search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Chief Minister"

    அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுவதால் ரத்த தானம் செய்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Blooddonation #EdappadiPalaniswami
    சென்னை:

    அக்டோபர் முதல் தேதியில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுவதால் அனைவரும் ரத்த தானம் செய்து விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மனித நேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக விளங்கும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியில் தேசிய தன்னார்வ இரத்ததான நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான நாளின் கருப்பொருள் ‘‘இரத்த தானம் செய்வது மகிழ்ச்சிக்குரியது’’ என்பதாகும்.

    இரத்த தானம் செய்வது மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் ஆகும். இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, எண்ணற்ற இரத்ததான முகாம்களை நடத்திவருவதுடன், இரத்த தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நடத்தி வருகிறது.


    மேலும், தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், ஓர் ஆண்டில் நான்கு முறை இரத்ததானம் செய்த ஆண்கள் மற்றும் மூன்று முறை இரத்த தானம் செய்த பெண்கள், சிறந்த முறையில் பணியாற்றிய இரத்ததான முகாம் அமைப்பாளர்கள், அரசு இரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கெளரவித்து வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகள் மூலம் 9,05,489 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 99 விழுக்காடு இரத்தம் தன்னார்வ கொடையாளர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    தானங்களில் சிறந்தது இரத்த தானம் என்பதால், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இரத்த தானம் குறித்து மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதன் விளைவாக, தன்னார்வ இரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட பொது மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்போம்!!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.   #Blooddonation #EdappadiPalaniswami
    ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ErodeFloods
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பவானி, கருங்கல்பாளையம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பவானியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்கள் வழங்கினர். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    ஈரோடு மாவட்டத்தில் பாவனி, காவிரி ஆற்று வெள்ளத்தால் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7832 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் - 3375 பேர், பெண்கள் - 3133 பேர், குழந்தைகள் - 1324 பேர் ஆவார்கள்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு தேவையான பால், ரொட்டி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகிறது. மேலும் மின்சார வசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1976, முழுவதும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 263, பாதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை - 114, தண்ணீர் புகுந்து மூழ்கிய வீடுகளின் எண்ணிக்கை - 1599.

    வெள்ளத்தால் 806 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மொத்த பரப்பு - 609.69.0 ஹெக்டேர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும்.

    தமிழகத்தில் ஏரிகள் குளங்கள் தூர் வாரவில்லை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1511 ஏரிகள் கண்டறியப்பட்டு அங்கு தூர் வார ரூ.328 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1819 ஏரிகளில் மராமத்து பணிகள் நடந்துள்ளது. ஏரிகளில் பராமத்து பணிகள் செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கான பணிகளை செய்வார்கள்.

    நமது மாநிலத்தில் ஓடும் காவிரி ஆறு சமநிலை பகுதி ஆகும். இங்கு தடுப்பணை கட்டுவது சவாலானது. இருந்தாலும் ஜெயலலிதா காலத்தில் கொள்ளிடம், ஆதனூர், குமாரமங்கலத்தில் 400 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் முயற்சி நடந்தது. ஆனால் அங்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அப்பணி நிற்கிறது.

    பவானி ஆற்றில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பினால் தான் பவானியில் இவ்வளவு வெள்ள சேதங்கள் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். இது தவறு. நான் பவானி பகுதியில் சுற்றி வளம் வந்தவன் தான். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #ErodeFloods
    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். #TamilNaduCM #EdappadiPalanisamy
    சென்னை:

    ரூ.148 கோடியே 45 லட்சம் மதிப்பிலான குடியிருப்புகள், பாலங்கள் உள்ளிட்டவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    பொதுப்பணித் துறையின்கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் காவிரி கழிமுகப் பகுதியில் பருவநிலை மாறுதல்களை தழுவல் திட்டத்தின் கீழ், திருவாரூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    நாகப்பட்டினத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திட்ட செயலாக்க அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து, இத்திட்டப்பணிக்காக பொறியாளர்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கார் மற்றும் 16 ஜீப்புகளையும் வழங்கினார். மேலும் பொதுப்பணித் துறையில் 95 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், பாடிக்குப்பம் திட்டப்பகுதியில், தமிழ்நாடு அரசின் சி‘ மற்றும் டி‘ பிரிவு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின்கீழ் ரூ.69 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 236 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

    வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.70 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 602 அடுக்குமாடி குடியிருப்புகளையும் திறந்துவைத்தார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், நடேசன் கொட்டாய் சவுளுக்கொட்டாய் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தையும், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உயர்மட்ட பாலங்கள் மற்றும் ஒரு பாலத்தையும் திறந்துவைத்தார்.

    மொத்தம் ரூ.148 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

    ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை போராடுவோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது, காவல்துறை மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களைப் பறித்ததற்கு, தார்மீக பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகுங்கள், என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்துக் கேட்டு விட்டுத்தான் பேரவைத்தலைவர் கூட்டிய அலுவல் ஆய்வுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.



    முதல்-அமைச்சர் அறை முன்பு அமர்ந்து, அவர் பதவி விலக வேண்டும் என்று மறியல் செய்தேன். ஆனால், அங்கு என்னை நேரில் சந்தித்து விளக்கம் சொல்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் ஏதோ அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென்று வெளியேறிவிட்டு, இப்படியொரு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அபாண்டமாக கூறியிருக்கிறார்.

    முதல்-அமைச்சரிடம் நேருக்கு நேர், ‘நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்’, என்று கூறி விட்டுதான் வெளிநடப்புச் செய்தேன் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்று 3 தினங்கள் கழித்து, நான் இன்றைக்கு அவர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் செய்தபிறகே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பார்த்து, சமூக விரோதிகள் என்று நா கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் முதல்-அமைச்சர்.

    சொந்த நாட்டு மக்களைப் பார்த்து ‘சமூகவிரோதிகள்’ என்று கூறும் முதல்-அமைச்சருக்கு வேண்டுமானால் இப்படி அபத்தமான குற்றச்சாட்டை சுமத்துவது வாடிக்கையாக இருக்கலாம். ஆனால், மக்கள் இதை மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

    100 நாட்களுக்கு மேல் மக்கள் போராடி வருகிறார்கள். 14 முறை அரசு அதிகாரிகள் பேசியதாக கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரோ, முதல்-அமைச்சரோ ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை எத்தனைமுறை அழைத்துப் பேசினார்கள்.

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பங்களைக் கூட நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏன் முதல்-அமைச்சர் போகவில்லை? ஸ்டெர்லைட் ஆலைக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்?

    ‘அமைதியாக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது’, என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, தாக்க வந்தால் தடுக்கத்தானே செய்வார்கள் என்று ஈவு இரக்கமின்றி பதில் சொல்லும் முதல்-அமைச்சர் அந்தப் பதவியில் இருக்க லாயக்கற்றவர் என்பதால் தான் உடனே பதவி விலகுங்கள் என்று தி.மு.க. மட்டுமல்ல, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகமே கேட்கிறது.

    144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கும் போது, எப்படி ஸ்டாலின் போனார்?, என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் முதல்-அமைச்சர். அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    நூற்றுக்கணக்கான பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்களை காணவில்லை என்று தூத்துக்குடி மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களை மருத்துவமனையில் சென்று சந்திக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறுவது, அவருக்கு இதயத்தில் ஈரமில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

    அரசியல் சட்டத்திற்கு விரோதமாக முதல்-அமைச்சர் பதவியில் உட்கார்ந்து, தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டும், என்பது வேடிக்கையானது. நான் குறிப்பிட விரும்புவது, 13 உயிர்களை பறித்துவிட்டு, பலரது மண்டையை உடைத்துவிட்டு, இன்று வரை காவல்துறையை நள்ளிரவில் வீடுகளுக்குள் அனுப்பி பெண்களை அச்சுறுத்தியும், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைக் கூட அடித்து, உதைத்து கைது செய்யவும் உத்தரவிட்டு விட்டு, சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுவற்கு எந்தத் தகுதியும் முதல்-அமைச்சருக்கு இல்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆகவே, ‘நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும், பதவியை விட்டு விலகுங்கள்’, என்று மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகி சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் மற்றொரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே குரலில் காவல்துறையின் அட்டூழியத்தை அராஜகத்தை, சீருடையில்லாமல் சாதாரண உடையில் காவல்துறையினரை வாகனத்தின் மேல் நிறுத்தி குறி வைத்துச்சுட்டு வீழ்த்திய பயங்கரக் கொடுமைகளைக் கதறி அழுது கொட்டித்தீர்த்தது இன்னும் என் இதயத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

    அப்பாவி மக்கள் மீது இருமுறை துப்பாக்கிச்சூடு நடத்தி, பலமுறை விருப்பம்போல் தடியடி நடத்தி, அங்கு ஒரு போர்க்கள ஒத்திகையை நடத்த உத்தரவிட்டது முதல்-அமைச்சரா? காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யா? அல்லது தலைமைச் செயலாளரா? என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

    ஏதுமறியாத மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து, அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றினார்கள் என்பதற்கு தி.மு.க. ஆட்சி தமிழக மக்களின் பேராதரவோடு அமைந்தவுடன் நிச்சயம் பதில் சொல்ல வேண்டியதிருக்கும். பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட யாரும் சட்டரீதியான நடவடிக்கையில் இருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்பு கிறேன்.

    ஈழத்தில் கொடுங்கோலன் ராஜபக்சே நடத்தியதை நினைவுபடுத்துவதைப் போல, வேண்டுமென்றே ஊருக்குள் புகுந்து கைது செய்யப்பட்டவர்கள், பேரணியில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தலா? என்பது பற்றி அ.தி.மு.க. அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் அனைத்துமே முடங்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பணிகள் மிகமோசமாக தேக்கமடைந்துள்ளன.

    தங்கள் பெற்றோர், உறவுகள் பத்திரமாக இருக்கிறார்களா? என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் வெளிநாட்டு வாழ் தூத்துக்குடி மக்கள் தவிக்கிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யமுடியாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இணையதள சேவை முடக்கத்தை உடனே மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, உடனடியாக இணையதள சேவை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #EdappadiPalanisamy #Resignation #TNChiefMinister 
    ×