என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilians"

    • ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கை அடுக்கிக்கொண்டே போகலாம்
    • ஆளுநரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று பார்த்திபன் பேசினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உலக காசநோய் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். விழாவில் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    விழாவில் பேசிய இயக்குனருர் பார்த்திபன், "இந்த நிகழ்ச்சிக்காக உள்ளே நுழைந்தது முதல் தமிழ் மணந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பாடல்கள் கேட்பது, கலாச்சாரமிக்க விளக்கு ஏற்றுவது என தமிழ் நாட்டில் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதற்காக தமிழக ஆளுநருக்கு என் மரியாதையை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    நான் தமிழில் பேசுவது ஆளுநருக்கு புரியுமா என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழில் பேசலாம் என்று திருஞானசம்பந்தம் சார் சொன்னார். அதனால் அவருக்கு தமிழ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறேன்.

    ஆளுநரிடம் பேசிய வகையில் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.

    கவர்னரை புகழ்ந்த பார்த்திபனுக்கு வன்னி அரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "பெருமதிப்புக்குரிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்.

    திரைத்துறையில் தங்களுக்கென புதிய_பாதை அமைத்து வெற்றி பெற்றவர். வசனங்களிலும் உரையாடலிலும் சமூக அக்கறையோடும் தமிழ் பண்பாட்டை காக்கும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டவர்.

    அந்த ஒத்தசெருப்பு ஒன்றே போதும் தங்களுடையை தனித்துவத்துக்கும் பண்பாட்டுக்கும் சான்று.

    மிகுந்த நம்பிக்கையொளியோடு தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். ஆனால், நேற்றைய ஆளுனர் மாளிகை விழாவில் பங்கேற்று ஆற்றிய உரை அந்த நம்பிக்கையை நொறுக்கி விட்டது.

    ஆளுனர் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறாரா? அல்லது இழிவு படுத்துகிறாரா? இதே ஆளுனர் மாளிகையில் பல நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில்லை. அதை திட்டமிட்டே அவமானப்படுத்துகிறார். கடந்த சட்டப்பேரவையிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதே அவமதித்து வெளியேறியவர் திரு.ரவி அவர்கள்.

    இது தான் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் அழகா? அதே போல,"குழந்தை திருமணம் நல்லது.

    நானும் கூட குழந்தை திருமணம் செய்தவன் தான்" என கடந்த கடந்த மார்ச் 12,2023 அன்று பெருமையோடு பிதற்றினார். இது தமிழ் பண்பாடா?

    அதே போல, கடந்த அக்டோபர் 4,2023 அன்று சிதம்பரத்தில் தலித்துகளுக்கு பூணூல் போடும் விழாவை நடத்தினார். சனாதனத்துக்கு எதிராக புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் செயல்படுவோரை நயவஞ்சகமாக அதிகாரத்தின் மூலமாக ஏமாற்றி பூணூல் அணிவிப்பது தமிழ் பண்பாடா?

    தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றி அறிவித்தாரே இது தமிழ்நாட்டு பண்பாடா? இப்படி ஆளுனரின் தமிழர் விரோதப்போக்கையும் தமிழ் பண்பாட்டு விரோதப்போக்கையும் ஆதாரங்களுடன் அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ஆளுனர் ரவி போன்றோரை புகழ்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு.

    ஆனால்,தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுனருக்கு தங்களைப்போன்ற

    புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
    • பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.

    சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.

    ‘பொங்கல்’, ’தமிழர் திருநாள்’ என்பவற்றை தவிர தை முதல் நாளான இன்றைய தினத்திற்கு தமிழர்களாகிய நாம் நினைத்து, நினைத்து பெருமையும் பூரிப்பும் அடையக்கூடிய மற்றொரு தனிப்பெரும் வரலாற்று சிறப்பும் உள்ளது. #happypongal2019
    மொகலாய மன்னர்களிடமும், வெள்ளயரிடமும் நமது தாய்நாடு அடிமைப்பட்டு கிடந்த வேளையில், டெல்லியை தலைமையிடமாக அமைத்துக் கொண்டுதான் ஆட்சியாளர்கள் நம் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்.

    இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய-அன்றைய காலகட்டத்தில் (தற்போதைய) ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளை நிர்வாக வசதிக்காக பிரித்து ஆட்சி செய்து வந்த வெள்ளையர்கள், இப்பகுதி முழுவதையும் ‘மெட்ராஸ் பிரெசிடென்சி’ (சென்னை மாகாணம்) என்றே அழைத்து வந்தனர்.

    தற்போது, காஷ்மீரில் உள்ளது போல் சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக உதகமண்டலமும் (ஊட்டி), குளிர்கால தலைநகரமாக 'மெட்ராஸ்' என்றழைக்கப்பட்ட தற்போதைய சென்னை நகரமும் இருந்து வந்தது.

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1944-ம் ஆண்டு பகுத்தறிவு தந்தை பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய ஈ.வே.ரா.பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து திராவிடர் கழகத்தைதை விலக்கிக் கொண்டார்.

    1946-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. சென்னை மாகாணத்தின் முதல்வராக த. பிரகாசம் 11 மாதங்கள் பதவியில் இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். 

    15-8-1947-ல்  இந்தியா விடுதலையடைந்த பிறகு சென்னை மாகாணம் ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. 26-1-1950 அன்று இந்தியா குடியரசு நாடான பின்னர் இந்திய குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக சென்னை மாகாணம் மாறியது.  
     
    தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அறிஞர் அண்ணா, 1949-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.க.என்ற தனிக்கட்சியை தொடங்கினார். 1967-ல் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் மூன்றாவது சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 138 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது.

    சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக 6-2-1967 அன்று அறிஞர் அண்ணா பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, ‘தமிழர்களின் கலாச்சார-பண்பாட்டு பெருமையை உலகுக்கு பறைசாற்றும் விதமாக சென்னை மாகாணம் என்ற பெயரை “தமிழ்நாடு” என மாற்றம் செய்ய வேண்டும்’ என்று தந்தை பெரியார் நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வந்தார்.

    இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினார். ஆனால், அவரது கோரிக்கைக்கும், போராட்டத்துக்கும் அன்றைய ஆட்சியாளர்கள் செவி சாய்க்கவில்லை. சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலமாத்தில் தைத்திங்கள் முதல்நாளன்று (14-1-1969) சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர், இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு ‘தமிழ்நாடு’ என்ற தேனினும் இனிய, அழகிய செந்தமிழ் பெயரால் இந்திய மக்களாலும், உலக மக்களாலும் நமது பெருமைக்குரிய மாநிலம் அழைக்கப்பட்டு வருகிறது.

    தமிழர்கள் போற்றிப் பெருமைப்படக் கூடிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ‘தைப் பொங்கல்’ இன்பத் திருநாளில் தான் நிறைவேற்றபட்டது என்ற பூரிப்பான செய்தியை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு... குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வது இன்றைய பொங்கல் திருநாளின் சிறப்பினை மேலும் இரட்டிப்பாக்கும் என்று ‘மாலை மலர் டாட்.காம்’ உறுதியாக நம்புகிறது.

    எங்களது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த-இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!  வாழ்க.. வளமுடன்!! #historicpride #Pongalday #prideforTamilians #Tamilians #happypongal2019
    ×