search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை"

    ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:
    வாழ்க்கையில் அழகிய தருணங்களை உருவாக்கும் உறவு ‘நட்பு’. ஏதாவது ஒரு காரணத்தால், நட்பில் ஏற்படும் சிறு விரிசல், வளரும் இளம் பருவத்தினரைப் பெரிதும் பாதிக்கும். அதில் இருந்து பிள்ளைகளை மீட்டுக்கொண்டு வர சில வழிகள்:

    சோகமும் தேவையே:

    இளம் வயதில், நட்பின் இழப்பால் ஏற்படும் துக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நட்பின் இழப்பினால், அவர்கள் அழுவதற்கு விரும்பினாலும், பழைய விஷயங்களை அசை போட விரும்பினாலும் அதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எந்த இழப்பையும் உடனடியாக சமாளித்து வெளி வருவது கடினமானது. எனவே, அதற்கான நேரத்தை ஒதுக்கி, காத்திருங்கள். இது எதிர்காலத்தில், அடுத்த அடியை நோக்கி பிள்ளைகளை நகர்த்துவதை எளிதாக்கும்.

    மாற்றுப் பாதையில் மனதைத் திருப்புங்கள்:

    நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும். எதிர்மறையான எந்தக் கருத்தையும் இந்த நேரத்தில் உருவாக்காமல், அவர்களுடனே பயணிக்க முயலுங்கள்.

    அவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்றும் வகையில், சிறுசிறு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். வீட்டில், உங்களுக்குத் தேவையான தகவலை, பிள்ளைகளின் மூலம் பெறுதல், காலண்டரில் தேதி சரி செய்தல், போனில், எண்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற சிறு சிறு விஷயங்களை செய்ய வைப்பதன் மூலம் மாற்றுப் பாதைக்கு கொண்டு செல்லுங்கள். அதன் மூலம் அவர்களின் மனம் தடம் மாறாமல் உங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கச் செய்யலாம்.

    பேச அனுமதியுங்கள்:

    மனம் துவண்டு இருக்கும் நேரத்தில், நம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்வது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த தயக்கத்தைக் குடும்ப உறுப்பினர்கள்தான் தகர்த்தெறிய வேண்டும். நீங்களே சென்று முதலில் பேச்சைத் தொடங்க வேண்டும். இதில், பிள்ளைகளுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்கு ஆதரவு தரும் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதன் மூலம், மன எண்ணங்கள் வெளிப்படுவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிவதுடன், சரியான தீர்வு காணவும் முடியும்.

    புதிய நட்புக்கு உதவுங்கள்:

    ஒரு நட்பை இழந்துவிட்டோம் என்றால் அதனுடன் இந்தப் பயணம் முடிந்துவிடுவதில்லை, அதைத் தாண்டியும் வாழ்க்கை உள்ளது என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். நட்பு முறிந்தாலும், நட்புடனான பழைய நினைவுகள் என்பது என்றும் நம் மனதில் நீங்காது இருக்கும்.

    அதனுடன், நிற்காமல் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல புதிய நட்பு தேவைப்படும். இதுபோன்று புதிய நட்பை அமைக்கும்போது, பெற்றோராக உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த நட்பைத் தேர்வு செய்ய உதவுங்கள். எதிர்காலத்தில், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுவதற்கான சிறந்த வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
    ×