என் மலர்
நீங்கள் தேடியது "Tamil books"
- 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
- நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.
மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.
அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.
தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.
அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.
அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.