை வழங்க பிரதமர் மோடி தீர்மானித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றிருக்கிறது.

    மேற்குவங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.

    மேற்குவங்காளத்தில் 18 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. அதேபோல ஒடிசாவிலும் 8 இடங்களில் வென்றுள்ளது. அங்கு இதற்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த இரு மாநிலங்களிலும் இன்னும் ஆழமாக காலூன்றி வரும்காலத்தில் மாநில ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக உள்ளது.



    அதேபோல கேரள மாநிலத்திலும் பா.ஜனதா வலுவாக காலூன்ற முடியும் என்று நம்புகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு அங்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. ஆனாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.

    எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தினால் கேரளாவிலும் ஒரு காலத்தில் மிகப்பெரிய கட்சியாக வளர முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது.

    இதன் காரணமாக மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தடவை கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். தற்போது மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபுல்சுப்ரியோ, எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். இப்போது 18 இடங்களை கைப்பற்றி இருப்பதால் அங்கு கூடுதலாக மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கூடுதல் மத்திய மந்திரிகளை வழங்கி மாநிலத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது.

    ஒடிசாவில் இந்த தடவை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 8 இடங்களை கைப்பற்றி மாநிலத்தின் 2-வது பெரிய சக்தி என்பதை பா.ஜனதா நிரூபித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று கருதுகிறது. இதனால் அங்கும் கூடுதல் மந்திரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

    கேரளாவில் கடந்த 2014 தேர்தலிலும் ஒரு இடமும் பா.ஜனதாவுக்கு கிடைக்கவில்லை. ஆனால் கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன் தானத்தை ராஜஸ்தான் மேல்சபை எம்.பி. ஆக்கி மந்திரி பதவி வழங்கினார். இன்னும் அவருடைய எம்.பி. பதவி காலம் உள்ளது. எனவே அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட இருக்கிறது.

    இவர் தவிர இன்னும் ஒருவரை மந்திரியாக்கலாம் என்ற திட்டம் பா.ஜனதாவுக்கு உள்ளது. கேரள மாநில பா.ஜனதா தலைவர் முரளிதரன் மகாராஷ்டிர மாநில மேல்சபை எம்.பி.யாக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லை என்றால் வேறு ஒரு நபரை மந்திரியாக்கி பின்னர் ஏதாவது ஒரு மாநிலத்தில் மேல்சபை எம்.பி. ஆக்கும் திட்டமும் உள்ளது.

    2021-ல் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மத்திய மந்திரி பதவியை அதிகமாக வழங்கி கூடுதல் கவனம் செலுத்தினால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சில இடங்களை கைப்பற்ற முடியும் என்று கருதுகிறார்கள்.

    கடந்த மந்திரிசபையில் சிவசேனாவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது 2 மந்திரி பதவி வழங்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 2 மந்திரி பதவி வழங்க உள்ளனர்.

    தற்போது உள்ள மந்திரி சபையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மந்திரியாக உள்ளார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் கேட்கிறார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வானே மந்திரி பதவியில் தொடர வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. அசாம் மாநிலத்தில் விரைவில் 2 எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அதில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு ஒரு எம்.பி. பதவியை ராம்விலாஸ் பஸ்வானுக்கு கொடுத்து அதன் மூலம் அவரை மந்திரியாக தொடர வைக்க பா.ஜனதா திட்டமிட்டிருக்கிறது.
    கேரளாவில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது தெரிய வந்துள்ளதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு உள்ள சில ஓட்டுச்சாவடிகளில் சிலர் ஓட்டுப்போடும்போது அடையாள மையை அழித்துவிட்டு மீண்டும் வந்து கள்ள ஓட்டு போட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவின்போது வெப் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானதன் மூலம் இது வெட்டவெளிச்சமானது.

    இதுதொடர்பாக மாநில தேர்தல் கமி‌ஷன் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மேலும் 13 கள்ள ஓட்டுகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டியில் உள்ள 166-வது வாக்குச்சாவடியில் 12 கள்ள ஓட்டுகளும், தர்ம மடம் பகுதியில் 52-வது பூத்தில் ஒரு கள்ள ஓட்டு பதிவானதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முஸ்லிம்லீக்கை சேர்ந்தவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்துள்ளது. இதற்கு வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    இதுபற்றி கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறுகையில், கண்ணூர் மாவட்டம் பாம்புருட்டி, தர்மமடம் வாக்குச்சாவடிகளில் 13 கள்ள ஓட்டுகள் பதிவானதாக புகார்கள் வந்துள்ளது. கள்ள ஓட்டுப் போட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ள ஓட்டு புகார்களில் யாரையும் நாங்கள் விடமாட்டோம். பாரபட்சம் இல்லாமல் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன்சாண்டி கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டு உள்ளதாக புதிய புகாரை கூறி உள்ளார்.

    இதற்கு பதிலளித்து தேர்தல் அதிகாரி டிக்காரம் மீனா கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி நடைபெற்றது. அப்போது வாக்காளர்களிடம் இருந்து 6 லட்சம் மனுக்கள் புதிதாக பெயர் சேர்க்க கொடுக்கப்பட்டது. அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான 4 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பல முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. அனைத்து கட்சியினரை கூட்டியும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    எனவே வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்கள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுதொடர்பாக உம்மன்சாண்டி பெரிதுபடுத்தி புகார் கூறி உள்ளார். அவர் தனது புகார் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் அதுபற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ முல்லக்கல் இன்று கோர்ட்டில் ஆஜரானார். மறுவிசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #KeralaNun #FrancoMulakkal
    திருவனந்தபுரம்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார். 

    மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ மீது கோட்டயத்தில் உள்ள பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக கேரள போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட்டன.

    பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார்.

    இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.  #KeralaNun #FrancoMulakkal  
    கேரளாவில் ஆண்கள் பள்ளிகளில் ‘நாப்கின்’ எந்திரம் வைத்ததாக கூறி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால், அதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.#SanitaryNapkinMachines
    கொச்சி:

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை எரித்து அழிப்பதற்காக எந்திரங்கள் உள்ளன. பல மாநிலங்களில் இவற்றை பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நிறுவி இருக்கிறார்கள்.

    கேரள மாநிலத்திலும் இதேபோல பல பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை எரிக்கும் எந்திரங்களை வைத்துள்ளனர்.

    கொச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் எந்திரம் வைக்கப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் வைக்கப்பட்ட நாப்கின் எந்திரங்களுக்கான செலவு தொகைகளை கணக்கிட்டு நிதி தணிக்கை குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதில் பள்ளிகளில் நாப்கின் எந்திரங்களை பொருத்த ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

    நிதி தணிக்கை குழு அதிகாரிகள், இந்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஆண்கள் பள்ளிகளிலும் நாப்கின் எந்திரம் வைத்ததாக கணக்கு காட்டப்பட்டிருந்தது. இதை கவனித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஆண்கள் பள்ளிகளுக்கு சென்று பார்த்தபோது, சில இடங்களில் எந்திரங்கள் பொருத்தப்படாமல், அறையில் வைக்கப்பட்டிருந்தது. சில பள்ளிகளில் பொருத்தப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது.  

    இதையடுத்து ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்கான செலவுக்கு நிதி தணிக்கை துறை அனுமதி அளிக்கவில்லை. மேலும், இதில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளதால் அதுபற்றி விசாரணை நடத்தவும் தணிக்கை துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த மோசடியின் பின்னணியில் யார், யார் இருந்தார்கள்? என்பது இனிமேல் தான் தெரியவரும். #SanitaryNapkinMachines

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ. 50 லட்சம் காரில் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா போலீஸ் அதிகாரி சித்த ரஞ்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.50 லட்சத்து 87 ஆயிரம் பணம் இருந்தது. அவை புத்தம் புதிய ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டு கட்டுகளாக இருந்தது.

    அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அவர்கள் மலப்புரம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள சந்தைக்குடியை சேர்ந்த சஞ்சையன் (30), மலப்புரம் சதிஷ் (31) என்பது தெரிய வந்தது.

    கோவையில் இருந்து மலப்புரத்திற்கு பணத்தை கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×