search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thavarchand Khelat"

    • ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை.
    • நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 'மூடா' நில முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த கவர்னர், கடந்த மாதம் 17-ந் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் அந்த மனு மீது விரிவாக விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா, சித்தராமையாவின் மனு நிராகரிக்கப்படுவதாகவும், கவர்னரின் உத்தரவு செல்லும் என்றும் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு காணொலி மூலம் ஆஜராகி இருந்த சித்தராமையாவின் வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, இந்த தீர்ப்புக்கு 2 வாரங்கள் தடை விதிக்குமாறு கோரினார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி, நான் வழங்கிய தீர்ப்புக்கு நானே தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

    தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தீர்ப்பு பற்றி தெரியவந்ததும் அவர் உடனடியாக தனது காவேரி இல்லத்துக்கு புறப்பட்டார். மேலும் மூத்த மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.

    முதல்-மந்திரி சித்தராமையா ஐகோர்ட்டு தீர்ப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே முதல்-மந்திரி சித்தராமையா பதவி விலக கோரி எதிர்கட்சிகள் விலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா பா.ஜனதாவினர் சமூகநீதி, ஏழை மக்களுக்கு எதிரானவர்கள். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.

    ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் நகலை நான் முழுமையாக வாசிக்கவில்லை. அதை படித்து பாா்த்த பிறகு நான் விரிவாக உங்களுடன் பேசுகிறேன். பா.ஜனதாவினர் எனக்கு எதிராகவும், எனது அரசுக்கு எதிராகவும் சதி செய்கிறார்கள்.

    நான் எந்த தவறும் செய்யவில்லை. ஐகோர்ட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கிய காரணத்தால் நான் தவறு செய்துவிட்டேன் என்று அர்த்தம் இல்லை. ஐகோர்ட்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் 17ஏ பிரிவின்படி மட்டுமே விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. எனக்கு எதிராக முழு விசாரணைக்கு அனுமதி வழங்கவில்லை.

    நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?. நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். மத்திய மந்திரி குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது. அவர் ராஜினாமா செய்துவிட்டாரா?. இது அவருக்கு பொருந்தாதா?. இதுகுறித்து அவரிடம் போய் கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
    • டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்த முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட கவர்னர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை, மத்திய மந்திரி குமாரசாமி, பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் முருகேஷ் நிரானி, சசிகலா ஜோலே, ஜனார்த்தன ரெட்டி உள்பட 4 பேர் மீதான முறைகேடு வழக்கு விசாரணைக்கு லோக் அயுக்தாவுக்கு அனுமதி வழங்குமாறு கவர்னரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

    மேலும் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்தும் குமாரசாமி உள்பட 4 பேர் மீதான முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வழங்க வலியுறுத்தினர்.

    இதனால் கோபம் அடைந்த கவர்னர், கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர லோக்அயுக்தா அனுமதி கேட்டுள்ள விவரங்கள் பற்றி அறிக்கை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து கவர்னர், தன்னிடம் உள்ள வழக்குகளுக்கு லோக்அயுக்தா அனுமதி கோரிய விஷயம் அரசுக்கு எப்படி தெரியும் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில், பெங்களூருவில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள அர்க்காவதி லே-அவுட் நில முறைகேடு தொடர்பாக 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கெம்பண்ணா ஆணையத்தின் அறிக்கையின் நகலை வழங்கும்படி தலைமைச் செயலாளருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் சமயத்தில் முதல்-மந்திரியாக சித்தராமையா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கவர்னர் அடுத்தடுத்து பல்வேறு விஷயங்களுக்கு அறிக்கை வழங்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதால் அரசுக்கும், கவர்னருக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது. கவர்னர் அனுப்பும் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கக்கூடாது என்று முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மந்திரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கெலாட்டை திரும்ப அழைக்குமாறு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொடர்ந்து கர்நாடக அரசு, கவர்னர் இடையேயான மோதல் விவகாரம் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ×