என் மலர்
நீங்கள் தேடியது "teacher jewelry snatch"
கோவை:
கோவை வடவள்ளி நவவூர் பிரிவை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி சுமதி (வயது 38). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சுமதி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை கண்இமைக்கும் நேரத்தில் பறித்து தப்பிச் சென்றார். இதில் அதிர்ச்சியடைந்த சுமதி இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் பழையூர் அய்யம் பெருமாம்பட்டி, ஊமையர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மனைவி ஆனந்தி (வயது34).
இவர், சேலம் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரியில் பணி முடிந்து மாலையில் ஆனந்தி தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பினார்.மாலை 6 மணிக்கு கருப்பூர், சாமிநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து, ஆனந்தி ஓட்டிய மொபட்டை முந்திச்சென்று குறுக்கே தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்த வாலிபர், ஆனந்தி கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்தான். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும். அதிர்ச்சி அடைந்த ஆனந்தி அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆனந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து, தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.
பெண்களை குறி வைத்து நகை பறிக்கும் மோட்டார் சைக்கிள் கும்பலை போலீஸ் உயர் அதிகாரிகள் களை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் .
பேரையூர்:
திருமங்கலம் சிதம்பரம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் விஜயலட்சுமி (வயது29), தனியார் பள்ளி ஆசிரியை.
சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் விஜயலட்சுமி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி கூச்சலிட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் மறைந்து விட்டனர்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே வழுதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சுகன்யா (வயது29).
இரவில் வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக வந்து சுகன்யா கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பட்டணம்காத்தான் ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (32). திருப்புல்லாணி வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றுகிறார்.
குடும்பத்துடன் மதுரையில் இருந்து ராமநாதபுரம் பஸ்சில் பயணித்தார். ராமநாதபுரம் சர்ச் நிறுத்தத்தில் பஸ்சிலிருந்து இறங்கினர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த உடமைகளில் 8 பவுன் நகை வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டனர். மாயமான நகையின் மதிப்பு ரூ.1 1/2 லட்சமாகும். புகாரின் பேரில் ராமநாதபுரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






