என் மலர்
முகப்பு » teacher scold
நீங்கள் தேடியது "teacher scold"
காரிமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 1 மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து குழந்தைகள் நல ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த அடிலம், சிக்கதிம்மனஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தனின் மகன் கார்த்திக் (வயது15) இரு மாதங்களுக்கு முன்பு, சக மாணவர்கள் முன்னிலையில் பள்ளி ஆசிரியர்கள் திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இரு ஆசிரியர்களையும் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் மட்டும் செய்தது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியர்கள் திட்டியதால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல ஆணையர் ராமலிங்கம் மாணவன் தற்கொலை குறித்து நேற்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ உஷாராணி, காரிமங்கலம் பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியர் திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த மாணவியை அழைத்து சமாதானம் பேசியதுடன், விசாரணையை அவசர அவசரமாக முடித்துக் கொண்டார். மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து குழந்தைகள் நல ஆணையர் பல மணி நேரம் விசாரணை நடத்திய சம்பவம் பள்ளி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிகாரிகளின் விசாரணை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பாயுமா என்பது போகப்போகத் தெரியவரும்.
×
X