என் மலர்
நீங்கள் தேடியது "thai amavasai"
- ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
- தை அமாவாசையன்று இந்த ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
* தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய நீர்நிலை பகுதிகளில் புனித நீராடி, அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
* தை அமாவாசை என்றாலே, திருக்கடையூர் அபிராமி அம்மனும், அந்த அன்னையை தன்னுடைய 100 பாடல்களால் அந்தாதி பாடிய அபிராமி பட்டரும் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்கள். ஏனெனில் தன் பக்தனான அபிராமி பட்டருக்காக, தை அமாவாசை அன்று, வானில் பவுர்ணமி நிலவை தெரியச் செய்து அருளியவர், அபிராமி அன்னை. அந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று திருக்கடையூர் திருக்கோவிலில் வெகு விமரிசையாகநடத்திக் காண்பிக்கப்படும்.
* ராமேஸ்வரம் கடல் தீர்த்தம், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி ஆகிய தீர்த்தங்களில் நீராடினாலும், பாவம் நீங்கி வாழ்வில் ஒளிபரவும் என்பது நம்பிக்கை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில், ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றுவார்கள். மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களால் ஏற்றப்படும் இந்த லட்ச தீபங்களால், அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயம் முழுவதும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும்.
* திருவள்ளூரில் வீற்றிருக்கும் வீரராகவப் பெருமாள், சாலிஹோத்திர மகரிஷி என்பவருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்தார். இந்த நிகழ்வு அந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தை `அமாவாசை தலம்' என்றும் அழைப்பார்கள். தை அமாவாசை அன்று, பக்தர்களுக்கு தேனும், தினை மாவும் பிரசாதமாக வழங்கப்படும்.
* கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை என்ற இடத்தில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அம்மன், சயன கோலத்தில் இருப்பதை தரிசிக்கலாம். இங்கு தை அமாவாசை அன்று, பச்சிலை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த பிரசாதம் வயிற்றுப் பிரச்சினைக்கு அருமருந்தாகும்.
* மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில் இருக்கிறது. தை அமாவாசை அன்று, இத்தல இறைவனான பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
* திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள திருமூர்த்தி மலையில் வீற்றிருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் இணைந்து அருள்பாலிக்கிறார்கள். தைப்பட்டம் சாகுபடியை தொடங்குவதற்கு முன்பு, இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தை அமாவாசை அன்று இங்கு வந்து இறைவனை தாிசித்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்.
* ராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று ராமநாதசுவாமியும், அம்பாளும் அக்னி தீர்த்தத்திற்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கு புனித நீராடல் நடைபெறும். அப்போது ஆலயத்திற்கு வரும் பக்தர்களும் கடலில் நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.
- விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது.
- பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!
பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா?
கீழ்கண்ட கதையை படியுங்கள்
பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை
பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!
அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.
அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். வாசலில் சத்தம். "ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்கஞ் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி." உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.
இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.
பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ "இல்லை போய்வா" என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.
யோவ் அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே, போ முதல்ல இங்கேயிருந்து, தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை"
"ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு"
அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.
அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா...?
பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது. தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.
பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டு போய்விட்டான். அவன் சற்று பின்வாங்க, இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.
பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல... இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.
ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.
எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.
இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம் "வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்" என்று கூற.
"என்ன சொல்கிறாய் சித்திரகுப்தா. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?"
"ஆம் பிரபோ!" என்கிறான் சித்திர குப்தன்.
"இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்"
மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் "இல்லை. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை" என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.
இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.
"இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்" என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.
(நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)
"தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?" என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.
"இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்ஞ் இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?"
அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.
ஆனால் வாயுதேவன் மட்டும் "நீதிதேவா. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான்தான்!" என்றான்.
அதை கேட்ட எமன், "நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்" என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.
அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.
இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)
பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.
- முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
- கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது.
ஆடி, மகாளய மற்றும் தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது.

நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்குகிறது. இதனால் மறைந்த நமது முன்னோர்களுக்கு கன்னியாகுமரியில் தர்ப்பணம் கொடுப்பது சாலச் சிறந்தது என்று பலரும் கருதுகின்றனர்.
அதற்கு காரணம் இங்கு முக்கடல்கள் சங்கமிப்பது தான். இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் இங்கு தான் சங்கமிக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு மற்ற அமாவாசை நாட்களை விட தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையின் போது ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இவர்கள் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் கோவில் கொடைவிழா, கும்பாபிஷேகம், வருஷாபிசேகம் போன்றவற்றுக்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வது வழக்கமான நிகழ்வாக இருக்கிறது.
அத்தகைய புனிதம் நிறைந்த கன்னியாகுமரியில் தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். இதற்காக அவர்கள் முந்தைய நாளிலேயே கன்னியாகுமரிக்கு வந்து விடுவார்கள்.

பின்பு தை அமாவாசை தினத்தில் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். மேலும் பலிகர்ம பூஜை நடத்துவார்கள்.
அமாவாசை நாளில் இங்கு தர்ப்பணம் கொடுக்க வருபவர்கள், கடலில் நீராடிவிட்டு, ஈரத் துணியுடன் கடற்கரையில் உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி இருக்கும் வேத விற்பன்னர்கள் மூலம் பலிகர்ம பூஜையில் ஈடுபடுவார்கள்.

வாழை இலையில் பச்சரிசி, எள், உதிரிப்பூக்கள், தர்ப்பப் புல் மற்றும் மாவு பிண்டம் கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள். பின்னர் இலையுடன் சேர்த்து அவற்றை எடுத்துக் கொண்டு கடலில் சென்று பின்னோக்கி போட்டுவிட்டு கடலில் குளித்து கரையேறுவார்கள்.
கன்னியாகுமரியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கும் தை அமாவாசை தர்ப்பண வழிபாடுகள் மதியம் வரை நடந்தபடி இருக்கும்.
- தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது.
- இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.
தை அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலையிலும் போலீஸ் சார்பிலும் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் தை அமாவாசையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ராமேசுவரம் கோவிலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும்.
- தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில், முன்னோர்களை வழிபடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனாலும் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆடி அமாவாசை அன்று பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்பட்டு வரும் நம்முடைய முன்னோர்கள், மகாளய அமாவாசையில் நம் வீட்டு வாசலில் உணவுக்காக நின்று, நாம் படைக்கும் உணவுகளையும், நாம் கொடுக்கும் தர்ப்பணத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் தை அமாவாசையில் மீண்டும் பித்ருலோகம் புறப்பட்டுச் செல்வதாக ஐதீகம். அதனால்தான் ஆடி, மகாளயம், தை அமாவாசைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை அமாவாசை அன்று, பித்ரு லோகம் புறப்படும் முன்னோர்களுக்கு தாகம் அதிகமாக இருக்கும். எனவே அன்றைய தினமும் நீர்நிலைகளில், நம்முடைய முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள்.
'பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது' என்கிறது கருட புராணம். மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தை யுடன் செய்யும் காரியம் என்பதால் இது 'சிரார்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அவை உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்த தர்ப்பணமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து, நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும் என்கிறார்கள். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார்.
அதனால்தான், வனவாச காலத்தில் இருந்த போது தன் தந்தைக்குச் செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் வைத்து ராமபிரான் செய்தாா் என்கிறது புராணங்கள்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதன்பின் வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்தை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை சூட்ட வேண்டும்.
படத்திற்கு முன்பாக முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து, குத்துவிளக்கேற்றி வைக்க வேண்டும். தை அமாவாசைக்கு முன்தினம் கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை ஊறவைத்து, அதை அமாவாசை அன்று பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைப்பது நல்லது. தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது.
தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. கிழக்கு திசை பார்த்தபடி அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள்.
- நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
தை அமாவாசை தானம் கொடுப்பதற்கு சிறந்த நாள். இந்த நாளில் தானம் செய்வது மற்ற நாட்களை விட பல மடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.
இந்த நாளில் முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் தானம் செய்தால், நம் வீட்டில் இருந்த வறுமை நிலை மாறும். தனம், தானியம் பெருகும். கடன் பிரச்சனையில் இருந்து மீளலாம்.

வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், நம் ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயெல்லாம் தீரும். வாழையடி வாழையென நம் சந்ததி செழித்தோங்கும்.
தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் செய்தாலும் மிகப்பெரிய புண்ணியம். சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
தீபம் மற்றும் விளக்கு தானமாக வழங்கினால், நம்மிடம் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசியை தானமாகத் தந்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும். எவருக்கேனும் நெய் வழங்கி தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். நம் மனதில் இதுவரை இருந்த மனக்குழப்பமும் வருத்தமும் மறையும்.
தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லத்தில் ஒற்றுமையும் அந்நியோன்யமும் நீடிக்கும்.
பழங்கள் தானமாக வழங்கினால் புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும்.

தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைப்பது உறுதி.
தேங்காய் தானமாக வழங்கினால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
- கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
- பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமா வாசை, மஹாளாய அமா வாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறு கிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 740 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்தக் கடல், கோவில் பகுதிகளை சுற்றி
லும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிபெ ருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை திரிவேணி சங்கமம் பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்களுக்காக பலிகர்ம பூஜை மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஏராமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அங்கு தொடங்கி நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிகள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறைகள், கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்பு கார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரை யோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மதுரையில் வைகை கரை யோர பகுதிகள், சோழவந் தான் அருகேயுள்ள திருவே டகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந் துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
- அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
- அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.